Thursday, April 2, 2026

பி.கே.ஆர். தேசிய உதவித் தலைவர் தேர்தலில் களம் இறங்குகிறாரா? “பொறுத்திருந்து பாருங்கள்” என்கிறார் மறுதேர்தலில் வென்ற மணிவண்ணன்!!

மக்கள் நீதி கட்சி பி கே ஆர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் நாள் இடம்பெற்றது.

அப்பொழுது ஜெம்புல் தொகுதிக்கும் நடந்த தேர்தலில் தொகுதித் தலைவர் பதவியை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் கோவி. மணிவண்ணன்.

பி கே ஆர் கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளருமான மணிவண்ணன் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சித் தேர்தல் நடைபெறுகின்ற பொழுது, ஒவ்வொரு மாநிலமாக களம் இறங்கி வந்தார்.

சிலாங்கூர் பேராக் மாநிலங்களில் கடந்த காலத்தில் களமிறங்கிய மணிவண்ணன், இந்த முறை சொந்த மாநிலமான நெகிரி செம்பிலானில் சொந்த ஊர் இடம்பெற்றுள்ள ஜெம்புல் தொகுதியில் அதிரடியாக களம் இறங்கினார்.

ஆனாலும், Azizah Salim Shah-விடம் தோல்வியடைந்தார் மணிவண்ணன்.

பின்னர்தான் தெரியவந்தது பெஜுவாங்-Pejuang கட்சியைச் சேர்ந்தவர் Azizah Salim Shah என்னும் விவரம்.

இதனால் ஜெம்புல் தொகுதி பி கே ஆர் கட்சியினரிடையே அதிர்ச்சியும் ஏமாற்றமும் நிலவின. தவிர இது குறித்து கட்சி மேலிடத்தில், குறிப்பாக தேர்தல் நடத்தும் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.

செலாயாங், சீலாம், பாசிர் சாலாக் ஆகிய தொகுதிகளிலும் பி கே ஆர் கட்சித் தேர்தலில் வேறுபல முறைகேடுகள் நடைபெற்றதாக அந்தந்த தொகுதிகளின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் ஜேம்புல் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கும் நேற்று மறு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த மறுதேர்தலில் மணிவண்ணன் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின்போது, மணிவண்ணன் 571 வாக்குகளை அள்ளிய வேளையில், இவரை எதிர்த்து களம் கண்ட அஸ்ரி அப்துல்லா 229 வாக்குகளையும் கே மாரியப்பன் வெறும் 39 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.

தேசிய அளவில் பி கே ஆர் கட்சிக்கு நடைபெற்றுவந்த தொகுதித் தேர்தல் தொடர்பில், களம் இறங்கிய தலைவர்கள் ஏறக்குறைய இரு மாதங்களாக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜெம்புல் தொகுதிக்கு நடைபெற்ற நேற்றைய மறு வாக்குப்பதிவின்போது வெற்றி பெற்றுள்ள மணிவண்ணன், கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்டும் விதமாக ஒருங்கிணைந்து ஒருமித்து தாங்கள் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் ஆள்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு கட்சி கொள்கைக்கு ஒவ்வாத நடவடிக்கைகளை தவிர்த்து உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சி உறுப்பினர்களிடம் தொகுதி மட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் அதற்கு கட்சி உறுப்பினர்கள் நியாயத்தின் பக்கம் நின்று கட்சியின் எதிர்காலம் கருதி தன்னுடைய அணி சார்ந்து போட்டியிட்ட அனைவரையும் வெற்றிபெற வைத்துள்ளனர் என்று பெருமிதத்துடன் குமரியிடம் தெரிவித்தார்.

இந்த வெற்றியை ஆதாரமாகக் கொண்டு ஏறக்குறைய இன்னும் 3 வார காலத்தில் கட்சிக்கு நடைபெற இருக்கின்ற தேசிய பொறுப்பிற்கு, குறிப்பாக தேசிய உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, “காத்திருங்கள்: பொறுத்திருந்து பாருங்கள்” என்று சூசகமாக பதில் தெரிவித்தார்.

எது எப்படியோ பி.கே.ஆர். ஜெம்புல் தொகுதி கட்சி உறுப்பினர்களிடையே மணிவண்ணன் தரப்பினர் வெற்றி உலா வருகின்றனர்.

இதன் தொடர்பில் தன்னுடன் ஒரு முகமாக இணைந்து களம் கண்ட அணியினருக்கும் தங்களை ஆதரித்த கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக மணிவண்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை