
நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவனேசன் தெரிவித்துள்ள கருத்து, இந்து சமய நடவடிக்கைக்கும் ஆன்மீக வழிபாட்டு முறைக்கும் பேரளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இது கண்டனத்திற்கு உரியது என்று ம.இ.கா. தேசிய ஊடக ப் பிரிவுத் தலைவர் எல் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து பல வித சிக்கலை சந்தித்து வருகின்ற நிலையில், இவை போதாதென்று சிவனேசன் புதிதாக இன்னொரு குதர்க்கமான கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்து ஆலயங்கள் சிறியதோ பெரியதோ எப்படி இருந்தாலும் முன்பைவிட தற்பொழுது ஒரு புதிய கட்டத்தை எட்டி உள்ளன.
வழிபாட்டிற்கு மட்டும் என்று இல்லாமல் சுற்றுவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு உதவும் மையங்களாகவும் ஆலயங்கள் இந்நாட்களில் உருமாறி வருகின்றன என்பது சிவநேசனுக்கு தெரியாமல் போனது வியப்புதான்.
நாடெங்கிலும் மேம்பாட்டுத் திட்டங்களும் உருமாற்ற நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஆலயங்கள் பலவிதமான சிக்கலை எதிர்கொண்டுள்ளன. சில ஆலயங்கள் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ளன; சில ஆலயங்களை ஒட்டியிருந்த குடியிருப்புப் பகுதிகள் சற்று தள்ளி நிறுவப்பட்டுள்ளன. இன்னும் சில ஆலயங்களுக்கு அருகில் நெடுஞ்சாலைகளும் உயரமான கட்டிடங்களும் அமைக்கப்பட்டு போக்குவரத்து சிக்கலை எதிர்கொண்டு உள்ளன.
காலம் காலமாக அந்தந்த இடத்தில் தோன்றி இந்து சமய மக்களுக்கு சமய – ஆன்மீகப் பணியை ஆற்றிவரும் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள், புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு சுற்றுவட்டார மக்களுக்கு சமய சேவையுடன் திருமுறை பயிற்றுவித்தல், வெள்ளிக்கிழமையை சமய சொற்பொழிவு, ஏழைக் குடும்ப மாணவர்களுக்கு கல்விசார் உதவி செய்தல் என்றெல்லாம் சமயப் பணியுடன் சமுதாயப் பணியையும் சேர்த்து ஆற்றி வருகின்றன.
ஒரு சில வழிபாட்டுத்தலங்களில் பதிவு பெற்றுள்ள உறுப்பினர்கள் வேறு இடங்களுக்கு மாற்றி சென்றுள்ள நிலையில் அவர்களின் உறுப்பியம் தொடர்ந்து இடம்பெறாத நிலை ஏற்பட்டிருக்கலாம்.

ஒரு மாநிலத்தின் அமைச்சர் பொறுப்பில் இருக்கின்ற சிவனேசன் இதை எல்லாம் எண்ணிப் பார்க்காமல் பொத்தாம் பொதுவாக 100 உறுப்பினர்களுக்கும் குறைவான உறுப்பினர் எண்ணிக்கையை கொண்டிருந்தால் அந்த ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது; ஆலயங்கள் மேற்கொள்ளும் சமய-சமூக நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடியது என்று சிவசுப்பிரமணியன் சாடியுள்ளார்.
ஆலயங்கள் முறையான சங்கப் பதிவக(ROS) பதிவைக் கொண்டிருக்கின்றனவா?
ஆலய நிர்வாக குழுவினர் சீராக செயல்படுகின்றனரா?
நிதி நிர்வாகமும் கணக்கு அறிக்கையும் சரியாக இருக்கிறதா?
பக்தர்களுக்கான ஆன்மீக – சமய சேவையில் சீராக செயல்படுகின்றனரா என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் சார்பில் நீதி வழங்கலாமா கூடாதா என முடிவு எடுத்தால்கூட அதில் ஒரு நியாயம் இருக்கும்.
அதைவிடுத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மானியம் வழங்குவது என்னும் வழிமுறையை ஏற்படுத்துவது இல்லை என்று சொல்வதற்கு சமம்.
எனவே, இத்தகைய கருத்தை சிவனேசன் உடனே மீட்டுக் கொண்டு இந்து ஆலயங்களின் வழிபாட்டு நடைமுறைக்கு துணையாக இல்லாவிட்டாலும் தொல்லையாக மாறக் கூடாதென்று வலியுறுத்துவதாக சிவசுப்பிரமணியன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு மாநில அளவில் தெரிவிக்கப்பட்ட முடிவாக இருந்தாலும் நாடளவில் இது பிரதிபலிக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
நாட்டில் வாழுகின்ற குறிப்பாக பேரா மாநில இந்துக்களுக்கும் வழிபாட்டு தளங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்தை வெளியிட்டுள்ள சிவநேசனுக்கு எதிராக மலேசிய இந்து சங்கத்தின் பேராக் மாநில பேரவையோ மற்ற சமய அமைப்புகளோ மாநில அளவிலும் தேச அளவிலும் குரல் கொடுக்காமல் மௌனமாக இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
எதற்கெடுத்தாலும் அரசியல் தலைவர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்களா என்பதும் தெரியவில்லை.
இப்படிப்பட்ட தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டு புதிய தலைமுறைக்கு வழிவிடுவது நல்லது; ஆலய வழிபாட்டு முறைக்கும் சமயத்திற்கும் ஏதும் சிக்கல் – தடை வரும் பொழுது குரல் கொடுக்காத சமய அமைப்புகள் எதற்காக இருக்கின்றன என்று தெரியவில்லை என்றும் சிவ சுப்பிரமணியன் மேலும் தெரிவித்துள்ளார்..


