மக்கள் நீதிக்கட்சியில் (பிகேஆர்) தற்பொழுது நடைபெறுகின்ற உட்கட்சி தேர்தல் மூலம் பிகேஆர் தேசிய துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி ‘கட்டம் கட்டப்படும்’ அதேவேளை ‘மறுமலர்ச்சி இளவரசி’யும் கட்சியின் தலைவர் அன்வாரின் மகளுமான நூருல் இஸ்ஸா, கட்சியின் தேசியத் தலைவராகவும் நாட்டின் முதல் பெண் பிரதமர் வேட்பாளராகவும் ஒருசேர உருவாகிறார்.

நாட்டை ஆளும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையேற்றுள்ள மக்கள் நீதிக் கட்சிக்கு, இது உட்கட்சி தேர்தல் பருவம்.
கடந்த மாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்ற தொகுதிகளுக்கான தேர்தலில் அதிகமான குழப்பமும் கட்சித் தேர்தல் குறித்த முடிவில் வியப்பும் மேலிட்டன.
குறிப்பாக தொகுதித் தேர்தல் முடிவில் வெளிப்படைத்தன்மை அடியோடு அற்றுவிட்டது; இதற்கு சரியான சான்று பேராக் மாநிலத்தின் Lenggong தொகுதித் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாக குழு உறுப்பினர் 15 பேரில் 14 பேரும் தொகுதி துணைத் தலைவரும் என 15 பேர் தத்தம் பொறுப்புகளை துறந்து பி கே ஆர் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
கடந்த மாதம் நடைபெற்ற தொகுதி தேர்தலில், பி கே ஆர் கட்சிப் பதவியில் இருந்தவர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும் அல்ல; சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட புதிது புதிதாக அறிமுகமான தலைவர்களிடம் தோற்றுப் போனதை நாடு முழுக்க காண முடிந்தது.
தோற்ற அனைவரும் பி கே ஆர் கட்சியின் தேசிய துணைத் தலைவரும் பொருளாதாரத் துறை அமைச்சருமான ரஃபிஸி ரம்லிக்கு வேண்டியவர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொல்லி வைத்தாற்போல ரபிஸி ஆதரவாளர்களான பெரும்புள்ளிகள் தோல்வி அடைந்ததன் பின்னணிக்கு இப்பொழுதுதான் பதில் கிடைத்துள்ளது.
ரபிசி ரம்லி வகிக்கும் தேசிய துணைத் தலைவர் பதவியில் தன் மகள் நூருல் இஸ்ஸாவை அமர்த்துவதற்காக அன்வார், முழு மூச்சில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
மூன்று தினங்களுக்கு முன்புவரை, ரஃபிஸி ரம்லிக்கு பதிலாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோனை பிகேஆர் தேசிய துணைத் தலைவராக கொண்டுவர அன்வார் முயற்சி செய்கிறாரோ என்ற கருத்துதான் நிலவியது.

இப்பொழுதுதான் தெரிகிறது,¡ இந்த நடவடிக்கை யாவும் தன்னுடைய மகளும் பி கே ஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவருமான நூருல் இஸ்ஸாவை முன்னிலைப்படுத்துவதற்காக கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமுமே காய் நகர்த்துகிறது என்று;
ஏறக்குறைய கடந்த இரு மாதங்களாக உட்கட்சித் தேர்தல் குறித்து நாடு முழுவதும் பரபரப்பு நிலவிவந்த நிலையில் பி கே ஆர் தேசியத் தலைமையே நசித்தியோனை தேசிய துணைத் தலைவராக முன்னிலைப்படுத்துவதற்கு காய் நகர்த்துகிறதோ என்றுதான் பொதுவாக அரசியல் வட்டத்தில் கருதப்பட்டது; ஊடகத்திலும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதற்குத் தோதாக பிரதமர் அன்வாரின் மகளும் பினாங்கு மாநிலத்தின் Permatang Pau மற்றும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள பந்தாய் டாலம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளின் முன்னாள் உறுப்பினருமான நூருல் இஸாவும் இந்த முறை, தான் தேசியத் உதவித் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
கடந்த 2022, கட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார் நூருல்.
அதே ஆண்டு பிற்பகுதியில் நவம்பர் 19ஆம் நாள் நடைபெற்ற 15-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பினாங்கு Permatang Pau நாடாளுமன்றத் தொகுதியில் களம் இறங்கிய நூருல், பாஸ் கட்சியிடம் 5,272 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியை தவறவிட்டார்
இந்த நிலையில் கட்சியில் நியமன பொறுப்பு ஏற்றிருந்தார் நூருல்; தேசிய உதவித் தலைவராக கட்சித் தலைமையால்(தன் தந்தையால்) நியமனம் செய்யப்பட்டிருந்தார் நூருல் இஸ்ஸா.
ஏறக்குறைய கடந்த மூன்று ஆண்டுகளாக அமைதியாக காணப்பட்ட நூருல் இந்த முறை உதவித் தலைவர் பதவிக்கு நேரடியாக போட்டியில் இறங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், மக்கள் நீதி கட்சியின் இரண்டாம் நிலை தலைவர் ரஃபிசி ராம்லியின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க தோல்வியுற்றது,, மலேசிய அரசியல் வட்டாரத்தில் புருவத்தை உயர்த்த வைத்தது .
ஒன்று மட்டும் தெரிந்தது; ஏதோ ஓர் இலக்கை நோக்கி கட்சிக்குள் கமுக்கமாக காய் நகர்த்தப்படுகிறது என்று;
மூன்று தினங்களுக்கு முன் மே 6-ம் நாளில் பி கே ஆர் கட்சியின் பேராக், மலாக்கா, பினாங்கு, பகாங், ஜோகூர், கெடா, கிளந்தான் மாநிலங்களின் மகளிர் தலைவியரும் தொகுதித் தலைவர்களும் பி கே ஆர் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸ்ஸா போட்டியிட வேண்டும் என்று அறிக்கைவிட்டு, அந்த சூட்டோடு நூருல் இஸ்ஸாவின் பக்கம் அணிவகுக்கத் தொடங்கினர்.
மலாக்கா மாநிலத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் மஸ்ஜித் தானா தொகுதியைத் தவிர மற்ற ஐந்து தொகுதித் தலைவர்களும் கையொப்பமிட்டு நூருல் இசாவிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரும்(மாநில முதல்வர்) 2022 பிகேஆர் கட்சித் தேர்தலில் 4 உதவித் தலைவர்களில் அதிக பெரும்பான்மையில் வென்றவருமான டத்தோஸ்ரீ அமிருடீன் ஷாரியும் நூருல் ஈசா துணைத்தலைவர் ஆவதை மூன்று தினங்களுக்கு முன்பே ஆதரித்த நிலையில் இப்பொழுது மாநிலத்தில் 18 தொகுதித் தலைவர்கள் நூருல் இஸ்ஸா பக்கம் அணிவகுத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்; இதைப்போல ஜோகூர் மாநிலத்திலும் 22 பி கே ஆர் தொகுதி தலைவர்களும் நூருல் இஸ்ஸா தேசிய துணைத் தலைவராக வரவேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்; அடுத்து சபா மாநில பி கே ஆர் கட்சியினரும் நூருல் பக்கம் சாய்ந்துள்ளனர்.

பி கே ஆர் கட்சியில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த ஐயத்திற்கும் குழப்பத்திற்கும் இப்பொழுதுதான் விடை தெரிய வருகிறது;
அன்வாருக்குப் பின், கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக நூருல் இஸ்ஸா உருவாக்கப்படுகிறார் என்னும் கமுக்க நடவடிக்கைதான் அது;
அதேவேளை நாட்டின் அடுத்த பெண் பிரதமராகவும் நூருல் இஸ்ஸா ஒருசேர உருவாகிறார் என்ற எதிர்பார்ப்பும் தேசிய அளவில் நிலவுகிறது.
முன்னதாக, கட்சியின் தேசியத் தலைவர், தேசிய துணைத் தலைவர் ஆகிய இரு பதவிக்கும் தேர்தல் நடத்தப்படாமல்-போட்டியின்றி இப்பொழுது இருக்கிற தலைவர்களே அந்தந்த பதவியில் தொடர வேண்டும் என்று கருத்து நிலவியது; வெளிப்படையாகவும் பேசப்பட்டது.
அதேவேளை, 2028 கட்சித் தேர்தலின் போது, தேசியத் தலைவர் பதவியை அன்வார் இப்ராகிம் தற்காக்க மாட்டார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
2028 கட்சித் தேர்தலின்போது, தான் தேசியத் தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்தால், அந்த நேரத்தில் கட்சியை வழி நடத்துவதற்கு ஏதுவாகத்தான் இந்த முறை நூருல் இஸ்ஸா, எண்பது வயதை எட்டுகின்ற அன்வாரால் முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது
பி கே ஆர் தேசியத் தலைமையின் முடிவு, குறிப்பாக தலைவரும் பிரதமருமான அன்வார் இப்ராகிமின் முடிவு இதுவாக இருந்தால் அதை முன்னமே திட்டமிட்டு எல்லோரும் ஒருமுகமாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அறிவிப்பு செய்து, யாருக்கும் எந்த பாதிப்பும் காயமும் வருத்தமும் ஏற்படாத வகையில் நல்லபடியாக வெளிப்படைத் தன்மையோடு நடந்திருக்கலாம்

அதையெல்லாம் விடுத்து தனக்கு அடுத்த நிலையில் இருந்தவரை.. , எல்லா வகையிலும் தனக்கு தோள் கொடுப்பவரை.. , பொருளாதார அமைச்சராக இருக்கும் ரஃபிஸி ரமலியை இந்த அளவுக்கு காயப்படுத்தாமல் நல்ல விதமாக காய்நகர்த்த அன்வார் ஏன் தவறினார் என்பது வியப்பாக இருக்கிறது.
கட்சியின் தேசியத் தலைவருக்கும் தேசிய துணைத் தலைவருக்கும் போட்டி இருக்கக் கூடாது என்று அறிவித்துவிட்டு;
தன் மகளும் நடப்பு உதவி தலைவருமான நூருல் இசாவை தேசிய உதவித் தலைவருக்கு போட்டியிடுவதாக அறிவிப்பும் செய்யவைத்துவிட்டு;
தொகுதித் தேர்தலில் ரஃபிசியின் ஆதரவாளர்கள் எல்லோரையும் தோல்வியடைய செய்துவிட்டு;
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கட்சி மட்டத்திலும் தேசிய அரசியல் வட்டத்திலும் ஒரு குழப்பமான.. , ஐயத்திற்கிடமான தகவலை ஏற்படுத்திவிட்டு;
தேசிய துணைத் தலைவர் பதவிக்கு ரஃபிசியை எதிர்த்து சைஃபுதீன் நசத்தியோன் போட்டியிடுவாரா மாட்டாரா?;
அப்படியே போட்டியிட்டாலும் சைஃபுடின் நசித்தியோன் வெற்றி பெறுவாரா?
கட்சித் தலைவர் அன்வார் உண்மையில் யாரை விரும்புகிறார்?
என்றெல்லாம் ஏராளமான ஐயத்தையும் குழப்பத்தையும் கட்சியிலும் பொது வெளியிலும் பரவ விட்டுவிட்டு.. ,
இப்பொழுது திடீரென்று நூருல் இஸ்ஸா துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிப்பும் காய் நகர்த்தலும் இடம்பெறுவது எந்தவிதமான ஜனநாயகம் என்று தெரியவில்லை!

பி கே ஆர் கட்சியின் தேசிய உயர் மட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் தொடர்பில் வேட்பு மனு தாக்கல் செய்யும் முறை இணைய வழி தொடங்கிவிட்டது.
ஒரு தேசிய துணைத் தலைவர், நான்கு தேசிய உதவித் தலைவர்கள், 20 பேர் கொண்ட மத்திய செயற்குழு ஆகியவற்றிற்கு போட்டியிடுவோர் தங்களின் வேட்பாளர் படிவத்தை இணையவழியே தாக்கல்செய்ய தொடங்கியுள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்த நடைமுறை இன்று மே 9 வெள்ளிக்கிழமை நள்ளிரவு முடிவுக்கு வரும்பொழுது எந்தெந்தப் பிரிவுக்கு எத்தனை பேர் போட்டியிடுகின்றனர் என்ற நிலைமை துல்லியமாக தெரியவரும்.
இந்த நிலையில், தேசிய துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ரஃபிசி ரம்லி அறிவித்துவிட்டார்.
இதனால் உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டார் என்று ஊகிக்க முடிகிறது.
காரணம் கட்சித் தலைவர் அன்வாரின் கண் அசைவிற்கு ஏற்பவும் அன்வாரியின் ஆள்காட்டி விரல் சுட்டுவதற்கு இசைவாகவும் சிறிதும் பிறழாமல்- பிசகாமல் நடந்து கொள்ளக் கூடியவர் சைஃபுடின் நசத்தியோன்.
அதனால்தான் கடந்த முறை கட்சித் தேர்தலில் இதே சைஃபுடின் நசித்தியோன், இதே ரஃபிசி ரம்லியை எதிர்த்து துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்டிருந்தும் அடுத்த ஐந்து மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூலிம் பண்டார் பாரு தொகுதியில் தோல்வி அடைந்திருந்தும் அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆக்கி உள்துறை அமைச்சக பொறுப்பையும் வழங்கி இருக்கிறார் அன்வார்.
ஒருவேளை ரஃபிசி ரமலி தேசிய துணைத் தலைவர் பதவியை தற்காக்கும் முடிவை கைவிட்டு இருந்தால் சைஃபுடின் நசுத்தியோன் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய முன்வரக்கூடும்.
காரணம் உள்துறை அமைச்சரான சைபுதீன் நசத்தியோனும் அன்வாரின் மகளான நூருலும் போட்டியிட்டால் கட்சித் தலைமையின் உள் எண்ணம் என்னவென்றும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதும் பிகேஆர் உறுப்பினர்களுக்கு சொல்லப்படாமலே தெரியும்.
காரணம் நூருல் இஸ்ஸா, தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்படாமல் கட்சித் தேர்தலின் மூலம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அன்வார் இப்ராகிமின் இலக்கு. அப்படி ஒரு முடிவை அன்வார் எடுத்திருந்தால் ஜனநாயக முறைப்படி, அது ஏற்றுக்கொள்ள கூடியது தான்.
இப்பொழுது, ரஃபிசி போட்டியிட முடிவு செய்திருப்பதால் சைஃபுடின் நசுத்தியோன் ஒதுங்கிக் கொண்டு, நூருல் இஸ்ஸா, களம் இறங்குவதற்காக கட்சிக்குள் காய் நகர்த்தப்படும்.

ஒருவேளை ரஃபிசி சைபுடின் ஆகிய இருவரும் களம் கண்டால் இன்றைய நிலவரப்படி சைஃபுதீன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
பின்னர் கால ஓட்டத்தில், சைபுடின் ரசித்தியோன் தானாக துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும்படியான ஏற்பாட்டை செய்து, உதவித் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளில் வெற்றி பெற இருக்கும் நூருல் இசாவை கட்சியின் தேசியத் துணைவராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ரஃபிசி ரம்லி, சைபுடின் நசுத்தியோன், நூருல் இசா ஆகிய மூவருமே களம் கண்டாலும்கூட கட்சி உறுப்பினர்களுக்கு தெரியும் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது.
மொத்தத்தில் கட்சியின் அடுத்த தேசிய துணைத் தலைவராக உருவாகிறார் நூருல் ஈசா!
இந்த ஆரூடங்கள் அனைத்தையும் கடந்து ஒருவேளை ரஃபிசி ரம்லியே தேசிய துணைத் தலைவராக வெற்றி பெற்றாலும் அவர் சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறை எடுத்துக் கொள்ளவும் கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவுமான நெருக்கடி கட்சிக்குள் ஏற்படுத்தப்படலாம்;
அந்தவேளை பார்த்து தேசிய துணைத் தலைவராக நூருல் இசாவிற்கு அலுங்காமல் குலுங்காமல் மகுடம் சூட்டப்படலாம்.
மொத்தத்தில் பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் ரஃபிசி, சைஃபுடின், நூருல் ஆகிய மூவரும் போட்டுயிட்டாலும் சரி;
அல்லது ரஃபிசி, சைஃபுடின் ஆகிய இருவரும் மட்டும் போட்டியிட்டு நூருல் உதவித் தலைவருக்கு களம் இறங்கினாலும் சரி;
அல்லது ரஃபிசி ரம்லி-நூருல் இஸ்ஸா இருவரும் களம் கண்டாலும் சரி;
பிகேஆர் கட்சியில் 2028-இல் நடைபெற இருக்கும் அடுத்த உட்கட்சித் தேர்தலுக்குள் நூருல் இஸ்ஸா கட்சியின் துணைத் தலைவராக மகுடம் சூட்டிக்கொள்ள வாய்ப்பு மிகமிக அதிகம்.
அதன் பின்னர் கால ஓட்டத்தில் தேசிய அரசியலில், மலேசியாவின் முதல் பெண் பிரதமர் என்ற சாதனையையும் படைக்கக்கூடும்; அதற்கான தகுதியும் அவருக்கு நிறைவாக உண்டு.
என்ன இருந்தாலும் கட்சியில் ஒரு தூணைப் போல இருக்கின்ற ரஃபிசி ரம்லியை இந்த அளவிற்கு புறக்கணிக்கவும் புறந்தள்ளி காயப்படுத்தவும் கூடிய நடவடிக்கையை பிகேஆர் கட்சி மேற்கொண்டு இருக்கக் கூடாது.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!


