
13-ஆவது மலேசிய பெருந்திட்டம் வரும் அக்டோபர் திங்களில் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில், நலிந்த இந்திய சமுதாயத்தின் மீட்சியை இலக்காகக் கொண்டு மஇகா சார்பில் 8 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
உயர்க்கல்வி மாணவர்களுக்கான எண்ணிக்கையை பொது பல்கலைக்கழகங்களின்வழி அதிகரித்தல், மகளிர் மறுமலர்ச்சிக்கான முன்னெடுப்பு, இந்திய பாரம்பரிய தொழில் மேம்பாடு, பொருளாதார மறுமலர்ச்சி உள்ளிட்ட கோரிக்கைகளை இலக்காகக் கொண்டு இந்த எட்டு அம்சத் திட்டம் வகுக்கப்பட்டு ஒற்றுமை அரசாங்கத்தின் பார்வைக்கு மஇகா சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் சமூக-கல்வி- பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பில் மஇகா மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகளுக்கு மத்திய மடாணி அரசு தோள் கொடுக்க வேண்டும் என்று மேநாள் அமைச்சர்ருமான சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய நீரோட்டத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் மலேசிய இந்திய சமுதாயம் இனியும் பின்தங்கி விடாதபடி, அறிவிக்கப்படவிருக்கும் மலேசிய 13 வது பெருந்திட்டத்தின் வழி உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்;
நகரிய மேம்பாடு குடியிருப்பு இடமாற்றம் போன்ற காரணங்களால் மாணவர் எண்ணிக்கையில் சரிவு கண்டு மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள தமிழ்ப் பள்ளிகளை தற்காப்பதில் மடாணி அரசு அக்கறை காட்ட வேண்டும்.
உலகில் ஆறு செம்மொழிகள் உள்ளன; அவற்றில் இரு செம்மொழிகளை பேசுகின்ற மக்கள் வாழுகின்ற மலேசியாவில் அந்த இரு செம்மொழிகளில் முழு தகுதி பெற்ற செம்மொழியான தமிழைப் பயிற்று மொழியாக கொண்ட தமிழ் பள்ளிகளின் உருமாற்றத்திற்காக தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டதை போல தனி நிதி ஒதுக்கப்பட வேண்டும்;
வாழ்க்கைச் சூழல் மாறிவிட்ட நிலையில் பொருள் விலை ஏற்றத்தால் வாழ்க்கையே சுமையாகி விட்ட நிலையில் நலிந்த இந்திய சமுதாயத்தின் மீட்சிக்காக சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதற்கான நிதியையும் டத்தோஸ்ரீ அன்வர் தலைமையிலான மடாணி அரசு ஒதுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ மு சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்
2030 ஆம் ஆண்டுக்குள் முழு வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும் நோக்கில் பயணிக்கும் மலேசிய அரசு, இந்தியர்களையும் அதில் இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும்.
மூத்த குடிமக்களை அரவணைத்து சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்
நான்காவது தொழில் புரட்சியை நோக்கி நாடு முன்னேறும் வேளையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப தளங்களில் குறிப்பாக ‘திவெட்’ தொழில்நுட்ப கல்வி, திருகூர்தி(ட்ரோன்) தொழில்நுட்ப பயிற்சி போன்றவற்றில் மலேசிய இந்திய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எல்லாம் உள்ளடக்கிய 8 அம்சத் திட்டங்களை அரசின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் மேலும் தெரிவித்துள்ளார்.


