Saturday, September 12, 2026

மலேசிய இந்திய வாக்காளர்கள் பொருத்தமான அரசியல் முடிவை எடுக்க வேண்டிய நேரம் கனிந்துள்ளது: -விவேகானந்தன்

ஹிண்ட்ராஃப் மேற்கொண்ட ஜனநாயகப் புரட்சியின் விளைவாகத் தோன்றிய மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி.யை மலேசிய இந்தியர்கள் ஆதரிக்க வேண்டிய தெளிவான அரசியல் சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளதென்று கெடா மாநில எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராஃப் தலைவர் விவேகானந்தன் அம்மாசி தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணி, பெரிக்காத்தான் கூட்டணி மற்றும் பிகேஆர், ஜசெக கட்சிகளைச் சேர்ந்த மலாய் துவான்களும் சீன தௌக்கேகளும் மலேசிய இந்தியர்களின் உரிமையில் எப்படி நாடகமாடுகின்றனர் என்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் இந்தியரின் வாக்குகள் மட்டும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது; அதனால்தான் எம்ஜிஆரின் பாட்டுக்கு ஆடுவது அல்லது இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு பணிக்குழுவிற்கான முன்னெடுப்பு அல்லது ஒரு பெருந்திட்டம் என்றெல்லாம் அறிவிப்பு செய்கின்றனர்.

இவர்கள், நாடகமாடுகின்றனர் – போக்கு காட்டுகின்றனர் என்பதெல்லாம் தெரிந்திருந்தும் இந்தக் கட்சிகளில் இருக்கும் இந்தியத் தலைவர்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர்; பாட்டுக்கு தகுந்தபடி ஆடுகின்றனர்.

தாங்கள் புத்ராஜெயாவைக் கைப்பற்றியதும் இந்தியர்களின் பிரச்சினை யாவும் தீர்க்கப்படும் என்றெல்லாம் தோள்தட்டியவர்களின் கதை இப்பொழுது வேறாக இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஹிண்ட்ராஃப் இயக்கத்தை வழிநடத்தும் பொன்.வேதமூர்த்தி, எந்தக் கூட்டணியிலும் சேரவில்லை; இந்திய சமுதாய மேம்பாட்டிற்கான பெருந்திட்டத்தை முதன் முதலில் மஇகா-விற்கு முன்பே 2012இல் இவர்தான் உருவாக்கினார்.

அதன் அடிப்படையில்தான், மித்ரா-விற்கு ஆண்டுதோறும் 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கும் நடைமுறையே உருவானது.

இந்திய சமுதாயத்தின் கண்களைத் திறந்தது ஹிண்ட்ராஃப் இயக்கம்தான். இதன் தலைமை, இந்தியர்களின் மீட்சிக்கான தெளிவானக் கொள்கையைக் கொண்டிருக்கிறது; அதன் வெளிப்பாடாகத்தான், 13-ஆவது மலேசிய பெருந் திட்டத்தில் 25 பில்லியன் வெள்ளியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது; சமுதாயத்திற்காக குரல்கொடுக்க அஞ்சாமை, தம் பதவி பறிபோய்விடுமோ என்ற பயமின்மை போன்ற அரசியல் தலைமைத்துவ பண்புநலனைக் கொடிருப்பதும் இந்தத் தலைமைதான்.

இத்தகைய தலைமையைக் கொண்டிருக்கும் இந்தியர்க் கட்சியை ஆதரிக்க வில்லையென்றால், இந்தியர்களின் வாழ்வில் மாற்றம் என்பது ஏமாற்றமாகி விடும்.

அரசாங்கத்தில் இணைந்திருந்த இரு ஆண்டுகளில், பொன்.வேத மூர்த்தி, தன்னை நிரூபித்திருக்கிறார். அப்படிப்பட்ட அவரின் தலைமை யிலான எம்ஏபி கட்சியையும் ஹிண்ட்ராஃப் இயக்கத்தையும் ஆதரிக்கத் தவறினால், மாற்றம் என்பதை இந்தியர்கள் மறந்துவிட வேண்டியதுதான் என்று விவேகானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை