
மடாணி முழக்கத்துடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வழிநடத்தும் ஒற்றுமை அரசாங்கத்தின்மீது மக்கள் வேற்றுமை கொள்ளும்போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை மட்டுப்படுத்தவும் மக்களை சாந்தப்படுத்தவும் பல்வேறு வழிகளை மத்தியக் கூட்டரசு கையாளுகிறது.
இந்திய சமுதாயத்தை இலக்கு வைத்து புதிதாக ஒரு குழு புறப்பட்டிருக்கிறது. அது குழுவிற்குப் பெயர் SICC; சமூக மாற்றத்திற்கான நிலையான முயற்சி(Sustainable Initiative for Community Change) என்று சொல்லிக் கொண்டு புதிதாகப் புறப்பட்டுள்ள இந்தக் குழு, ஜூலை 03-ஆம் நாள் பெட்டாலிங் ஜெயாவில் ஒரு செய்தியாளர்க் கூட்டத்தை பரந்த அளவில் ஏற்பாடு செய்தது.
இந்த அமைப்பின் தலைவரும் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி மேநாள் உறுப்பினருமான சார்லஸ் சந்தியாகு, இந்திய சமுதாயம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பின்னடைவுகளைப் பட்டியலிட்டு, இதன் தொடர்பில் பிரதமரை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் சந்திப்பிற்கான நாள் கேட்டு காத்திருப்பதாகவும் கூறினார்.
சார்லசுடன் பிரதமர் துறையைச் சேர்ந்த இந்திய அதிகாரிகளும் மற்றும் பலரும் கலந்துகொண்டனர். இந்தியர்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிவதாகவும் அவர்கள் அதிக ஊதியம்பெற வழிவகை காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்து, இந்திய சமுதாயத்தை மடைமாற்றும் வேலை; பாலர் பள்ளிகளில் பயிலும் இந்திய சிறார்களுக்கான கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்தைச்சேர்ந்த ஒருவர் கூறினார். இதுவும் ஊரை திசைத்திருப்பும் கருத்து.
பாலர்க் கல்வி இருக்கட்டும்; மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்க் கல்விக்காக இந்த ஆண்டு இந்திய மாணவர்கள் எத்தனைப் பேருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதைப் பற்றி மூச்சுவிடாத இந்தக் குழுவினர், பாலர்க் கல்வியைப் பற்றி பேசுவது சமுதாயத்தின் ஆற்றாமையை சிதறடிக்கும் வேலை; மெட்ரிகுலேஷன் வாய்ப்புபற்றி கேட்டதற்கு சார்லஸ் உள்ளிட்ட அனைவரும் சொன்ன பதில் மெல்லிய புன்னகைதான்.

இந்திய சமுதாயத்திற்காக ஆண்டுக்கு நூறு மில்லியன் என்று அறிவித்துவிட்டு, பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம், பாலர் பள்ளிகளை நடத்துவோருக்கான நிருவாக செலவு உள்ளிட்டவற்றை மித்ரா நிதியில் இருந்தே எடுத்துக் கொள்கின்றனர்.
உண்மையில், இது கல்வி அமைச்சின் பொறுப்பு; மித்ரா நிதி என்ற பெயரில் கொடுத்துவிட்டு, அதிலிருந்தே பாலர்க் கல்விக்காக எடுத்துக்கொள்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை. இந்திய சமுதாயத்தின் அரசியல் எழுச்சியால் மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சிக்கு வந்த மக்கள் நீதிக் கட்சி -பிகேஆர், இந்திய சமுதாயத்திற்கென புதிதாக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. நஜீப் கொடுத்த 100 மில்லியனுக்குமேல் ஒரு வெள்ளிகூட அன்வார் கூடுதலாக வழங்கவில்லை; தமிழ்ப் பள்ளிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கி வந்த மானியமும் நிறுத்தப்பட்டது.
இதைப் பற்றி யெல்லாம் பேசாத சார்லஸ் குழு, அன்வாருக்கு வால்பிடிக்கும் விதமாக ஏதோதோப் பேசி, சமுதாயத்தில் நிலவும் கொந்தளிப்பைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பிரதமரின் மகளும் பிகேஆர் கட்சி துணைத் தலைவருமான நூருல் இஸ்ஸாவும் ஒரு அணியைப் போல செயல்பட்டு ஆளும் கூட்டணிக்கு எதிரான மக்கள் நிலையை மாற்றப் பார்க்கிறாரொ என்றெண்ணத் தோன்றுகிறது. இவர், அண்மையில், திரைக்குப் பின்னால் இந்திய சமுதாயத்திற்காக ஏதேதோ செய்வதாகக் கூறியிருக்கிறார். அந்த ‘ஏதேதோ’ என்பது, என்னவென்றுதான் தெரியவில்லை.
இந்த நிலையில், நேற்று நாட்டின் புதிய நிருவாக நகரான புத்ராஜெயாவில் வழக்கறிஞர் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட பேரணியிலும் நூருல் கலந்து கொண்டிருக்கிறார்.
இதன் நோக்கம், அந்தப் பேரணியின் தாக்கத்தை முனைமழுங்கச் செய்வதாகத்தான் இருக்கும். நாட்டின் நீதித் துறைக்கான உச்ச நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்; அரசியல் தலையீடு கூடாதென்பதை வலியுறுத்தித்தான் இந்தப் பேரணி நடைபெற்றது.

நீதித்துறை நியமனங்களில் அதிகாரமட்டத்தின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் வழக்கறிஞர் மன்றம் ஏற்பாடு செய்த இந்தப் பேரணி புத்ராஜெயா நீதிமன்ற மாளிகையில் இருந்து புறப்பட்டு பிரதமர் அலுவலகத்தை நோக்கி நேற்று பிற்பகலில் புறப்பட்டது.
வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்களான அம்பிகா சீனிவாசன், கேரன் ச்சியா, பாஸ் கட்சி தலைமைச் செயலர் தக்கியுடின் ஹசான், சட்டத்துறை மேநாள் தலைவர் டோமி தோமஸ், நாடாளுமன்ற மேலவை மேநாள் தலைவர் தான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் ஆகியோருடன் நூருல் இஸ்ஸாவும் கலந்து கொண்டனர்.
ஆளும் தரப்புக்கு மாறான இந்தப் பேரணியில் ஆளும் கட்சியின் துணைத் தலைவரான நூருல் இதில் கலந்துகொண்டது, பேரணியின் தாக்கத்தை மட்டுப்படுத்துவது அல்லது மந்தப்படுத்துவதாகத்தான் இருக்க முடியும்.
இந்த வகையில் நோக்கினால், வரும் 26-ஆம் நாள்(ஜூலை) நாட்டின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரில் பிரதமர் அன்வார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற இருக்கிற பேரணியிலும் நூருல் இஸ்ஸா கலந்துகொள்ளலாம் என்று ஊகிக்க இடமிருக்கிறது.
பாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் மலாய் அரசுசாரா அமைப்புகளும் ஒருசேரத் திட்டமிட்டுள்ள இந்தப் பேரணியின் வேகத்தைக் குறைக்கும் நோக்கில் நூருல் கலந்துகொண்டால், வியப்பிற்கு இடமில்லை.


