
வீட்டிற்கொரு தொழில்முனைவரை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் நெகிரி செம்பி-லான் மாநில இந்திய வர்த்தக தொழிற்சங்கம்-NSICCI முனைப்புடன் செயல்படுவதாக அதன் தலைவர் திருநாவுக்கரசு முத்தையா தெரிவித்தார்.
NSICCI-இன் 38-ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று மேத் திங்கள் 22-ஆம் நாள் சிரம்பான் சுங்கை ஊஜோங் ரோயல் கிளப்பில் நடைபெற்ற போது, அதில் தலைமை உரை ஆற்றிய மு.திருநாவுக்கரசு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய அமைப்பான மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளனத்துடன்-MAICCI இணைந்தும் மைக்கியின் வழிகாட்டலுடனும் செயல்படுகின்ற நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக சங்கம், நெகிரி மாநிலத்தின் வர்த்தக சமூக மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் அதேவேளை, மைக்கி ஒத்துழைப்புடன் தேசிய அளவிலும் இந்திய வர்த்தக சமூகத்தின் மறுமலர்ச்சியில் அக்கறைக் காட்டுவதாக மு. திருநாவுக்கரசு மேலும் குறிப்பிட்டார்.

தொழில் முனைவோர்-கூட்டுறவு மேம்பாட்டுத் துறை சார்பில், மலேசிய இந்திய வர்த்தகர்-தொழில் முனைவோருக்காக தேசிய அளவில் ஒதுக்கப்பட்டுள்ள வெ.220 மில்லியன் குறைந்த வட்டி கடன் ஒதுக்கீட்டில், நெகிரி செம்பிலான் வர்த்தகர்கள் வெ.20 மில்லியன்வரை பெற முனைப்பு காட்ட வேண்டும்; அதே உத்வேகத்துடன் தத்தம் தொழில் வளர்ச்சியிலும் அக்கறைக் காட்ட வேண்டும் என்று நெகிரி மாநில வர்த்தக சமூகத்தினரை திருநாவுக்கரசு கேட்டுக் கொண்டார்.
அதைப்போல தெக்குன் கடன் வசதியைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் 5.2 மில்லியன் வெள்ளிவரை நெகிரி மாநில இளந்தொழில்முனைவோரும் வியாபாரிகளும் கடன் வசதி பெற்றுள்ளனர் என்று தெரிவித்த திருநாவுக்கரசு, “தெக்குன் கடன் வசதித் திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு இலட்சம் வெள்ளி வரைதான் கடன் வழங்கப்படுகிறது; பொருளாதார நலிவு-பொருள் விலையேற்றம் கண்டுள்ள தற்போதைய நிலையில், தெக்குன் கடன் வசதியை வெ.2.5லட்சம்வரை உயர்த்திட மைக்கி தலைவர் உதவ வேண்டும்” என்றும் திருநாவுக்கரசு கோரிக்கை வைத்தார்.

முன்னதாக, செயலாளர் நடராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
மைக்கி தலைவர் டத்தோசிறீ நா.கோபாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
நெகிரி செம்பிலான் மாநில இந்திய வர்த்தக சங்கத்தினர், தலைவர் மு. திருநாவுக்கரசு தலைமையில் சிறப்பாக செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
மலேசிய இந்திய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கான கல்வியை அடுத்து வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மைக்கி துணைத் தலைவர் ஏடிகே ராஜா, மலாக்கா இந்திய வர்த்தக-தொழில் சங்கத் தலைவர் ஆர். ராஜசேகரன், நெகிரி மாநில துணைச் செயலாளர் வி.கலையரசி, பொருளாளர் எஸ்.ஹேமநாதன், திருமதி சுமதி உள்ளிட்ட நிருவாகி யாரும் வர்த்தகர்களும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.
நாட்டுப் பண்ணுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மைக்கி மேநாள் தலைவர் ‘நினைவில் வாழும்’ தான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரனுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


