
கோலாலம்பூர், ஜுன் 2-
தெலுக் இந்தானைச் சேர்ந்த பேறுகுறைந்த ஓர் இந்தியரின் கடை விவகாரம் தொடர்பில் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ளாமல், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் பேசியுள்ளவேளையில் பாதிக்கப்பட்ட இந்தியரின் விவகாரத்தை பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட்டின் கவனத்திற்கு கொண்டு செல்லப் போவதாக மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா தெரிவித்தார்.
“பேராக் மாநில மந்திரி பெசாரை சந்திப்பது தொடர்பில் நேரம் ஒதுக்கும்படி கேட்டு, கடிதம் அனுப்பி விட்டேன். அவரைச் சந்திக்கும்பொழுது, பேறுகுறைந்த இராமச்சந்திரன் விவகாரத்தைப் பேசி, அவருக்கு நீதி கிடைக்க வகை செய்வேன்” என்று டத்தோ முருகையா குறிப்பிட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கெப்போங் மஇகா தொகுதித் தலைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் இந்திய உயர்க் கல்வி மாணவர்களுக்கு உதவும் நோக்கில் செராஸ், தாமான் மலூரி, எக்கோ ஃபார்மில் நடைபெற்ற தேநீர் உபசரிப்பு நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் டத்தோ முருகையா மேற்கண்டவாறு கூறினார்.
தெலுக் இந்தான் நகராண்மைக்கழகம், தன் கடையை எடுத்துக்கொண்டது தொடர்பில் இராமச்சந்திரன், அந்த நகராண்மைக்கழகம் உட்பட பல இடங்களிலும் நீதிகேட்டு கிடைக்காததால் தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நகராண்மைக்கழக நுழைவாயில் கண்ணாடியை உடைத்துள்ளார்.
அந்தப் பேறு குறைந்தவரின் செயலை எவரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவர் ஏன் அப்படி செய்தார் என்பதன் பின்னணி சிவநேசனுக்கு தெரியவில்லை.
எனினும் அந்தப் பேறுகுறைந்தவரின் பரிதாப நிலையைக் கண்டு, இவ்விவகாரம் தொடர்பில் தெலுக் இந்தான் நகராண்மைக்கழகத் தலைவரை நேரடியாக சந்தித்து, உண்மை நிலவரத்தை விளக்கியப் பின்னர் கடை திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்தப் பேறுகுறைந்த இந்தியருக்கு கடையை திரும்பக் கொடுக்கக் கூடாது என்றும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெலுக் இந்தான் நகராண்மைக்கழக அதிகாரிகளுக்கு தொலைபேசிவழி ஆட்சிக்குழு உறுப்பினரான சிவநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், அந்தப் பேறுகுறைந்தவருக்கு உதவி மஇகாவை, குண்டர் கும்பல்களுக்கு உதவுகிறது என்று சிவநேசன் வசைபாடியிருப்பது, ஓர் இந்தியருக்கு உதவுவதை ஓர் இந்தியரான சிவநேசன் தடுக்கிறார். இவர்தான் பேரா மாநில இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரா என்று டத்தோ முருகையா கேள்வி எழுப்பினார்.
தகவல்:
பி. மலையாண்டி


