Sunday, May 3, 2026

காஸாவில் மனித குல அவலம்: இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக பன்னாட்டு சமூகம் குரல் கொடுக்க வேண்டும்! -மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன்

கோலாலம்பூர், மே 24:
ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிரான நடவடிக்கையை விட காஸா மண்டலத்தில் பாலஸ்தீனர்களை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேலிய இராணுவமும் பிரதமர் நெட்டன் யாகு நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகள் உட்பட அனைவரையும் பட்டினியால் மடியும் அளவிற்கு நெருக்கடி ஏற்படுத்துவது மனித குல அவலமாகும். இதற்கு எதிராக பன்னாட்டு சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என்று மலேசிய இந்திய காங்கிரஸ்- மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ மூலம் ஐநா மன்றம் அனுப்பும் உணவுப் பொருட்களைக்கூட காஸா மண்டலத்திற்கு அனுப்பாமல் தடுத்து நிறுத்தும் ராணுவம், பாலஸ்தீன மக்களை அழிப்பதிலும் காஸா மண்டலத்தை வளைப்பதிலும் குறியாக இருப்பதாகத் தெரிகிறது.

இஸ்ரேல் நாட்டின் ஜனநாயகக் கட்சித் தலைவர் யாயிர் கோலன்கூட , நெட்டன் யாகு தலைமையிலான இராணுவ நடவடிக்கையை ஒரு போர் குற்றம் என்று சாடி இருக்கிறார்; இஸ்ரேலய முன்னாள் பிரதமர் யேகெட் ஓமரும் இதேக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

பிரிட்டிஷ், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் கூட இஸ்ரேலை வன்மையாக கண்டித்துள்ளன.

போர் முனையில் மக்களை, குறிப்பாக குழந்தைகளையும் சிறாரையும் பட்டினி-யால் சாக விடுவது போர் குற்றம் என்று இந்த மேலை நாடுகள் வகைப்படுத்தி உள்ளன.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈழ விடுதலைப் போரின்பொழுது இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் பொதுமக்களை எப்படி கொன்று குவித்ததோ அதைப்போல இஸ்ரேலிய இராணுவமும் காஸா மண்டலத்தில் ஆயிரக்கணக்கான சிறுவர்களையும் குழந்தைகளையும் பட்டினியால் மடிய வைப்பது ஒரு போர் ஆயுதமாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல்; வெளிப்படையான போர்க் குற்றம்.

இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மலேசிய அரசும் பன்னாட்டு சமூகமும் குரல் கொடுக்க வேண்டும் என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணை வேந்தருமான மு. சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை