Wednesday, April 15, 2026

முடிவு ஆரம்பம்: கூட்டணியின் மௌனம், ஆட்சி மாற்றத்திற்கு அறிகுறி!

மக்களின் அவநம்பிக்கைக்கு ஆளாகிவிட்ட இந்த ஆட்சியை, எவரும் கவிழ்க்க வேண்டியதில்லை; ஒற்றுமை அரசாங்கத்தின் மையத்திலேயே அது உருவாகி வருகிறது. பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமைமீது வளர்ந்துவரும் அவநம்பிக்கையைக் குறிப்பிடும் வகையில், ஹசன் கரீம் எச்சரிக்கையும் மேலும் ஒன்பது எம்.பி.க்களின் முழக்கமும் அமைந்துள்ளன என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது வெறும் கருத்துவேறுபாடு அல்ல; ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம்; ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டாளிகளான ஜசெக, அமானா, தேசிய முன்னணி, ஜிபிஎஸ் மற்றும் ஜிஆர்எஸ் ஆகியவை இதை உணராமலும் அன்வார் பதவி விலகும்படி கோரிக்கை வைக்காமலும் தொடர்ந்து கள்ள மௌனம் காத்தால், இந்த அரசு ஒரு கட்டத்தில் தானாகவே கவிழ்ந்துவிடும்.

மடானி அரசுமீதான பொதுமக்களின் நம்பிக்கை, நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. சமூக ஊடக தளங்கள் அன்வாரின் தலைமையை நோக்கிய விமர்சனம், நையாண்டி, கேலிச் சித்திரங்களால் நிரம்பி வழிகின்றன. இன்னும் ஆபத்தான வகையில், ஒற்றுமை அரசாங்கத்திற்குள்ளேயே அதிருப்தி கருவாகி உருவாகி வருகிறது என்று சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஹசன் கரீம் விடுத்த எச்சரிக்கை தனிப்பட்டதல்ல; அது, நாளை வெடிக்க இருக்கும் கிளர்ச்சியின் இன்றைய முன்னோட்டமாகும். ரஃபிஸியும் 9 எம்.பி.க்களும் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னெடுக்கக்கூடும்; யாருக்குத் தெரியும்?. அரசியலில் எல்லாம் சாத்தியம்.

சற்றே எண்ணிப் பாருங்கள: 15-ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபின் 2022 நவம்பர் 20-இல் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 112 எம்.பி.க்கள் ஆதரவாக இருந்தனர், அதேவேளை, தேசிய முன்னணியின் 10 எம்.பி.க்கள் பெரிக்காத்தான் கூட்டணியை ஆதரித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அன்வார் தலைமையில் ஆட்சியில் இணைய விரும்பிய அம்னோ தலைவரால் அவர்கள் சமாளிக்கப்பட்டனர்.

போதாக் குறைக்கு அண்மைய நிகழ்வுகள் நீதித்துறை சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறை மீதான அத்துமீறலை அம்பலப்படுத்தியுள்ளன.

நீதித் துறை சுதந்திரத்தில் தலையிடும் பிரதமர் அன்வார், அதேப் பிரதமர் பதவியைப் பயன்படுத்தி, தனக்கு எதிராக யுசோஃப் ராவுத்தர் தொடுத்துள்ள பாலியல் தொடர்பான சிவில் வழக்கிலிருந்து மனம் கூசாமல் விலக்கு கேட்பதன்மூலம் பிரதமர் பொறுப்பிற்கும் நீதித்துறைத் சுதந்திரத்திற்கும் இடையே நலன் முரண்பட்டு நிற்கிறார் என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை