
கோலாலம்பூர் மே 11:
நஜீப் பிரதமராக இருந்த காலத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்காக வெள்ளி ஒரு பில்லியன் ஒதுக்கீடு செய்ததாக மஇகா முன்னாள் தலைவர்களில் ஒருவரும் கல்வித்துறை முன்னாள் துணை அமைச்சருமான ப. கமலநாதன் தெரிவித்துள்ள தகவல் உண்மையில் ஒரு மாபெரும் பொய்யாக இருக்க வேண்டும் அல்லது மலேசிய இந்திய சமுதாயத்தில் கட்டமைக்கப் படுகின்ற ஒரு புதுக் கதையாக இருக்கக்கூடும் என்று மலேசிய முன்னேற்ற கட்சி-எம்.ஏ.பி. ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் கமலநாதன் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு உண்மையான உண்மையை உடனேத் தெரிவிக்க வேண்டும்.
தமிழ் பள்ளிகளுக்கு எப்பொழுது ஒரு பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது? அவ்வாறு ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த நிதியில் எந்தெந்த பள்ளிகள் கட்டமைக்கப்பட்டன என்பதை கமலநாதன் மலேசிய இந்திய சமுதாயத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
வரலாறு நெடுகிலும் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு ஏராளமான வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டு கடைசியில் எல்லாம் வெற்று வாக்குறுதிகளாகின என்பதை தொடர்ந்து கண்டு வருகிறோம். கமலநாதன் குறிப்பிடுகின்ற இந்த ஒரு பில்லியன் நிதி ஒதுக்கீட்டு மர்மம் ஒன்று, பெரும் ஊழலாக இருக்க வேண்டும்; அல்லது பெரும் பொய்யாக இருக்க வேண்டும்; கமலா நாதனுக்கு மட்டுமே தெரிந்த இந்த விவரம் குறித்து உடனே சமுதாயத்திற்கு அவர் தெரிவிக்க வேண்டும்.
2013ஆம் ஆண்டில் ஹிண்ட்ராப் இயக்கத்திற்கும் தேசிய முன்னணி அரசுக்கும் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி தமிழ்ப்பள்ளிகளின் உருமாற்றத்திற்கும் கட்டமைப்பிற்கும் ஒரு பள்ளிக்கு ஆறு மில்லியன் நிதி என வரையறுக்கப்பட்டு இருந்தது.
எளிய முறையில் கணக்கிட்டு பார்த்தாலும்கூட ஒரு பில்லியன் வெள்ளியைக் கொண்டு ஏறக்குறைய 150 தமிழ்ப் பள்ளிகளை நவீன வசதிகளுடன் புத்தம் புதிதாக இந்திய சமுதாயத்தின் கண்ணையும் கருத்தையும் கவரும்படி கட்டி எழுப்பி இருக்க முடியும்; அப்படியானால் அந்த பள்ளிகள் எங்கே?
ஒரு பில்லியன் நிதியில் மறுமலர்ச்சி கண்ட அல்லது புதிதாக எழுப்பப்பட்ட பள்ளியை நாட்டில் எங்கும் காண முடியவில்லை.
திடீரென்று இப்பொழுது தமிழ் பள்ளிகளின் பெயரால் ஒரு பில்லியன் வெள்ளி குறித்த கதை வருவது நஜீப்பும் கமலநாதனும் சேர்ந்து கட்டி எழுப்புகின்ற புது கதையாக இருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு வகையில் ஊழலின் ஊற்று கண்ணாக இருக்க வேண்டும் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹிண்ட்ராப் போராளிகளில் ஒருவருமான மோகன் எல்லப்பன் தெரிவித்துள்ளார்.


