
“மலேசியஇந்திய சமூகம் எதிர்கொண்டுள்ள நீண்டகால பிரச்சினைகள் உண்மையானவை; இவை கட்டுக்கதைகள் அல்ல; ஆழமாக வேரூன்றியுள்ள இந்த சிக்கல் தொடர்பில், அவசர கூட்டு நடவடிக்கை தேவை என்பதை அனைத்து இந்தியக் கட்சிகளும் கூட்டணி எல்லையைக் கடந்து எண்ணிப் பார்க்க வேண்டிய தருணம் இது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-MAP மற்றும் HINDRAF இயக்கத் தலைவர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
“நாடாளுமன்ற-சட்டமன்ற பதவி அல்லது எந்த அரசாங்கம் அமைந்தாலும் சலுகை பெறுவது என்பதையெல்லாம் கடந்து நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதில் அக்கறைக் கொண்டுள்ளோம்; இன்னும் 32 ஆண்டுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க 100வது மெர்டேக்கா கொண்டாட்டம் நெருங்கிவரும் இந்த வேளையில், மலேசியாவின் முன்னேற்றத்தில் இந்திய சமூகமும் பெருமையுடன் இடம்பெற பாடுபடுவதைக் கடமையெனக் கொண்டுள்ளோம்”.
நாட்டின் வளர்ச்சியில் இந்திய சமுதாயமும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, எதிர்கால தலைமுறை கண்ணியத்துடன் நடத்தப்படுதல், சம உரிமையைப் பெறுதல், அனைத்து மலேசியர்களுடனும் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்வதெற்கெல்லாம் நாம் அனைவரும் ஒன்றாகக் களம் காண்போம் என்று பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹிண்ட்ராஃப் இயக்கம், எம்.ஏ.பி. மற்றும் இந்திய சமுதாய நலம்நாடும்அனைத்து அரசியல் கட்சிகள்-அரசு சாரா அமைப்புகள் யாவும் தனிப்பட்ட விருப்பு-வெறுப்பை ஒதுக்கிவிட்டு, ஒன்றிணைந்து ஒரு வட்டமேசை மாநாட்டை நடத்திடமுன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த முயற்சியை சீராக மேற்கொள்ள ஒரு கூட்டுச் செயலகத்தை உருவாக்கி, அதன் மூலம், பின்வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்:
- இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை நிவர்த்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் 13-ஆவது மலேசிய பெருந்திட்டத்தில் குறைந்தபட்சம் வெ.25 பில்லியனை ஒதுக்கீடு செய்ய ஒருங்கிணைந்து குரல் கொடுத்தல்;
- மெர்டேக்காவிற்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட மற்றும் இடப்பெயர்வுக்கு உள்ளான கோயில்களின் பாதுகாப்பையும் நம் கலாச்சார-ஆன்மீக-பாரம்பரியத்தையும் உறுதி செய்தல்;
- வாக்குரிமை இழந்த இந்தியர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதுடன் தற்போதைய இடைவெளியை நிவர்த்தி செய்தல்;
அரசியல் வேறுபாட்டையும் தனிப்பட்டோரின் செல்வாக்கையும் கடந்து, இந்திய சமுதாயத்திற்கு உண்மையான தீர்வை வழங்கக்கூடிய ஒன்றுபட்ட தலைமைக்காக இந்திய சமூகம் ஏங்குகிறது. எனவே, மோதலுக்குப் பதிலாக ஒருமித்த கருத்தையும் பிரிவினைக்கு பதிலாக ஒற்றுமையையும் குறுகிய நலனுக்கு பதிலாக எதிர்காலம் கருதிய நீண்டகால நன்மையையும் இலக்காகக் கொண்டு இந்தியத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டிய தருணமாக இது அமையட்டும் என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


