Thursday, April 2, 2026

டிரம்பிற்கு முதல் முறையாக உலக அரங்கில் பாராட்டு! 10மி. டாலருக்கு வலைவிரிக்கப்பட்ட தீவிரவாதி இன்று சிரிய அதிபர்!!

சிரியாமீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை நீக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், சிரியாவில் திரும்பிய பக்கமெல்லாம் அரச மட்டித்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மகிழ்ச்சி வெள்ளம் கடந்த மூன்று நாட்களாக கரைபுரளுகிறது.

சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற தென்கிழக்கு மண்டல நாடுகளுக்கான முதலீட்டு மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிரியா நாட்டின்மீது விதிக்கப்பட்டிருந்த 46 ஆண்டுகால பொருளாதாரத் தடையை நீக்குவதாக அறிவித்ததால், இந்த நந்நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சிரியாமீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்திருந்த நிலையில், சிரியா முன்னேற வேண்டும் என்பதால் அந்தத் தடைகளை நீக்க இப்போது உத்தரவிடுவதாகவும் தற்போது சிரியா முன்னேறும் நேரம் வந்துவிட்டதென்றும் அந்த மத்திய கிழக்கு மண்டல நாட்டில் மீண்டும் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படும் என்றும் டிரம்ப் மே 14-இல் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் பெரும் தொழிலதிபரும் இனவாதியும் வலச்சாரி அரசியல் கொள்கையாளருமான டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது முறை அதிபரானது முதல், உலக நாடுகளை மட்டுமல்ல; சொந்த நாட்டினரையும் கவலைக்கும் அழுத்தத்திற்கும் ஆளாக்கி வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில், முதல் முறையாக, சிரிய நாட்டு மக்கள் டொனால்ட்டைப் பாராட்டித் தீர்க்கின்றனர்.

பரஸ்பர வர்த்தக வரிவிதிப்பின் மூலம், மலேசியா உள்ளிட்ட நூற்றுக் கணக்கான நாடுகளை பன்னாட்டு வர்த்தக-தொழில் அடிப்படையில் முறுகல் நிலைக்குத் தள்ளிய அதிபர் டிரம்ப், சீனாவை பாடாய்ப்படுத்தி விட்டார்.

லாவணிக் கச்சேரி நடத்துவதைப் போல, அமெரிக்காவும் சீனாவும் மாற்றி மாற்றி ஒன்றின்மீது ஒன்று வர்த்தக வரி விதிப்பை அதிகரித்து வந்த நிலையில், தற்பொழுது அது கிடப்பில் உள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க காவல் துறையும் குடிநுழைவு அமலாக்கப் பிரிவினரும் நூற்றுக் கணக்கான வட இந்தியரை வளைத்துப் பிடித்து, அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருந்ததாகக் குற்றம் சுமத்தி, அவர்களின் கால்-கைகளில் விலங்குபூட்டி, பூட்டிய விலங்குடன் விமானமேற்றி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது; இருமுறை இப்படி அனுப்பப்பட்டவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.

பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இதைக் காதும்காதும் வைத்தாற்போல கடந்துசென்றதுதான் வியப்பாக இருக்கிறது இன்றளவும்;

இதேப்போன்ற சிக்கலை மெக்சிக்கோவும் எதிர்கொண்டது; ஆனால், இந்தியாவைப் போல சோம்பி, மௌனம் காக்கவில்லை; சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று அமெரிக்காவால் அடையாளம் காணப்பட்டோரை சொந்த விமானத்தை அனுப்பி மெக்சிக்கோ மீட்டுக்கொண்ட துணிவு இந்தியாவிடம் இல்லாதது வியப்புதான்.

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை, அகதிகளை வெளியேற்ற முனைப்பு காட்டியது, திருநர்களை இராணுவத்தில் இருந்து நீக்கியது என ஏராளமான அதிரடியையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தி அமெரிக்க மக்களையும் கவலையில் ஆழ்த்தினார் டிரம்ப்.

இத்தகைய சூழலில், சிரிய மக்கள், சிரியாவின் அதிபர் அகமது அல்-ஷாரா, சிரியாவின் வெளியுறவு-நிதித்துறை அமைச்சர்கள் என சிரிய நாட்டின் அனைத்துத் தரப்ப்பினரும் டிரம்பிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர்.

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷீர் அல்-அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிப் படைத் தலைவராக இருந்த அகமது அல்-ஷாராதான், இப்பொழுது புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த கால் நூற்றாண்டு காலத்தில், வெள்ளை மாளிகையில் அடிவைத்த முதல் சிரியத் தலைவர் அல்-ஷாரா என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக, சிரியாவை தங்களின் இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த பஷீர் குடும்ப ஆட்சிக்கு கடந்த டிசம்பர் மாதம் முடிவு கட்டியவர் அல்-ஷாரா.

பஷீர் அல்-அசாத்தின் தந்தை பஷீர்-அல் ஹஃபீஸ், கடந்த நூற்றாண்டின் நிறைவுக்கட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-ஐ சந்தித்ததற்குப்பின், சிரிய நாட்டின் தலைவருடனான சந்திப்பு இப்பொழுது வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதில், வினோதம் என்னவென்றால், மூன்று நாட்களுக்குமுன் டோனால்ட் டிரம்ப் சந்தித்த இதே சிரிய அதிபர் அகமது அல்-ஷாராவை வேட்டையாட பெரிதும் அக்கறைக் காட்டியதும் இதே அமெரிக்கா என்பதுதான்; அல்-ஷாராவுக்கு 10மில்லியன் டாலர் விலையும் அறிவித்திருந்தது

சிரியாவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நிறுத்த உத்தரவிடுவதாக டொனால்ட் செய்த அறிவிப்பு தொடர்பில், சிரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்பின் அறிவிப்பை நாடு வரவேற்பதாகவும், இது, சிரிய மக்களுக்கு ஒரு முக்கிய திருப்புமுனை யெனவும் வருணிக்கப்பட்டுள்ளது; சிரியா எதிர்கொண்டிருந்த நீண்டகால-வேதனையான போரின் அத்தியாயத்திலிருந்து மீண்டு வருவதற்கு இந்த அறிவிப்பு துணைபுரியும்; தவிர, சிரியாவில் அரசியல் நிலைத்தன்மை, தன்னிறைவு, தேசிய மறுகட்டமைப்பு போன்றவற்றுக்கும் சிரியா மீதான இத்தடைநீக்கம் துணைபுரியும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.

சிரியாவின் நீண்ட கால ஆட்சியாளர், பஷார் அல்-அசாத்தை, கிளர்ச்சிப் படையினர், பக்கத்து நாடான துருக்கி ஆதரவுடன் கடந்த 2024 டிசம்பரில் தூக்கியெறிந்ததிலிருந்து, சிரியாவின் புதிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள், சிரியாமீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு அமெரிக்காவையும் மேற்கத்திய நாடுகளை வலியுறுத்தி வந்தனர்.

சிரியாவின் இன்றைய அதிபர் அகமது அல்-ஷாரா, கடந்த வாரத்தில் பிரான்சு நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பொழுது, பாரிசில் செய்தியாளர்களிடம் பேசினார்; அப்போது, அல்-அசாத் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகளை மேற்குலகம் இன்னமும் தொடர்வது நியாயம் இல்லையென ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

“முந்தைய ஆட்சி செய்த குற்றங்களுக்காக இந்தத் தடைகள் விதிக்கப்பட்டன, அந்த ஆட்சி போய்விட்டது” என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து நடத்தப்பட்ட அந்தச் செய்தியாளர் கூட்டத்தில் ஷாரா கூறினார்.

அமெரிக்கத் தடைகள் சிரியாவை உலக நிதி அமைப்பிலிருந்து தனிமைப் படுத்தியதுடன் 13 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரின் விளைவாக, சிரிய மக்களின் வாழ்க்கைத் தரம், கல்வி, வர்த்தகம், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு யாவும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

பஷார் அல்-அசாத் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகள் சிரியாவின் பொருளாதார மீட்சிக்கும் போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பிற்கும் பெரும் தடையாகக் காணப்படுகின்றன என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், சிரிய வெளியுறவு அமைச்சர் அசாத் அல்-ஷைஃபானி, சிரியாமீதான தடைகளை நீக்குவதற்கு அழுத்தம் கொடுப்பதில் துணைநின்ற சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பஷார் அல்-அசாத்தின் ஆட்சி நீடித்த 2024 பிற்பகுதிவரை, சிரியாவில் அதன் எல்லையோர நாடான துருக்கி மற்றும் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

துருக்கி:
இந்த நிலையில்தான், துருக்கியின் நேரடி ஆயுத உதவியைப் பெற்ற கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்-ஐக் கைப்பற்றியதன் மூலம் பஷார் அல் அசாத்தின் 24 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்; அதேவேளை, சிரியாவில் தொடர்ச்சியாக 13 ஆண்டு காலம் இடம்பெற்று வந்த உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது. இந்த உள்நாட்டு கலவரத்தால், ஏறக்குறைய 5 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்; பல லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலோர் துருக்கியில் தஞ்சம் அடைந்தனர்.

ஏறக்குறைய 30 இலட்ச சிரிய அகதிகளைப் பராமரிப்பதில் துருக்கி பெரும் சங்கடத்தை எதிர்கொண்டிருந்தது என்னவோ உண்மைதான்;

பஷார் அல்-அசாத்தின் ஆட்சி அகற்றப்பட்டால் சிரியாவில் ஒருவேளை அமைதி நிலவும் என்றும் அப்பொழுது, தங்கள் நாட்டில் உள்ள சிரிய அகதிகளை, அங்கு மீண்டும் குடியமர்த்தலாம் என்பதும் துருக்கியின் உள்நோக்கமாக இருந்திருக்கக்கூடும்.

சிரியாவின் வடகிழக்குப் பகுதியான இட்லிப் மண்டலத்தில் மையம் கொண்டிருந்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்னும் வலுவான ஆயுதக் குழுதான், மற்ற கிளர்ச்சிக் குழுக்களையும் இணைத்துக் கொண்டு, பஷார் அல்-அசாத்தின் ஆட்சியை அகற்றியது.

இந்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு, உண்மையில் பின் லேடனின் அல்-கைடா அமைப்புடன் தொடர்புடையது. இந்தக் குழுவிற்கு தலியமையேற்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததால்தான் அகமது அல்-ஷாராவை பயங்கரவாதத் தலைவர் என்று அறிவித்த அமெரிக்கா, அவரை வேட்டையாடவும் முனைப்பு காட்டிவந்தது.

ரஷ்யா:
ரஷ்யா, பதவி வீழ்த்தப்பட்ட பஷார் அல்-அசாத் அரசாங்கத்துடன் நீண்ட கால உறவைக் கொண்டிருந்தது. உள்நாட்டு போருக்கு முன்பே அங்கு ரஷ்யாவின் ராணுவ தளங்கள் இருந்தன; சிரியாவில் தங்களுக்குள்ள இருப்பையும் பஷார் அல்-அசாத் ஆதரவுடன் நிலைநாட்டி வந்த ரஷ்யா, அந்த மண்டலத்தில் மேற்கு நாடுகளின் அதிகார ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சில கமுக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

பஷார் அல்-அசாத் அரசுக்கு ஆதரவாக 2015இல் வான் தாக்குதலை மேற்கொண்ட ரஷ்யா, தன் ஆயிரக்கணக்கான வீரர்களையும் சிரியாவுக்கு அனுப்பியது; இதற்கு கைமாறாக ரஷ்யா ஒரு விமானத்தளம் மற்றும் கடற்படை தளத்திற்கான 49 ஆண்டு கால குத்தகையையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய ரஷ்ய ஒன்றியம்(Union of Soviet Socialist Republic Counties) கோர்பசேவ் காலத்தில் சிதைந்து போனாலும், மீந்திருக்கின்ற இன்றை ரஷ்யா, தன்னை உலகளாவிய சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் இதுவும் ஒரு நகர்வாக இருந்தது; தவிர, சிரியாவின் எண்ணெய் வளத்தை நுகர்வதும் புடினின் உள்நோக்கமாக இருந்தது; கடந்த ஆண்டின் பிற்பகுதில், பஷார் அல்-அசாத்தின் ஆட்சி சிரிய தலைநகரம் டமாஸ்கஸ்-யிலிருந்து அகற்றப்பட்டு, அல்-ஆசாத்தும் விரட்டப்பட்ட நிலையில் ரஷ்யாவின் இந்த எண்ணமெல்லாம் தவிடுபொடியானது. கடைசியில், பஷார் அல்-அசாத், மாஸ்கோவில் தஞ்சம்மடையும் நிலையும் ஏற்பட்டது.

அமெரிக்கா:
2011 இல் சிரியாவில் நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டங்கள், பஷார் அல்.அசாத் நிருவாகத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமா, பஷார் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிரானவர்களை ஆதரித்தார்.

2014இல் தாங்கள் விரும்பிய மிதவாத கிளர்ச்சி குழுக்களுக்கு ஆதரவாக ராணுவ உதவியையும் வழங்கிய அமெரிக்கா, பஷார் அல்-அசாத்தை பலவீனப்படுத்தும் செயலையும் ஒருசேர மேற்கொண்டது.

2024 டிசம்பரில் அல்-அசாத் அரசாங்கம் வீழ்ந்துவிட்ட நிலையில், 2025 ஜனவரியில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்க இருந்த டொனால்ட், சிரியாவைப் பற்றி கருத்து தெரிவித்தபொழுது, “அது ஒரு குழப்பம் நிறைந்த நிலப்பகுதி என்றும் அமெரிக்கா அதிலிருந்து விலகி இருப்பதே நல்லது’ என்றும் தன் சலிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதே டிரம்ப், முன்னர் அதிபராக இருந்த நேரத்தில், சிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை திரும்ப பெறுவதற்கான உத்தரவை 2019ல் பிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே 2019, நவம்பர் மாதத்தில், அமெரிக்காவையும் அப்போதைய அதிபர் டோனால்ட் டிரம்பையும் கடுமையாக விமர்சித்த, சிரியாவின் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத், சிரியாவின் எண்ணெய் வளத்தை திருடும் முயற்சியில் அமெரிக்கா வஞ்சகமாக ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை உலகறிய முன்வைத்தார்.

மொத்தத்தில் சிரியாவின் ஆட்சியாளர்களும் ஆயுதக் குழுவினரும் தங்கள் நண்பனா அல்லது பகைவனா என்று அடையாளம் காணமுடியாத துருக்கி, சிரியாவின் இயற்கை எண்ணெய் வளத்தின்பால் கண்வைத்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தை மருட்டுவதற்காக சிரியாவைத் தன் அதிகார மையமாகப் பயன்ப்டுத்திய ரஷ்யா ஆகிய நாடுகளின் நிலையும், தற்பொழுது தலைகீழ் மாற்றத்தை எட்டியுள்ளன.

இப்படிப்பட்ட மாற்றமெல்லாம் சிரியாவை மையம் கொண்டிருந்த நிலையில்தான், இன்றைய சிரிய மக்கள், டிரம்பைக் கொண்டாடித் தீர்க்கின்றனர். அமெரிக்கர்கள்கூட டொனால்ட் டிரம்ப்மீது அதிருப்தி கொண்டிருக்கும் நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

டிரம்பின் போக்கிலும் வெளிப்படுத்தும் கருத்திலும்கூட, தற்பொழுது மாற்றம் தெரிகிறது. நிதானமும் நீக்குப்போக்கும் மெலிதாகத் தென்படுகிறது. இந்நிலைத் தொடர்ந்தால், அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல; உலக மக்களுக்கும் நல்லதுதான்.

டிரம்பின் தடைகள் நீக்கம் “சிரியாவின் வர்த்தக நிறுவனங்களை கட்டியெழுப்பவும் மக்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்கவும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பன்னாட்டு அரங்கில் சிரியாமீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும்” என்று நிதியமைச்சர் முகமது ஃபர்னீ தெரிவித்துள்ள் கருத்து மிகவும் பொருத்தமானது.

டமாஸ்கஸ் நகரில் உள்ள ‘உமையாத்’ சதுக்கத்தில் நூற்றுக்கணக்கில் கூடிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சிரிய மக்கள் மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் டிரம்பின் அறிவிப்பை வரவேற்றனர். அதிகமானோர், தங்கள் கையில் பிடித்திருந்த சிரிய தேசக் கொடிகளை அசைத்தனர்; பலர் தங்கள் வாகனங்களில் கொடி அசைத்தும் பாடல் இசைத்தும் உலா வந்தனர்.

தன் மகிழ்ச்சி மிகவும் அளப்பரியது; டிரம்ப் எடுத்துள்ள இந்த முடிவு நிச்சயமாக முழு நாட்டையும் மேம்படுத்தும்; கட்டுமானம் திரும்பும்; இடம்பெயர்ந்தோரும் திரும்புவார்கள், பொருள்விலை குறையும் என்றெல்லாம் 33 வயதான ஆங்கில மொழி ஆசிரியர் ஹுடா கஸ்ஸர் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் வட மண்டலமான இட்லிப்-ஐச் சேர்ந்த 39 வயதான பாஸ்சம் அல்-அகமது, உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர். அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் கூறினார்.

நீண்ட காலப் போர், 50 ஆண்டுகால அசாத் குடும்பத்தின் அடக்கு-முறைக்குப் பிறகு, சிரிய மக்கள் அமைதியாக வாழும் சூழல், குறிப்பாக, சிறுபான்மை மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் நந்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளின் தலைவரான மஸ்லூம் அப்தியும் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை