
நம் குரல் கேட்க வேண்டிய இடத்தில் கேட்கப்பட வேண்டும். அப்படி கேட்கப்பட்டால், நம் சமுதாயத்திற்குரிய அனைத்தும் கட்டம் கட்டமாக நமக்கு வசப்படும் என்று கெ அடிலான் உதவித் தலைவர் தேர்தலில் களம்காணும் டாக்டர் ந.சத்திய பிரகாஷ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கெ அடிலான் கட்சியில் இன்னும் இரு நாட்களில் கட்சியின் உச்சமன்றம், இளைஞர்-மகளிர் பிரிவுகள், தேசிய உதவித் தலைவர்கள் உள்ளிட்ட தேசியப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் இணையவழி நடைபெற இருக்கின்ற நிலையில், நேற்று கோலாலம்பூர் லேக் கார்டன் கிளப்-இல் சிலாங்கூர் இந்திய உயர்நிருவாகியர் அமைப்பின்(PEIS) சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவுரை ஆற்றியபோது மேற்கண்டவாறு முழங்கினார் சத்யபிரகஷ்.

நாம், நம்மிடையிலும் நம்மைச் சுற்றிலும் நடைபெறுகின்ற குற்றம்-குறைகளை மட்டும் பேசிக் கொண்டு பிரிந்து நிற்பதைக் காட்டிலும் கண்ணில் தென்படும் நன்மையைப் பேசி, ஒருவருக்கொருவர் அரவணைத்து, நடக்கின்ற நல்லவற்றை முன்னிறுத்தி ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம் என்று அவர் குறிப்பிட்டார்.
மித்ரா நிதி பரிவர்த்தனை குறித்து, தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தோம். அப்படி கேள்வி கேட்ட நம் கட்சியே ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இதுகுறித்த வெளிப்படைத் தன்மையோ, மித்ரா நிதி பரிவர்த்தனை குறித்தோ வெளிப்படையாக ஒன்றும் தெரியவில்லை.

இதுபோன்ற இன்னும் ஏராளமான விவகாரங்கள் குறித்து, தெரிய வேண்டிய இடத்திற்குத் தெரியவில்லை; குரலை எழுப்ப வேண்டியவர்கள், எழுப்ப வேண்டிய முறையில், எழுப்பவேண்டிய இடத்தில் குரலை எழுப்புவதில்லை.
இதனால்தான் பெரும்பாலான சிக்கலுக்கு தீர்வுகாண முடியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் தீர்வுகாண இன்னும் இரு நாட்களில் நடைபெற இருக்கின்ற கெ அடிலான தேசியப் பொறுப்பாளர் தேர்தலில், தன்னை தேசிய உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கும்படி கெ அடிலான் உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ந. சத்திய பிரகாஷ் கேட்டுக்கொண்டார்.

கெ அடிலான் கட்சித் தேர்தலில் இளைஞர்பிரிவு, மகளிர் பிரிவு, தேசிய உச்ச மன்றம், உதவித் தலைவர்கள் ஆகிய பிரிவுகளில் போட்டியிடுவோர் பேரளவில் திரண்டிருந்த இந்தக் கூட்டம், இந்திய சமுதாயத்தின், குறிப்பாக கெ அடிலான் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பறைசாற்றுவதாக அமைந்தது.
ஜோகூர் முதல் பேராக் மாநிலம் வரை கட்சியின் அனைத்துப் பிரிவினரும் திரண்டிருந்த இந்த எழுச்சிக் கூட்டத்தில் வட்டார மலாய்த் தலைவர்களும் அணிதிரண்டு ஒற்றுமையின் வலிமையை எடுத்துக் காட்டினர்.
கெ அடிலான் மகளிர் பிரிவுக்குப் போட்டியிடும் தமிழ்ப் பெண்கள், உச்சமன்றத்திற்கு களம் காண்போர், இளைஞர் பிரிவு பொறுப்பிற்கு போட்டியிடுவோர் அனைவரும் தத்தம் நிலை, நிகழ்கால அரசியல் போக்கு ஆகியவற்றை எடுத்துக்கூறி தங்களுக்கு தனித் தனியே ஆதரவு திரட்டினர்.

சட்டமன்ற உறுப்பினர் வசந்தி, புக்கிட் பிந்தாங் தொகுதித் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர் சிவமலர் உட்பட அதிகமான மகளிரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, டாக்டர் சத்திய பிரகாஷின் கரங்கள் வலுப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.


