ஆளுந்தரப்பு பக்கத்தான், பாரிசான் இந்திய எம்பிக்கள் மௌனம்!

பதின்மூன்றாவது மலேசிய பெருந்திட்டம்(RMK-13) இல் இந்திய சமூகத்திற்காக ஒரு சிறப்புத் திட்டத்தை வகுப்பதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தொடர் புறக்கணிப்புக்கு எதிராக ஆளும் இரு அரசியல் கூட்டணிகளான பக்காத்தான் ஹரப்பான் மற்றும் தேசிய முன்னணியின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பதற்கு மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. மற்றும் ஹிண்ட்ராப் அமைப்பின் ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் கண்டித்துள்ளனர்.
ஜோகூர், லாபிஸ் பட்டணத்தில் பதின்மூன்றாவது மலேசிய பெருந்திட்டம்(RMK-13) தொடர்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய மோகன், RMK-13 இல் வெ.25 பில்லியன் ஒதுக்கீடு செய்யும்படி மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. மற்றும் ஹிண்ட்ராப் சார்பில் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தபோதிலும், அரசாங்கம் கடைப் பிடிக்கும் இத்தகைய அலட்சியப் போக்குகுறித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதிநிதிகள் வாய்த்திறக்காமல் மௌனத்தைக் கடைப் பிடிக்கின்றனர் என்று மோகன் சாடினார்.

“விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் 13வது மலேசியத் திட்டத்தில் (RMK-13) இந்திய சமூகத்திற்கான தெளிவான திட்டங்கள் எதையும் பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று வரை கோடிட்டுக் காட்டவில்லை” என்று மோகன் மேலும் கூறினார்.
பிரதமர் அன்வார், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சமூகத்தை தன் சொந்தக் குழந்தைகளைப் போல கருதுவதாக தெரிவித்துள்லார் என்பதை சுட்டிக்காட்டிய மோகன், பிரதமர் அன்வார், இந்திய சமூகத்திற்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது என்றார். மலேசிய குடிமக்களான இந்திய சமூகத்தினர், சமவாய்ப்பிற்காக அரசியலமைப்பு அடிப்படையில் உரிமைக்குர்ல எழுப்பினால், “இந்தியர்கள் இனவெறி கொண்டவர்கள்” என்று பிரதமர் அண்மையில் குற்றம் சாட்டியது மிகவும் கவலையளிக்கிறது.

“சட்டபூர்வமான, அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளைக் கோரும் சிறுபான்மை சமூகங்களை இனவெறி கொண்டவர்கள் என்று முத்திரை குத்தும் ஒரே நாடு மலேசியாவாகத்தான் இருக்கும்” என்றும் மோகன் கூறினார்.


