Monday, May 25, 2026

கற்றலும் இல்லை; கேட்டலும் இல்லை! -குயில் செல்வராஜ் சமூக ஆதங்கம்!

சமூகத்தில் வாசிக்கும் வழக்கம்தான் சன்னம் சன்னமாக அற்று வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்; ஆனால் கேட்கின்ற பழக்கமும் சமூகத்தில் இல்லாமல் போவதை எண்ணி மிகவும் வருந்துவதாக ஜெயபக்தி நூல் நிறுவனத்தின் தலைவரும் தமிழ்ப் பாடநூல் வெளியீட்டாளருமான டத்தோ டாக்டர் குயில் செல்வராஜ் தன் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் நேற்று வெளிப்படுத்தினார்.

ஜெயபக்தி நிறுவன வளாகத்தில் நேற்றும் நேற்றைய முன்தினமும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான பேச்சரங்கம் நடைபெற்றது. பேச்சுக்கலையை வளர்க்கும் ‘Toastmasters’ அமைப்பின் சார்பிலும் ‘பித்தாரா’ சமூக நல அமைப்பின் ஆதரவிலும் ஏழு தமிழ் பள்ளிகளை சேர்ந்த 63 மாணவர்களுக்கான பேச்சுக்களை பயிற்சி நடைபெற்றது.

சிகாம்புட் தமிழ்ப் பள்ளி, புனித ஜோசஃப் தமிழ்ப் பள்ளி, தம்புசாமி தமிழ்ப் பள்ளி, செந்தூல் தமிழ்ப் பள்ளி, ஃபிளெட்சர் தமிழ்ப் பள்ளி, செர்டாங் தமிழ்ப் பள்ளி, எடின்பரோ தோட்ட தமிழ்ப் பள்ளி ஆகிய தமிழ் பள்ளிகளின் சார்பில் பேச்சுக்களில் நாட்டமுள்ள 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பேச்சுக்கலை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கும் முதற்கண் பாராட்டு தெரிவித்தார் செல்வராஜ்.

இன்று விடுமுறை நாள்; வீட்டில் ஓய்வு எடுப்பதற்கு பதிலாக பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு நேரத்தை ஒதுக்கி இங்கு திரண்டு இருக்கின்ற பெற்றோர்கள் சமூகத்தின் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர்களை மெச்சினார்.

அந்த நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கும்முன் சிறப்புரை ஆற்றிய டத்தோ செல்வராஜ், சமூகத்தில் கற்றலின்மீது நிலவும் அக்கறையற்ற போக்கு குறித்தும் தன்னுடைய பேராதங்கத்தை வெளிப்படுத்தினார்.

எதிலும் ஈடுபாடு இல்லாமல் கடந்து போகின்ற தன்மை ஆபத்தானது என்று தெரிவித்த அவர், மின்னல் வானொலியில் முன்பு நடைபெற்ற ஒரு நேர்காணல் குறித்து சுவையான சம்பவத்தையும் எடுத்துரைத்தார்.

அது ஒரு தோட்டப்பட்டாளியுடன் நடத்தப்பட்ட நேர்காணல்; அதுவும் பெண் பாட்டாளி;

சம்பந்தப்பட்ட தோட்டப்பட்டாளி, தான் தோட்டத்தில் பிறந்து தோட்டப்புற சூழலிலேயே வாழ்ந்து வருவதாகவும் குறைந்த சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதாகவும் அந்தி நேரத்தில் வெளிக்காட்டு வேலைக்குச் செல்வதாகவும் அதன்வழி ஏறக்குறைய 300 வெள்ளிவரை கூடுதலாக ஊதியம் கிடைப்பதாகவும் சொன்ன பொழுதெல்லாம் அனைத்திற்கும் “நல்லதுங்க”, “நல்லதுங்க” “மகிழ்ச்சிங்க” என்று அவரைப் பேட்டிகண்ட அறிவிப்பாளர் நேரடி ஒலிபரப்பில் சொல்லிவந்த நிலையில், ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாக சொன்னபோதும் “அப்படிங்களா?, நல்லதுங்க”” என்று சொன்ன தகவல் நேரடியாக ஒலிபரப்பானது.

ஒருவர் சொல்லுகின்ற கருத்தை உள்வாங்காமலும் கருத்தின் தன்மையை உணராமலேம் மேம்போக்காக இருந்தால் இப்படித்தான் நேரும்.

அதற்கு ஏற்ப இன்றைய சூழலில் பொதுவாக அனைவரும் விவேக திறன் பேசியில் ஊடாடுவதையும் கருத்தாடுவதையும் பெரு வழக்காக கொண்டிருப்பதால் படிப்பதிலும் பிறர் சொல்வதை கேட்பதிலும் நாட்டம் கொள்ளாமல் தனி உலகத்தில் தன்னந்தனியே பயணிக்கின்றனர்-வாழ்கின்றனர் என்று இன்றைய சமூக நிலைகுறித்து டத்தோ செல்வராஜ் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஒருவன் கற்கா விடினும் சான்றோர் சொல்வதை கேட்டாலே அம்மனிதன் செம்மையுறத் திகழலாம் என்பதைத்தான் வள்ளுவரும் “கற்றிலன் ஆயினும் கேட்க” என்று சொல்லி இருக்கிறார்;

பிரிதோர் இடத்தில் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்றெல்லாம் அவர் எடுத்துரைத்துள்ளார்.

அப்படி இருந்தும் வாசிப்பில் நேசிப்பு இல்லை என்றாலும் செவி செல்வத்தை பயன்படுத்துவதிலும் நம் மக்கள் பாராமுகமாக இருப்பது எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்று கல்வியாளருமான டத்தோ செல்வராஜ் தன்னுடைய சமூக ஆதங்கத்தை பளிச்சென வெளிப்படுத்தினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை