
822.34 கோடி பேர் என்ற அளவில் உலக மக்கள் தொகை வேகவேகமாக அதிகரித்துவரும் நிலையில் மூவரில் ஒருவர் பட்டினி சாவை எதிர்கொண்டுள்ளனர்.
சற்று துல்லியமாக குறிப்பிட வேண்டும் என்றால் உலக மக்கள் தொகையில் 29.53 விழுக்காட்டினர் அல்லது 243 கோடி மக்கள் பட்டினியால் உயிர் துறக்கக் கூடிய பேராபத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
உலக மக்களை பேரளவில் பாதித்துள்ள இத்தகைய இடர்குறித்த தாக்கம் சிறிதுகூட பிரதிபலிக்காத அளவில் மலேசிய மக்கள் வாழ்கின்றனர் என்-றால் அதற்கு மலேசியர் அனைவரும் தங்களுக்குத் தாங்களே பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டும்.

மறுபுறத்தில் உணவு விரயத்தில் ஏறக்குறைய முதல் இடத்தில் இருக்கின்ற மலேசியர்கள் இனியாவது சமைத்த உணவையும் சமைக்காத உணவுப் பண்டத்தை விரயமாக்குவது அல்லது வீசுவது குறித்து நிதானமாக சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்தின் சார்பிலும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக அரசு சாரா அமைப்பினர் உணவு விரயம் குறித்து மலேசிய மக்களிடம் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். உணவு விரயம் குறித்த விழிப்புணர்வு, முதற்கண் இல்லத்திலும் பள்ளியிலும் தொடங்கப்பட்டால், அதன்வழி ஒருசில ஆண்டுகளுக்குள் மலேசிய மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை பேரளவில் ஏற்படுத்துவதுடன் உணவு விரயம் செய்வது, மனிதநேயத்திற்கு எதிரான செயல் என்ற கருத்தாக்கமும் தோன்றும்.

ஐநா மன்றம் ‘பன்னாட்டு உணவு பற்றாக்குறை’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கைதான், உலக அளவில் மூன்றில் ஒருவர் பட்டினி சாவை எதிர்கொண்டுள்ள பேரவலத்தை படம்பிடித்து காட்டியுள்ளது.
ஐநா மன்றம் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு, பன்னாட்டு அளவில் 16 அரசு சாரா அமைப்புகளும் துல்லியமான தகவலை திரட்டி வழங்கியுள்ளன.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் ஆயுத மோதல்; மனிதாபிமான உதவிக்கு ஒதுக்கப்படும் நிதியில் துண்டுவிழுந்திருப்பது; பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தட்ப-வெப்ப தலைகீழ் மாற்றம்; வேளாண் உற்பத்தி குறைவு; பொருளாதார நெருக்கடி; மத பூசல் போன்ற காரணங்க-ளால் பாதிக்கப்படும் மக்கள், உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடும் அவல நிலையை எதிர்கொண்டுள்ளனர்

கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை, ஒரு கோடியே 40 லட்சம் பேர் என அதிகரித்துள்ளது.
உணவு கிடைக்காமல் பட்டினி சாவை உலக அளவில் எதிர்கொண்டுள்ள மக்களில், மேற்குக் கரையை ஒட்டிய காசா முனை, சூடான், ஹைத்தி, மாலி, தென் சூடான் ஆகிய பகுதிகளில் மட்டும் 95 விழுக்காட்டு அளவில் உள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்குள் உணவுப் பொருள்களை மட்டும் அல்ல; அத்தியாவசியமான பண்டங்கள், மருந்து பொருட்களையும் எடுத்துச் செல்ல விடாமல் இஸ்ரேலிய இராணுவம் ஏறக்குறைய 15 மாதங்களாக முற்றுகையிட்டுள்ளது. இதனால் உணவு பற்றாக்குறை பாரிய அளவில் ஏற்பட்டு 21 லட்சம் பேர் பஞ்சத்திற்கு ஆட்படும் நிலை காஸாவில் நிலவுகிறது. இது, இன-மத பூசலால் மனித குலத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கை அவலம்; மாந்தநேயத்தை தொலைத்தோர் மேற்கொள்ளும் சண்டித்தனம்.
இதேநேரத்தில், போர் காரணமாக சூடானில் மட்டும் ஏறக்குறைய இரண்டரை கோடி பேர் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாலும் மியான்மார், நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட 20 நாடுகளில் ஆயுத மோதலுடன் போர் மேகமும் சூழ்ந்து இருப்பதால் இந்த பகுதிகளில் எல்லாம் உணவுத் தட்டுப்பாடும் பட்டினி சாவும் ஏற்பட்டு உள்ளன.

ஐநா மன்றம் வெளியிட்டுள்ள ‘பன்னாட்டு உணவுப் பற்றாக்குறை அறிக்கை’-யில், தெரிவிக்கப்பட்டுள்ள ஒரு தகவல் இன்னும் அதிர்ச்சியானது.
யு.எஸ்.எய்ட்(USAid) என்னும் அமெரிக்கா-வின் பன்னாட்டு நிதி உதவி அமைப்பிற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த நிதியில், தற்போதைய அதிபர் டொனால்ட் அதிகமாகக் குறைத்து விட்டதால் ஏமன், சூடான், ஹைத்தி போன்ற ஏழ்மை நாடுகளில் உள்ள குழந்தை நல மற்றும் பாதுகாப்பு மையங்களுக்கு கிடைத்துவந்த நிதியில் துண்டுவிழுந்து இருக்கிறது. இதனால் இப்படிப்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஒன்றரை கோடி குழந்தை-களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயமும் அச்சுறுத்தலும் எழுந்திருப்ப-தாக ஐநா மன்றம் கவலை தெரிவித்துள்ளது.
உலகில் நிலவுகின்ற இத்தகைய போக்கையும் சூழ்நிலையையும் மலேசிய மக்கள் கருத்தில் கொண்டு, இனியாவது உணவை விரயமாக்கக் கூடாது என்னும் கங்கணம் மனதில் எழவேண்டும். பொது இடங்களில் சாப்பிடும் அளவிற்கு மட்டும் உணவை எடுக்க வேண்டும்; மீந்த உணவை வீசாமல்- விரயமாக்காமல் அதை எளியோரும் நலிந்தோரும் பயனுறும் வகையில் உரிய தரப்பினரிடம் ஒப்படைத்தால், அது மனித குலத்திற்கு ஆற்றுகின்ற தொண்டாக அமையும்; மலேசிய மக்கள் கவனத்தில் கொள்வார்களா?
மலேசிய இல்லத்தின் சன்னலைத் திறந்து, கொஞ்சம் உலகை எட்டிப் பாருங்களேன்!!.


