Monday, May 25, 2026

மக்கள் நீதிக் கட்சியில் நீதியில்லை!நூருல் இஸாவிடமும்தான்!!

நூருல் இஸாவை மலேசியாவின் இந்திரா காந்தி என்றும் மலேசியாவில் ஒரு பெண் பிரதமர் ஆனால், அத்தகைய முதல் பெண் இவராகத்தான் இருப்பார் என்றும் இதற்கு முன்னம் தெரிவித்த அரசியல் கருத்தை குமரி வான்முற்றம் மீண்டும் உறுதிசெய்கிறது.

இளந்தலைவராக இருந்தாலும், நூருல் இஸா வெளிப்படுத்தும் கருத்து எந்த சிக்கலாக இருந்தாலும் தேசியப் பார்வை மிளிரும்; அனைவரையும் அரவணைக்கும் விதமாக இருக்கும்.

2018 பொதுத் தேர்தல் சமயத்தில், திரை மறைவில் காய் நகர்த்தி, நம்பிக்கைக் கூட்டணித் தேர், வெற்றி உலா வந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு; ஒரு கட்டத்தில் ‘மாப்பிள்ளை முறுக்கிக் கொண்டு மணப்பந்தலுக்கு வெளியே, பந்தல் காலைப் பிடித்துக் கொண்டு நிற்பதைப் போல’ துன் மகாதீர் கோபித்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், நூருல் இஸா, அவரைத் தேடிச் சென்று சமாதானப்படுத்தி அழைத்து வந்ததெல்லாம் வரலாறு.

2019 பிற்பகுதியில் அமைச்சரவை மாற்றம் நிகழப்போகிறதென்றும் அன்வார் அதில் இணைத்துக் கொள்ளப்படுவாரா என்ற ஊக செய்தியெல்லாம், ஊடகத்தில் உலா வந்தன; அப்பொழுது, மகாதீர், தனக்கேயுரிய வஞ்சகப் பாணியில், “அப்படியா?, தனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாதே!”என்று நையாண்டி புரிந்ததுடன் அல்லாமல், அப்படியே அமைச்சரவை மாற்றம் இருந்தாலும் அதில் அன்வாருக்கு இடமில்லை என்றார்.

அடுத்த நாளே, துணைப் பிரதமராக இருந்த டாக்டர் வான் அஸிஸா, “அன்வாருக்கு அமைச்சரவையில் ஏன் இடமில்லை? மகாதீர் வகிக்கும் பிரதமர் பொறுப்பு அவருக்கானதுதான்” என்று ஒரேப் போடு நான்கு துண்டுகள் என்னும் விதமாக வெடித்தார்.

மகாதீரிடமிருந்து, அதற்கு மறுமொழி கடைசிவரை வெளிவரவில்லை. அந்த அளவிற்கு இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் அன்றைய இரவல் பிரதமர் மகாதீருக்கும் இடையே நிழல் யுத்தமும் நேரடி யுத்தமும் மாறிமாறி வெடித்த நேரத்தில்கூட அமைதிகாத்தவர் நூருல்.

மிகவும் பக்குவப்பட்ட இளந்தலைவரான நூருல், மலேசியத் தமிழர்கள் அண்மைக் காலமாக காயம்பட்டு நிற்பதைப்பற்றி சிறிதும் கருதாமல் கடந்து சென்றவர்-செல்கிறவர் நூருல் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.

டத்தோஸ்ரீ நஜீப் காலத்தில், அன்வார் சிறையில் இருந்த வேளையில் கெ அடிலான் கட்சியை திறம்பட வழிநடத்தியவர் வான் அஸிஸா. அந்த காலக்கட்டத்தில் அவர் அடிக்கடி சொன்னக் கருத்து, நாம் அனைவரும் மலேசியர்கள்; மலாயர், சீனர், இந்தியர் என்ற வரையறை எதுவும் கிடையாது. ‘ரிஃபொமாசி’(சீர்திருத்த) முழக்கத்தை முன்னெடுக்கும் கெ அடிலான் கட்சியிலும் அது தலைமையேற்றுள்ள நம்பிக்கைக் கூட்டணியிலும் நீதியும் சமத்துவமும் முன்னிலைப்படுத்தப்படும் என்று பேசினார்.

அப்படிப்பட்ட கெ அடிலான் கட்சி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின், முழுதாக ஆதரவு வழங்கிய தமிழர்களுக்கு ஏதும் செய்யவில்லை என்றாலும் இந்திய சமுதாயத்திற்கு-தமிழினத்திற்கு என வழிவழியாகத் தொடர்ந்ததை யெல்லாம் ஒவ்வொன்றாக பிடுங்கிக் கொண்டதுதான் மிச்சம்.

அமைச்சரவையில் தமிழர் இடம்பெற்று வந்ததை கெ அடிலான் கட்சி இல்லாமல் செய்துவிட்டது. பினாங்கு துணை முதல் அமைச்சர் பதவி தமிழருகென்று இருந்ததைப் பறித்து சீக்கியருக்குக் கொடுத்தது எந்தவகை நியாயம்? அதே சீக்கியர், பினாங்கு அறவாரியத் தலைவர் பொறுப்பின்மீதும் வைத்தக்கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

மத்தியக் கூட்டரசின் நிலைதான் இதுவென்றால், மாநிலங்களிலாவது ஆட்சிக் குழுவில் ஒரேயொரு தமிழரை நியமிக்க இந்த பிகேஆர் கட்சிக்கு மனமில்லாமல் போனது ஏன்?

தமிழ்ப் பள்ளிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுவந்த மானியம் என்னும் அத்தியாயத்தை நிதிநிலை அறிக்கையில் இல்லாமல் செய்தது பிகேஆர் தலைமையிலான ஆட்சி; ஆண்டுதோறும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இந்திய-தமிழ் மாணவர்களுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்ற தகவல் கல்வி அமைச்சின்வழி தெரியவரும் முன்பெல்லாம்;

பிகேஆர் அதிகார மையத்திற்கு வந்தபின், கல்வி அமைச்சகம் இதை தெரியப்படுத்தாமல் ஒளித்துவிட்டது; வெளிப்படைத்தன்மையையும் இழந்து விட்டது. இந்த ஆண்டாவது, எத்துணை மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை அன்வார் அரசு அளித்துள்ளது என்னும் தகவல் தெரியவருமா என்பது தெரியவில்லை.

இப்படி, மலேசியத் தமிழர்கள் எல்லா வகையாலும் காயம்பட்டு நிற்பதை, ஒரு சமதரும தலைவியாகக் கருதப்படும் நூருல் இஸா, கண்டுகொள்ளாமல் இருப்பது இன்னொரு துயரம்.

இந்திய சமுதாயம் தவிர, பொதுவான மலேசிய தேசிய அரசியல் வட்டத்தில் இருந்தும் அண்மைக் காலமாக ஒதுங்கி இருந்த நூருல், சொந்தக் கட்சியான கெ அடிலான் தொடர்பான நடவடிக்கையிலும் தென்படாமல் இருந்தார். தங்கள் குடும்பத்தின் பாரம்பரியத் தொகுதியாக நீண்ட காலமாக இருந்த பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது களத்தை இழந்த இவர், அதுமுதலே, அரசியலில் இருந்தும் கட்சி நடவடிக்கையில் இருந்தும் ஒதுங்கி இருந்ததைப் போல தெரிந்தது.

ஆனால், அண்மைய சில மாதங்களாக, இவர் உதவித் தலைவராக பொறுப்பு வகிக்கும் மக்கள் நீதிக் கட்சி(கெ அடிலான்/பிகேஆர்) தொடர்பாக இவர் வெளிப்படுத்தும் கருத்திலும் நடவடிக்கையிலும் நீதி இல்லாததால், இவர்மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது.

கட்சியில் தான் வகிக்கும் உதவித் தலைவர் பதவியைத் தற்காக்கப் போவதாக தொடக்கத்தில் அறிவித்த நூருல், திடீரென்று துணைத் தலைவர் பொறுப்பிற்கு களம் இறங்கி இருக்கிறார்.
கடந்த மாதம் நாடு முழுவதும் கெ அடிலான் தொகுதித் தேர்தலில், நடப்பு துணைத் தலைவர் ர்ஃபிசி ரம்லியின் முக்கியமான ஆதரவாளர்கள் தோற்றனர். மற்ற பொறுப்புகளுக்கு போட்டியிட்டவர்கள் வெற்றிபெற, ரஃபிசிக்கு ஆதரவான தொகுதித் தலைவர்கள் மட்டும் தோற்றனர்.

இது ஏதோ திட்டமிட்ட நடவடிக்கையைப் போல இருக்கிறது என்றெல்லாம் விமர்சனம் எழுந்த நேரத்தில், கட்சித் தலைமையும் தேர்தல் குழுவும் அடுத்தக்கட்டத்திற்கு நகருங்கள் என்று போகிறபோக்கில் சொல்லி வந்தன;

இப்பொழுது, நூருல் இஸாவும் அதையேச் சொல்கிறார்.

கட்சியில் சலசலப்பும் சண்டையும் நீடித்தால், இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் மக்கள் நீதிக் கட்சி சிதந்துவிடும் என்றும் தற்பொழுது எட்டியிருக்கும் அதிகார நிலையும் அற்றுவிடும் என பயமுறுத்துகிறார்.

ரஃபிசியின் ஆதரவாளர்கள் தோற்றபொழுது, அன்வாரின் மனங்கவர்ந்த சைஃபுடின் நசித்தியோனைத்தான் அடுத்தத் துணைவராக்கி, தன் அருகில் அமரவைத்து அழகுபார்க்க அன்வார் காய் நகர்த்துகிறாரோ என்று ஊகித்த நிலையில், திடீரென்று தன் மகளான நூருலை களமிறக்கி இருக்கிறார் அன்வார்.

நூருல் இஸா, துணைத் தலைவராக வருவதிலா, இதன் தொடர்பில் தற்போதைய துணைத் தலைவரை எதிர்த்து போட்டி இடுவதிலோ எந்தத் தவறும் இல்லை.

முதலில் தாய், அடுத்து தந்தை, இப்பொழுது மகளா? ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டுமா என்னும் சொத்தை வாதங்களையும் குமரி முன்வைக்கவில்லை.

இந்த நாட்டில் மட்டுமல்ல; எந்த நாடாக இருந்தாலும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதை வழிநடத்தவும் தற்காக்கவும் சில பின்கதவு நடவடிக்கை தேவைப்படும்; அதனால், அன்வாருக்குப் பின் அவரின் மகளை முன்னிலைப்படுத்துகிறார் என்னும் கருத்திற்கு சிறிதும் இடமில்லை.

ஆனால், அன்வார் அப்படியொரு முடிவை எடுத்திருந்தால், அதைப்பற்றி முன் கூட்டியே அறிவிப்பு செய்து, ரஃபிசி ரம்லியுடன் ஆலோசித்து அவரையும் சம்மதிக்கவித்து, சுமூகமான முறையில் இதைச் செய்திருக்கலாமே?

அன்வாரும் நூருலும் எல்லாவற்றையும் கமுக்கமாக மறைத்து வைத்துக் கொண்டு, கடைசி நேரத்தில் மாநிலத் தலைவர்களை தூண்டிவிட்டு, நூருல் பக்கம் அணிதிரள வைத்துவிட்டு, ரஃபிசியை காயப்படுத்தி-அவருக்கு சிறுமையியும் ஏற்படுத்திவிட்டு, வார்த்தைகளை கவனமாகக் கையாளுங்கள் கட்சியினருக்குச் சொல்கிறார்.

தவிர, சலசலப்பு கூடாது; அடுத்தக்கட்டத்திற்கு நகருங்கள்; சண்டையிட்டுக் கொண்டிருந்தால் கட்சி கரைந்துவிடும் என்று மறையோதும் நூருல், ரஃப்சியின் இடத்தில் இருந்தால் இப்படி பேசுவாரா?

மொத்தத்தில், நம்பிக்கைகுரியத் தலைவர் என்னும் நிலையில் இருந்து வழுவும் நூருல், பத்தோடு பதினொன்றாகத்தான் இருப்பார் என்ற எண்ணம் மேலிடுகிறது.

ரஃபிசி ரம்லி, பொருளாதாரத் துறை அமைச்சர் பதவியைத் துறந்தபின், இதற்கெல்லாம் பதில் கிடைக்கும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை