Thursday, April 2, 2026

அப்பா எம்ஜிஆர் பாட்டுக்கு ஆடி ஏமாற்றினார்: மகள் இன்னொரு வெற்றுத் திட்டத்தைக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறார்!

நூருல் இஸாவை வறுத்தெடுத்த மோகன்

கெ அடிலான் கட்சி துணைத் தலைவராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்திய சமுதாய பிரச்சினைகளைக் களைய, தெளிவான கே.பி.ஐ.யை உள்ளடக்கி நான்கு தூண் திட்டத்தை அமல்படுத்துவேன் என்று கூறியதற்கு மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராஃப் ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இது அவமானகரமானது; தெளிவற்ற வாக்குறுதிகளாலும் அரசியல் அறிவிப்புகளாலும் இந்திய சமூகத்தை சமாளித்துவிட முடியும்” என்று மற்ற அரசியல்வாதிகளைப் போல இவரும் நினைக்கிறார்; போக்கு காட்டும் இத்தகைய அரசியல் விளையாட்டை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.”

பிகேஆர் உறுப்பினர்களையும் இந்திய வாக்காளர்களையும் வளைப்பதற்கான ஓர் அரசியல் சூழ்ச்சி இதுவென்று மோகன் தெரிவித்திருக்கிறார்.

“நூருல் இஸாவின் தந்தை பல தசாப்தங்களாக மலிவான எம்ஜிஆர் பாடல் நடனங்களால் இந்திய சமூகத்தை ஏமாற்றினார் – இப்போது மகள் மற்றொரு வெற்று, மறுசுழற்சி செய்யப்பட்ட திட்டத்தைக் கையில் எடுக்கிறார். இந்தியர்களை முட்டாள்கள் என்று இவர்கள் நினைப்பதுடன், இவர்கள் அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகளை இந்தியர்கள் கண்மூடித்தனமாக காலமெல்லாம் கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றனர் போலும் என்று மோகன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெடித்துள்ளார்.

இவர்களின் வெற்று வாக்குறுதிகளாலும் அரசியல் துரோகத்தாலும் இந்திய சமூகம் சோர்வடைந்துள்ளது; குறிப்பாக இந்திய ஆதரவு அலையில் சவாரி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியர்களைக் கைவிட்ட தலைவர்களால் இந்திய சமூகம் களைப்படைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இந்திய சமூகம் படிக்கல்லைப்போல பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரம் கிடைத்தவுடன், நம் பிரச்சினைகளை வசதியாக மறந்துவிடும் போக்கைப் பார்த்துப்பார்த்து, “போதும் போதும்” என்றாகிவிட்டது.

இவற்றை யெல்லாம் சுட்டிக் காட்டினால், ஹிண்ட்ராப் இயக்கத்தின்மீதும் எம்ஏபி கட்சிமீதும் இனவாத குற்றச்சாட்டை சுமத்துகிறது கெஅடிலான்.

கெஅடிலான் கட்சியினர், பல்லின அரசியல் பற்றிப் பெரிதாகப் பேசுகிறார்கள், ஆனால் இந்தியர்தம் உரிமைக்காகப் போராடும் தங்களை இனவாதிகள் என்று மோசமாக சித்தரிக்கின்றனர். ஓரங்கட்டப்பட்ட சமூகத்திற்காகப் போராடுவது எப்போதிலிருந்து இனவெறியாக மாறியது என்று வினாத் தொடுத்துள்ள மோகன்,

“அரசியல் சந்தர்ப்பவாதிகளால் இந்திய சமூகம் கிள்ளுக் கீரையைப் போல நடத்தப்படுவதற்கு முடிவு காணவேண்டிய நேரம் இது” என்றும் மோகன் வலியுறுத்தி உள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை