Wednesday, April 22, 2026

சுங்கை துவா சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல்: சிலாங்கூர் மாநிலத்திற்கு புதிய மந்திரி பெசார்

அணிதாவும் அரசியலும் கொரோனா தாக்கமும் உச்சத்தில் இருந்த நேரத்தில் நாட்டின் எட்டாவது பிரதமர் ஆனார் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்.

இவருக்கு ஏராளமான பெருமை(?) உண்டு. அணிதாவும் அத்தியாயத்தால் பிரதமர் ஆன இவர், அதே அணி தாவும் அத்தியாயத்தால் ஏறக்குறைய 20 மாதங்களில் பிரதமர் பதவியைத் துறந்தார்.

கொரோனாவை காரணம் காட்டி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காதது; அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியது; 2020 மார்ச் முதல் நாள் பிரதமராக பதவி ஏற்று கொண்ட இவர் 70க்கும் மேற்பட்டோரைக் கொண்ட அமைச்சரவையை அறிவிக்க சுமார் பத்து நாட்களை எடுத்துக் கொண்டது; பிரதமர் பதவியில் இருந்தவரை வெளிச்சத்தில் இருந்த இவரின் மருமகன், பிரதமர் பதவிக்குப்பின் இருட்டுக்கு சென்றது என்றெல்லாம் அதிகமான பெருமை உண்டு இவருக்கு.

அந்த பத்து நாட்களில் இவர் அடையாளம் கண்டவர்தான் வங்கியாளரும் அரசியல் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான தெங்கு ஸஃப்ருல்; முகைதீன் தலைமையிலான பெர்சத்துக் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தெங்கு ஸஃப்ருல் அம்னோவில் இணைந்தார்.

தற்பொழுது தன் சொந்த அரசியல் எதிர்காலம் கருதி அங்கிருந்து வெளியேறி மக்கள் நீதி கட்சி – பிகேஆரில் இணையவிருக்கிறார். அவரை அரவணைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் தயாராகிவிட்டார் எனத் தெரிகிறது;

அந்த துணிச்சலில்தான் கடந்த வாரத்தில் அம்னோவில் இருந்து விலகுவதாக அறிவித்த தெங்கு ஸஃப்ருல், பிகேஆரில் இணைவதற்கான பொருத்தமான தருணத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவர் அனேகமாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாநிலத்தின் மந்திரி பெசாராக(முதல் அமைச்சராக) வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்று தெரிகிறது.

அதற்கு ஏற்ப தெங்கு ஸஃப்ருல் வகித்து வந்த அந்நிய முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறையை தற்பொழுது சிலாங்கூர் மாநிலத்தை வழிநடத்தும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஏற்க இருப்பதாக தற்போதைய அரசியல் நிலவரம் சுட்டி காட்டுகின்றன.

இந்தத் துறை அம்னோவிற்கு ஒதுக்கப்பட்ட துறை என்பதால் ஒருவேளை அந்தக் கட்சி இந்தத் துறையைக் கோரவும் வாய்ப்பு உள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலை எழுந்தால் ஏற்கெனவே பிகேஆர் கட்சியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லி பதவி விலகிய பொருளாதார அமைச்சகமும் நிக் நஸ்மி நிக் அகமட் பதவி துறந்த இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகிய இரு துறைகளில் ஒன்றை அமிருடின் ஏற்கும் வாய்ப்பு உள்ளது

இருந்தபோதும் மாநிலத்தை வழிநடத்தும் தனிக்காட்டு ராஜாவைப் போன்ற மந்திரி பெசார் பதவியை விட்டு விலகுவதற்கு அமிருடின் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.

தான் மந்திரி பேசார் பதவியைத் துறக்கப் போவதில்லை என்றும் மத்திய அமைச்சரவையில் நாட்டம் கொள்ளவில்லை என்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திலேயே நீடித்து இந்த தவணையை நிறைவு செய்யப் போவதாக மூன்று நாட்களுக்குள் இரண்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கும் அமிருடின் ஷாரியிடம் பதற்றம் பளிச்செனத் தெரிகிறது.

ஆனாலும் அமிருடினின் எண்ணம் ஈடேறாது என்றுதான் தோன்றுகிறது; கடந்த சட்டமன்றத்தில் இடையில் வந்தவர் இந்த சட்டமன்றத்தில் இடையில் செல்ல இருக்கிறார்; அவ்வளவுதான்.

ஏற்கெனவே மந்திரி பேசராக இருந்து, கடந்த முறையும் அப்பதவியில் தொடர்ந்த டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, பி கே ஆர் கட்சியிலிருந்து விலகியதால் மாநில முதலமைச்சர் பதவியான மந்திரி பெசார் பொறுப்பையும் துறந்தார். அந்த இடத்தை நிரப்புவதற்காக வந்தவர்தான் அமிருடன் ஷாரி. இப்பொழுது தெங்கு ஸஃப்ரூலுக்கு வழிவிட்டு இடையிலேயே பதவிவிலக வேண்டிய சூழல் எழலாம்.

இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்து மத்தியக் கூட்டரசில் தெங்கு ஸஃப்ருல் வகித்த பதவியையோ அல்லது ஏற்கெனவே காலியாக இருக்கின்ற இரு துறைகளில் ஒன்றையோ வகிப்பதற்கான சாத்தியம்தான் அதிகம் இருக்கிறது.

கூடிய விரைவில் பி.கே.ஆர். கட்சியில் இணைய இருக்கும் தெங்கு ஸஃப்ரூலை அமர்த்துவதற்கு அன்வாரிடம் வேறு இடம் இல்லை.

ஒருவர் நாடாளுமன்ற மேலவையில் இரு தவணைகள் மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்பதால் அந்த இரு தவணைக்கான ஆறு ஆண்டு காலமும் இவ்வாண்டு பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தெங்கு ஸஃப்ரூலுக்கு முடிய இருக்கிறது.

இதையெல்லாம் எண்ணிப் பாராத மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, பத்து ஆண்டுகளுக்கு முன் அன்வார் மேற்கொண்ட காஜாங் நகர்வை பற்றியெல்லாம் பொருத்தம் இல்லாமல் பேசுகிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அன்வாரின் அரசியல் பயணம் வாழ்வா சாவா என்னும் நிலையில் இருந்தது; தவிர சிலாங்கூர் மாநிலத்தை அப்போது வழி நடத்திய பிகேஆர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் மேற்கொண்ட சில நடவடிக்கை பிகேஆர் கட்சியின் கொள்கைக்கு மாறுபட்ட நிலையில் இருந்ததால் அவரை மாற்றிவிட்டு, தான் அந்த இடத்தில் அமரலாம் என்ற இலக்கை நிர்ணயித்து காஜாங் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பகமான ஒருவரை பதவிவிலக வைத்து அந்த இடத்தில் தான் களமிறங்க திட்டம் வகுத்தார் அன்வார்.

இதை அறிந்து அரண்டு மிரண்ட நிலைக்கு ஆளான பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரஸாக், ஓரின சேர்க்கை வழக்கில் உயர் நீதிமன்றம் விடுவித்திருந்த அன்வார் மீதான வழக்கை தூசி தட்டி எடுத்து அவசர அவசரமாக மேல்முறையீடு செய்தார்.

அதில் அன்வார் குற்றவாளிதான் என அறிவிக்கப்பட்டு சிறைக்கும் அனுப்பப்பட்டார்.இதனால் காஜாங் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அன்வார் போட்டியிட முடியாமல் போக, அவரின் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் களமிறங்கினார்.

அவர் மந்திரி பெசாராக பொறுப்பு ஏற்பதற்கு சிலாங்கூர் மாநில அரண்மனையின் இசைவு கிட்டாத நிலையில் அஸ்மின் அலி அந்த பொறுப்பை ஏற்றார்.

அதைப்போல, அந்த நகர்வு எப்படி தோற்றதோ அதேப்போலத்தான் இதுவும் தோல்வியில் முடியும் என்று அமிருடன் ஷாரி சொல்வது கொஞ்சமும் பொருத்தமாக இல்லை.

அந்த நேரத்தில் மத்திய கூட்டரசாங்கத்தை வழிநடத்தியது தேசிய முன்னணி; சிலாங்கூர் மாநிலத்தை ஆண்டது எதிர்க்கட்சிக் கூட்டணி(பி.கே.ஆர். தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி) இப்பொழுது மத்தியிலும் மாநிலத்திலும் ஒற்றுமை அரசாங்கங்கள்தான் நடைபெறுகின்றன; தவிர கருத்து ஒருமித்த நிலையில் இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்படுவதால் அமிருடின் ஷாரிக்கு வேறு வழியில்லை; சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து மத்திய அமைச்சராக பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது; ஆனாலும் அமிருடின் ஷாரியின் அரசியல் பயணத்தில் இது ஒரு பின்னடைவாக அமையக்கூடும்; அதேவேளை, அன்வாருக்கும் வேறு வழிஇல்லை; தெங்கு ஸஃப்ரூலுக்கும் இதைவிட்டால் மாற்றுவழி கிடையாது.

மொத்தத்தில் பத்து மலை திருமுருக திருத்தலத்தை ஒட்டியுள்ள சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி கூடிய விரைவில் இடைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது என்று ஊகிக்கலாம்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை