Wednesday, April 15, 2026

உலக அமைதியைக் கெடுக்கும் இஸ்ரேல்!ஏவிவிட்டு கள்ள மௌனம் காக்கும் அமெரிக்கா!!அணுஆயுதப் போராகவோ 3-ம் உலக யுத்தமாகவவோ மாறும் அபாயம்?

ஈரான்மீது இஸ்ரேல் வல்லடியாக தாக்குதல் மேற்கொண்ட ஒரே நாளில், கச்சா எண்ணெய் உலக சந்தையில் ஏற்றம் கண்டுள்ளது; இதனால், எரிநெய்-பெட்ரோல் விலை அதிகரிக்கும் ஆபத்து நேர்ந்துள்ளது. அதைப் போல, தங்க சந்தையும் திடீரென தங்க சேமிப்பிலும் மூதலீட்டிலும் இலக்கு கொண்டுள்ளதால், அதன் விலையும் ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்துள்ளது;

மலேசிய தங்க சந்தையில் ஒரே நாளில் கிராமுக்கு பத்து வெள்ளி விலை அதிகரித்துள்ளது; ஒரு பவுனுக்கு எண்பது வெள்ளி அதிகரித்து இரண்டு சதவீத உயர்வை ஒரே நாளில் எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது: அதைப்போல அன்றாடம் டன் கணக்கில் தங்க வணிகம் நடைபெறும் இந்தியாவில், ஒரு பவுன் தங்க விலை முக்கால் இலட்ச ரூபாயை எட்டியுள்ளது. குடும்பப் பெண்கள் மயக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அணு ஆயுத நாடுகளான ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே ஆண்டுக் கணக்கில் போர் நீடிக்கும் நிலையில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான போரும் இன்னொருபுறம் ஆண்டுக் கணக்கில் தொடர்கிறது.

இரண்டு சண்டையுமே ஆசிய மண்டலத்தை ஒட்டி நடைபெறுகிறது. ரஷ்யாவில் இருந்து பிரிந்த யுக்ரேன், நேட்டோ அமைப்பில் உறுப்பியம்பெற காட்டிய முனைப்பை பொறுக்கமாட்டாத ரஷ்யா, யுக்ரேன்மீது ஒருசார்பாக போர்தொடுத்தது.

இது போர் அல்ல; வெறும் இராணுவ நடவடிக்கைதான் என்று ரஷ்ய அதிபர் விளாடிர்மின் புடின், சப்பைக்கட்டு கட்டும்விதமாக சொன்ன விளக்கம் புதுமையாக இருந்தது.

பாலஸ்தீனத்தை எப்படி வளைக்கலாம், ஹமாஸ் இராணுவத்தை எப்படி நசுக்கலாம் என்று ‘உறுமீனை எதிர்பார்த்து காத்திருந்த கொக்கின்’ நிலையில் இருந்த இஸ்ரேலுக்கு, 2023 அக்டோபர் மாதம் 7-ஆம் நாள், ஹமாஸ் ஆயுதக் குழுவினர் மேற்கொண்ட ஒரு தன்மூப்பான நடவடிக்கை, வசதியாகப் போய்விட்டது;

இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் ஏராளமான திருகூர்தி(ட்ரோன்)களை ஏவிய ஹமாஸ் இராணுவத்தினர், அதுவும் ஓர் உல்லாச நிகழ்ச்சிக்காக சென்ற சிறார்-குழந்தை-பெண்கள் என நூற்றுக் கணக்கானோரை சிறைப்பிடித்தனர்; ஆயிரக் கணக்கான அப்பாவியர் உடல்-உயிர்ச் சேதத்திற்கு ஆளாகினர்.

இதுதான் சமயம் என்று, ஹமாஸ் ஆயுதக் குழுவினரை அழிக்க முனைந்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக் குழுவினரை எப்படியாவது அழித்து முடிக்கும் முனைப்பில் வருடக் கணக்கில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இதை சாக்காக வைத்து, பாலஸ்தீன மக்களை அடியோடு ஒழிக்கும் வன்கொடுமையைப் புரிகிறது.

இதுவோர், இன அழிப்பு நடவடிக்கையாகும்.

மருந்தில்லாமல், உணவில்லாமல், சிறாரையும் கர்ப்பினியர் உள்ளிட்ட பெண்களையும் சாவின் விளிம்பிற்குத் தள்ளுகிறது இஸ்ரேலிய கொடுங்கோல் இராணுவம்.

இப்படி ஆண்டுக் கணக்கில் போர் முனையில் நிற்கின்ற இஸ்ரேல், திடீரென இன்னொரு பக்கம் ஈரானைத் தாக்கவேண்டிய அவசியம் என்ன? இந்தத் துணிவும் திணவும் எப்படி வந்தன?

இந்த விசயத்தில், இஸ்ரேல், ஓர் அடியாள்தான்; ஏவிவிட்ட பெரும்பண்ணையான் அமெரிக்காதான்.

இயற்கை எண்ணெய் வள மண்டலமான வளைகுடா நாடுகள் மொத்தமும் தன் கட்டுப்பாட்டின்கீழ் வரவேண்டும் என்று விரும்பிய அமெரிக்காவிற்கு சிம்மக் கனவாக விளங்கினார் சதாம் உசேன்.

‘உன்ன வளர்த்துவிட்டதே நான்தான்; இப்பொழுது என்னையே எதிர்க்கிறாயா’ என்று கொக்கரித்த அமெரிக்காவைப் பார்த்து, ‘இத்துணைக் காலமும் உனக்கு ஏவலாளாக இருந்தது போதாதா? இன்னமும் உனக்கு நான் கண்காணியா என்ன? வேலையைப் பார்’ என்று முரண்பட்ட சதாம் உசேனை வீழ்த்த அமெரிக்கா மேற்கொண்ட பித்தலாட்டம்-கோயபல்ஸ் பொய்தான்.. .,

‘ஈராக்கில் இரசாயன ஆயுதங்களை சதாம் பதுக்கி வைத்துள்ளார்; இது உலகிற்கே ஆபத்தானது’ என்று பன்னாட்டு அரங்கில் மனங்கூசாமல் கூறியது!

இவ்வாறு இடைவிடாமல் சொல்லிவந்த ஜார்ஜ் W. புஷ், சதாம் உசேனின் ஒரு மகளைத் தவிர குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரின் குறுதியைக் குடித்து முடித்து, சதாமையும் தூக்கிலிட்டபின், ஈராக்கில் இராசன ஆயுதம் இருப்பதாக சொன்னதில் உண்மை இல்லைதான் என்று அந்த ஜூனியர் புஷ் கடந்து போனார்.

அமெரிக்காவிற்கு குடியரசுக் கட்சி சார்பில் அதிபராக வரும் அனைவரும், இனவெறியராகவும் இரத்தப் பருகியராகவும்தான் உள்ளனர்.

நிக்சன் முதல் தற்போதைய டிரம்ப் வரை அப்படித்தான் உள்ளனர். ஏறக்குறைய நான்கரை ஆண்டுகளுக்குமுன், ஜோ பைடன், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராகத் தேர்வுபெற்ற நிலையில், அவரைப் பதவியேற்க விடாமல், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறாமல் சண்டித்தனம் செய்ததுடன் இனவாத போலீசாரையும் தன் ஆதரவாளர்களையும் ஏவிவிட்டு, அங்கு கலவரம் புரிந்தவர் டிரம்ப்;

இதனால், அதிகமானோர் இறக்க நேர்ந்தது; ஒருவழியாக பதவியேற்ற ஜோ பைடன், முதல் பணியாக டிரம்ப் உட்பட கலவரம் புரிந்த அனைவரையும் வளைத்து, வழக்குத் தொடர்ந்தார்; டிரம்பைத் தவிர பிற அனைவரையும் சிறையில் தள்ளினார்.

இப்பொழுது மீண்டும் அதிபரான டிரம்ப், முதல் வேலையாக, தனக்காக கலவரம் புரிந்து, சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அனைவரையும் விடுவித்துவிட்டார். நீதிமன்ற நடைமுறை அதிகாரத்திற்கு தக்கபடி சதிராடுவது அமெரிக்காவிலும் இடம்பெறுவது அப்பொழுதுதான் தெரியவந்தது.

சௌதி அரேபியா, சூடான், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளைப் போல பாலஸ்தீனமும், இரானும் தன்னிடம் மண்டியிட்டு தண்டலிட வேண்டும் என டிரம்ப் எதிர்பார்க்கிறார்.

பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சுதந்திர வேட்கையுடன் உள்ளனர்; இரானோ, தங்களுக்கான சுய அரசியலுடன் பொருளாதார வலிமையுடனும் இருப்பது அமெரிக்காவின் கண்களை உறுத்துகிறது.

அதனால், இரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது என்று உலக அரங்கில் அமெரிக்கா ஓலமிட்டு வருகிறது.

சதாம் இரசாயனக் குண்டுகளை சேகரித்து வைத்துள்ளார் என்று மகன் புஷ் சொன்னதற்கும் இப்பொழுது இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமினி அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறார் என்று குற்றம் சாட்டுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

நாங்கள், செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை மட்டுமே சேகரிக்கிறோம்; அதுவும் மின் உற்பத்திக்காகத்தானேத் தவிர, அணுஆயுதத் தயாரிப்புக்கு அல்ல என்று ஈரான் தொடர்ந்து செல்லிவந்த பின்னும் அதை நம்பாததைப் போல பாவனை செய்யும் அமெரிக்கா, இப்பொழுது ஈரான்மீது தன் நம்பிக்கைக்குரிய சண்டியர் இஸ்ரேலை ஏவிவிட்டுள்ளது.

டோனால்ட் டிரம்பை உள்ளும் புறமுமாக உறுத்தும் இரானின் அதி உயர்த் தலைவர் அதயதுல்லா அலி காமெனிதான், அந்த இஸ்லாமியக் குடியரசின் பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரையும் அங்கீகரிப்பவர்; நிராகரிப்பவரும் அவரே;

தவிர, அரசியல்(ஆன்மிகம்), ஆட்சி நிருவாகம், நிதி நிருவாகம், நீதி பரிபாலனம், பொதுத் தேர்தல், பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, கல்வி, இராணுவம் உள்ளிட்ட முக்கியமான அம்சங்களில் அலி காமினியின் முடிவே இறுதியானது-நிலையானது!

அப்படிப்பட்ட அதிகாரமிக்க இவரை மாற்ற வேண்டும்; உறுதியான இத்தலைமை அகன்றதற்குப்பின் இரானில் கலகமோ கலவரமோ ஏற்படுத்தப்பட வேண்டும் என்னும் மறைமுக இலக்குடன்,

கடந்த வெள்ளிக்கிழமை இரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் இஸ்ரேல்மீது சுடச்சுட பதில் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேலும் ஈரானும் இப்படி மாறிமாறி வான் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ள நிலையில், இந்த பதிலடி இத்தோடு நிற்காது என ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த 13ஆம் தேதி இரானின் அணுசக்தி நிலையங்கள் உட்பட பல இடங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், மூத்த அணு விஞ்ஞானிகள் அறுவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஈரானிய அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அபாசியும் ஒருவர். மேலும், இரான் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹுசைன் சலாமியும் கொல்லப்பட்டார்.

‘Operation Rising Lion’ என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில், இஸ்ரேலின் இருப்புக்கான இரானின் அச்சுறுத்தலை முறியடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அந்த அச்சுறுத்தலை அகற்ற எத்தனைக் காலம் ஆகுமோ அதுவரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் கூறியுள்ள நெதன்யாகு, தன் முதலாளி அமெரிக்காவிற்கு மறைமுகமாகக் முட்டுக் கொடுத்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமினி எச்சரித்த நிலையில், இஸ்ரேல் இதன் தொடர்பில் உடனே மறுவினை ஆற்றியது; இரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதை ஊகித்த இஸ்ரேல், அவசர நிலையைப் பிறப்பித்தது.

அதற்குள், இரான் ஏவுகணைத் தாக்குதலை சரமாறியாகத் தொடுத்த நிலையில் இஸ்ரேல் சற்று தடுமாறித்தான்போனது; முக்கிய இலக்குகள், ராணுவ மையங்கள் மற்றும் விமான தளங்கள்மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறியது. இந்த நடவடிக்கையை ‘True Promise 3’ என ஈரான் பறைசாற்றிக் கொண்டது.

இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர், 100க்கும் குறைவான ஏவுகணைகளையே ஈரான் ஏவியதாக சமாளித்தார்.

பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன அல்லது அவற்றின் இலக்குகளை அடையத் தவறிவிட்டன என்றும் குறைந்த எண்ணிக்கை-யிலான கட்டடங்களே தாக்கப்பட்டதாகவும் எக்ஸ் தளத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஈரானிய தாக்குதலில் குறைந்தது 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் கொல்லப் பட்டதாகவும் இஸ்ரேலின் அவசரசேவை மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவம் இரான்மீது மீண்டும் தாக்குதலை மேற்கொண்டதால் தெஹ்ரானிலும் புதிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

இந்தத் திடீர் நிலையை அவதானிக்கவும் அடுத்தக்கட்ட முடிவெடுக்கவும் ஐ.நா. பாதுகாப்பு மன்றம் உடனே கூடியது; அக்கூட்டத்தில் பேசிய ஈரான் பிரதிநிதி அமீர் சயீத் இராவானி, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், பொதுமக்கள் உட்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்ததாக கூறினார். மேலும், 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320 பேர் காயமடைந்ததாகவும், அதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் கொண்டாடினர்.

ஈரான் அரசின் ஃபார்ஸ் செய்தி முகமை இந்தத் தாக்குதல் இதோடு நிற்காது என தெரிவித்துள்ளது. இஸ்ரேலும் ஈரானும்ஒன்றையொன்று மாறிமாறி தாக்கி வரும் நிலையில், நிலைமை மேலும் தீவிரமடைவதை தடுக்கும்படி இரு நாடுகளையும் ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். மேலும், இஸ்ரேல் இன்னும் கொடூர தாக்குதல்களை நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தொடர் பதற்றம் நிலவி வரும் சுழலில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விமான சேவைகளும் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்குக் கரையில் வடக்கு எல்லையாக லெபனானையும் வடகிழக்கில் சிரியாவையும் கிழக்கில் ஜோர்தான் மற்றும் மேற்குக்கரையையும் தென்மேற்கில் எகிப்தையும் காஸாகரையையும் தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ள அதேவேளையில், புவியியல் அடிப்படையில் பல மாறுபட்ட தன்மைகளைக்கொண்ட சின்னஞ்சிறு நாடுதான் இஸ்ரேல்.

இப்படிப்பட்ட இஸ்ரேல், ஓர் இரகசிய குறிக்கோலுடன் ஈரான்மீது தொடுத்துள்ள போர் நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வரவேண்டும். ஒருவேளை, இஸ்ரேல் திட்டமிட்டபடி இந்தப் போர் நீடித்தால், அது அணுவாயுதப் போராக வெடிக்கும் வாய்ப்பு அதிகம்.

அப்படியொரு நிலை உருவானால், அது மூன்றாவது உலகப் போருக்கு வழிவகுக்கும். கோடிக்கணக்கான உயிர்களுக்கு அச்சுறுத்தல் எழும்.

மொத்தத்தில், டோனால்ட் டிரம்ப் அதிபராக நீடிக்கும்வரை, உலக அரசியல் கதகதப்பாகத்தான் இருக்கும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை