மலேசிய இந்து சங்கத்தில் டத்தோ வைத்திலிங்கம் அம்பலவாணர் மூட்டிய தீ, இப்பொழுது நன்றாக புகைகிறது;

உண்மையில் டத்தோ வைத்திலிங்கம் தலைமையேற்று இருந்த காலம், மலேசிய இந்து சங்கத்திற்கு பொற்காலம் என எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்;
இவரும் அப்பொழுது பொதுச் செயலாளராக இருந்த ‘சமயச்செல்வர்’ சோ பரஞ்சோதியும் மாற்றிமாற்றி அன்றாடம் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்கள்.
மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் தமிழறிஞர் ‘தமிழ்குயில்’ கா கலியபெருமாள் பக்தியும் பகுத்தறிவும் என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுதி வந்தது, ஏராளமான வாசகர்களை ஈர்த்தது. அதில் சிந்திக்க வைக்கும் கருத்துக்களும் இந்து சமய மூட நம்பிக்கைக்கு வெளிச்சமிடும் அம்சங்களும் அவ்வப்பொழுது வெளிப்படும்.
இதைக் கண்டு எரிச்சல் அடைந்த சோ பரஞ்சோதி, ஆதி குமணனுக்கு கடிதம் எழுதி பக்தியும் பகுத்தறிவும் அங்கத்திற்கு கண்டனமும் தெரிவித்து இருந்தார். ஆதி குமணன் உடனே அதை நிறுத்தி விட்டார். அந்த அளவிற்கு வைத்திலிங்கமும் பரஞ்சோதியும் ஊடகத்தில் செல்வாக்கு பெற்றிருந்தனர்
இவர்கள்தான் இப்படி என்றால் மாநிலப் பேரவைகள் சார்பிலும் வட்டாரப் பேரவைகளின் சார்பிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி, திருவிழா, சமய நிகழ்வு என்றபடி அறிக்கைகள் நாளேடுகளில் வந்த வண்ணமாகவே இருக்கும்.
அப்படிப்பட்ட வைத்திலிங்கம் அதே இந்து சங்கத்தை பாழும் கிணற்றில் தள்ளிவிடும் விதமாக, பாதகமான ஒரு சட்டத் திருத்தத்தை மேற்கொண்டார்.

மலேசிய இந்து சங்கத்தில் தலைமை மாற்றம் இருந்தால் அதன் உறுப்பினர்கள் அத்தனை பேரும் தேசிய அளவில் அணிதிரண்டு வாக்களித்து தேசிய தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
புத்தாயிரத்தாம் ஆண்டு தொடக்க காலத்தில், எழுபது வயதை தொட்டிருந்த வைத்திலிங்கம், இந்து சங்கத்தின் தேசியத் தலைவரை அதன் உறுப்பினர்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறையை அடியோடு மாற்றி 27 பேர் கொண்ட நிர்வாக குழுவை நடைமுறைப் படுத்தினார்.
நிறுவனச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்து சங்கத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த சட்டத் திருத்தத்திற்கு அரசாங்க அனுமதியும் கிடைத்தது. அந்த அனுமதி கிடைத்த நேரத்தில் வைத்திலிங்கம் அடைந்த இன்பத்திற்கு எல்லையே இல்லை.
அந்த 27 பேர் கொண்ட குழுவில் இருந்துதான் தேசியத் தலைவர், தேசிய துணைத்தலைவர், உதவி தலைவர்கள், தேசியச் செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அத்தனை பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்த 27 பேரில் தன்னையும் சேர்த்து 14 பேரை எவர் வசப்படுத்துகிறாரோ அவர்தான் தேசியத் தலைவர்.
இந்தச் சட்ட அமலாக்கத்தால் தனக்கு மிகுந்த பாதுகாப்பு என்றும் நீண்ட காலம் பதவியில் நீடிக்கலாம் என்றும் நினைத்திருந்த வைத்திலிங்கத்தின் கனவை சிதைத்தவர் டத்தோ ஆர்எஸ் மோகன்ஷான்.
வைத்திலிங்கம் தலைமையிலான 27 பேர் கொண்ட செயற்குழுவில் இடம்பெற்று இருந்த மோகன்ஷான், 13 பேரையோ அல்லது அதற்கு மேற்பட்டோரையோ தன்வயப்படுத்தி, தான் தலைவராகி, வைத்திலிங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் வெற்றிகரமாக.
இந்த 27 பேர் கொண்ட மத்திய செயலவையில் மூன்றில் ஒரு பங்கினர் ஆண்டுதோறும் பதவி விலகி புதிதாக ஒன்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அல்லது நியமிக்கப்பட வேண்டும்.

மத்திய செயலவையில் இடம்பெறுவோரின் பதவிக்காலம் மூன்றாண்டுகள்.
மலேசிய இந்து சங்கத்தில் ஆண்டு தோறும் ஒன்பது பேர் மூன்று ஆண்டு தவணைக்காலம் முடிந்து பதவி விலக, புதிதாக 9 பேர் அடுத்த மூன்று ஆண்டுத் தவணைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை நிலவுகிறது.
இந்து சங்கத்தின் மறுமலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பதுடன் ஆண்டுதோறும் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி இந்து சங்க தலைமை பொறுப்பாளர்களிடையே வேற்றுமையை வளர்த்து ஒற்றுமையை குலைக்கும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று அந்த இந்து சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஒரே ஒருவர் கூட நினைக்கவில்லை.
இது குறித்து நானும் பல முறை குறிப்பிட்டு விட்டேன். இந்த நடைமுறையை மாற்றி, பழையபடி தேசியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுவர வேண்டும் என்று இந்த சமய அமைப்பின் தலைவர்கள் எண்ணாததற்குக் காரணம், பல்லாயிரக்கணக்கான இந்து சங்க உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல் நிர்வாக குழுவின் 27 பேரில் 13 பேரை வசப்படுத்தினால் தானும் தலைவராகி விடலாம் என்ற நப்பாசை ஒவ்வொருவரின் மனதிலும் இருப்பதால், மாற்றத்தைப் பற்றி சிந்திக்காமல் இந்த சகதியிலேயே ஆண்டாண்டு காலமாக உழன்று இந்து சங்கத்தையும் உருக்குலைக்கின்றனர்
வைத்திலிங்கம் மேற்கொண்ட சட்டத் திருத்தத்தால் இந்த கட்டாயச் சூழல் இந்து சங்கத்தை ‘காலில் சுற்றிய பாம்பாக’ சூழ்ந்துள்ளது.
இந்த ஒன்பது பேர் யார்யார் என்பதில் தான் ஆண்டுதோறும் சிக்கல் முளைக்கிறது. .
புதிதாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதைவிட புதிதாக யார் வரக்கூடாது என்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

இதில் விதிவிலக்காக கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் இல்லை; 9 பேர் சுமூகமாக நியமிக்கப்பட்டனர்.
இந்து சங்கத்தில் ஆண்டுதோறும் சலசலப்பும் சச்சரவும் போட்டியும் நிலவுவதால் ஒற்றுமை என்பதை அறியாத இயக்கமாக இருக்கிறதே இந்த சமய அமைப்பு என்ற சலிப்பு, இந்து சமூகத்திலும் இந்திய சமுதாயத்திலும் அரசாங்கமட்டத்திலும் அண்மைய ஆண்டுகளாக பிரதிபலிப்பதைத் தவிர்ப்பதற்காக கடந்த ஆண்டு இந்து சங்கத்தில் போட்டி வேண்டாம் என்று முடிவு செய்து, சமரசமாக ஆண்டுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டனர்.
இந்து சங்கத் தலைமைமீது ஏற்கெனவே பரவலாக படிந்திருந்த அதிருப்தி அலை, மோசமான அபிப்பிராயம் ஆகியவற்றை களையும் பொருட்டும் இந்து சங்கத்தில் ஒற்றுமை நிலவுவதாக காட்டுவதற்கும் தேர்தல் வேண்டாம் என்று எண்ணியிருந்த இந்து சங்கத் தலைமைக்கு, மோகன்ஷானின் ஆதரவாளர்கள் களமிறங்க முற்பட்டது சங்கடத்தை ஏற்படுத்தியது.
முன்னமே திட்டமிட்டபடி போட்டியை தவிர்ப்பதற்காக, மோகன் ஷானின் ஆதரவாளர்களான விலாயா மாநில பாலகிருஷ்ணன், டத்தோ வீரன், சிலாங்கூர் மாநில பேரவையைச் சேர்ந்த கணமூர்த்தி உள்ளிட்ட நான்கு பேருக்கு இந்து சங்க நிர்வாக குழுவில் இடம் அளிக்கப்பட்டது.
இதனால் கடந்த ஆண்டு மலேசிய இந்து சங்கத்தில் போட்டி தவிர்க்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றது. இதனால் இந்து சங்கத்தின் தேசிய ஆண்டு கூட்டம் ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக நடைபெற்றதைக் கண்டு, அந்தக் கூட்டத்திற்கு சிறப்பு வருகை புரிந்த டத்தோஸ்ரீ மு. சரவணன், போட்டிருந்தால் பேருந்து பேருந்தாக இந்து சங்க உறுப்பினர்களை திரட்டி வந்து எதிரணியினரை தோற்கடிப்பதில் முனைப்பு காட்டும் இந்து சங்கத்தின் தன்மை, இந்த ஆண்டு போட்டியில்லாததால் அமைதியாக இருக்கிறதே என்று நகைச்சுவையாக பேசினார்.
உண்மையில் கடந்த 2024-ஆண்டுக் கூட்டம் வெளித் தோற்றத்திற்கு அமைதியாக தென்பட்டதேத் தவிர உள்ளுக்குள் புகைச்சலாகத்தான் இருந்தது. தேசியச் செயலாளரும் தேசிய பொருளாளரும் மாற்றப்பட்டிருந்தனர்.
மோகன்ஷானின் ஆதரவாளர்கள் இந்து சங்க மத்திய பேரவையில் இணைக்கப்பட்டதுடன் ஆண்டு கூட்டத்தின்போது அவருக்கும் இந்து சங்க ஆலோசகர் பொறுப்பும் வழங்கப்பட்டது; சங்கரத்னா பட்டமும் வழங்கப்பட்டது.
சங்கரத்னா பட்டத்தை பெற்றுக்கொண்ட மோகன்ஷான் மேடையில் இருந்து இறங்கியதும், ஆண்டுக் கூட்டம் மேடையில் தொடர்கிறதே என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் 13 ஆண்டு காலம் இந்த சங்கத்தை வழிநடத்தினோமே என்ற தலைமை பண்பும் இல்லாமல் தனக்குக்கீழ் பணியாற்றிய பெண் ஊழியர்களையும் ஆதரவாளர்களையும் திரட்டிக் கொண்டு மேடைக்குக்கீழே படமும் காணொளியும் எடுக்கும் படலத்தை அரங்கேற்றியதால் சலசலப்பு நிலவியது.
ஒட்டகம் முதலில் குடிசைக்குள் தலையைத்தான் நீட்டும்; அதன் பிறகு மெல்ல மெல்ல உடல் முழுவதையும் உள்ளே இழுத்துக் கொண்டுமுழு குடிசையையும் ஆக்கிரமிக்கும்.
அதைப்போல கடந்த ஆண்டு நான்கு பேரை உள்ளேத் திணித்த மோகன், இப்பொழுது இன்னும் 9 பேரை வசப்படுத்தினால் தான் இந்த ஆண்டு மீண்டும் தேசியத் தலைவர் ஆகிவிடலாம் என்ற கங்கணத்தில் போட்டியிடுவதற்காக அதிதீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜூலைத் திங்கள் இருபதாம் நாள் பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் இந்து சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், நாளை மறுநாள் சனிக்கிழமை-ஜூலை 12இல் இதன் தொடர்பில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற இருக்கிறது.
அப்பொழுது யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் முழுதாகத் தெரிய வரும்.
ஒருவேளை ‘மானியப்புகழ்’ மோகன்ஷான் மீண்டும் தலைவரானால், பழைய அத்தியாயம் புதுப்பிக்கப்படுமா என்று தெரியவில்லை.
மலேசிய இந்து சங்கத்தில் மானிய முறைகேடு நடைபெற்று இருப்பதாக பேச்சு அடிபடுகிறது என்று செய்தியாளர்கள் வினா எழுப்பினால், பத்து பேர் கூடி இருக்கிற இடத்தில் இப்படி எல்லாம் நடக்கத்தான் செய்யும்; அரசாங்க அதிகாரிகள் திருட வில்லையா? ஊழல் புரியவில்லையா என்று செய்தியாளர்களைப் பார்த்து எதிர்க் கேள்வி கேட்டதுடன் மானிய மடை மாற்றத்திற்கு முட்டுக் கொடுத்த அந்தப் பழைய அத்தியாயம் மீண்டும் புதுப்பிக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
மலேசிய இந்து சங்கத்தின் மத்திய செயலவைக்கு இந்த ஆண்டு 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். தேர்தல் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்ட நிலையில் நேற்று வரை ஒன்றாக இருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அணியணியாகப் பிரிந்து, அரசியலில் ஈடுபடும் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சியினரைப் போல ஆதரவு திரட்டுகின்றனர்; பழி தூற்றுகின்றனர்.
தங்களுக்கான சாதக அம்சங்களுடன் ஆதரவு திரட்டுவதைவிட எதிர்த் தரப்பினரின் பாதகத்தை முன்வைத்து சிறுமைப்படுத்துவதில் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர்.
ஆன்மீக எல்லையில் யார் யார் என்னென்ன சேவை செய்தனர்-செய்கின்றனர்; மலேசிய இந்து சமுதாய மறுமலர்ச்சிக்காக எந்தத் தலைவர் எந்தெந்தப் பணியை ஆற்றினார்? பக்தி இலக்கிய வளர்ச்சிக்காக யார் யார் என்னென்ன பணிகளை மேற்கொண்டனர்? திருமுறை வளர்ச்சியில் எந்தத் தலைவர் அதிகமாக பாடற்றி இருக்கிறார்? என்பதைப் பற்றி எல்லாம் சொல்லி பிரச்சாரம் செய்வதற்கு துப்பில்லாமல், யார் எந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார்? யாருக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்பதைப் பற்றி எல்லாம் வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றனர்.
ஏறக்குறைய இன்னும் பத்து நாட்களுக்கு மலேசிய இந்து சங்கம் ‘அல்லோல கல்லோல’ நிலைக்கு ஆட் படக்கூடும்.
1965 ஜனவரி 23-இல் இந்து சமய- இந்து சமூக மேம்பாடு கருதி பரமானந்தம் உருவாக்கிய மலேசிய இந்து சங்கத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் நாள் எந்த நாள்?

அந்த சங்கத்தின் இலச்சினையில் இடம் பெற்றுள்ள ‘தொண்டு – சேவை’ என்னும் கருத்து முன்னிலைப்படுத்தப்படும் நாள் எந்த நாள்?


