
தங்க கணேசன் தன்னிடம் வாக்களித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பின் பதவி விலகாமல் துரோகம் இழைத்ததுடன் பதவிமோகம் தீராத ஆர் எஸ் மோகன் ஷானுடன் சேர்ந்து மீண்டும் போட்டியிடுவதாக இந்து சங்கத்தின் நடப்பு துணைத்தலைவர் கணேஷ் பாபு வேதனை தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்து சங்கம், நிதிப் பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கின்ற நிலையில், இப்படி ஆண்டுதோறும் தேர்தல் நடத்துவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வெள்ளி விரயமாவதைப் பற்றி, பதவி ஆசை பிடித்த இந்த இருவருக்குமே அக்கறை இல்லை என்பதை மலேசிய இந்து சங்க உறுப்பினர்களுக்கும் இந்து சமுதாயத்திற்கும் தெரிவித்துக் கொள்வதாக கணேஷ் பாபு தெரிவித்துள்ளார்
2022 இந்து சங்க ஆண்டுக் கூட்டத்தின்பொழுது, ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அணியின் மூலம் மோகன் ஷானை எதிர் கொண்டோம். வெற்றியும் கண்டோம். அந்த அணிக்கு தலைமை ஏற்றிருந்தது தான்தான் என்றும் ஆண்டுக் கூட்டம் நெருங்கிய சமயத்தில் தங்க கணேசன் மலேசிய இந்து சங்கத்தை ஓர் ஆண்டு காலத்திற்கு வழி நடத்து விரும்புவதாக தன்னிடம் தெரிவித்த பொழுது, தான் மனமுவந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தேன்; இப்பொழுது மோகன் ஷான் தங்க கணேசன் இருவரையும் ஒருசேர எதிர்க்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று கணேஷ் பாபு மலேசிய இந்து சங்க உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்
மித்ரா பிரச்சனையால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உட்பட்டவர் தங்க கணேசன் என்பதால் அவருக்கு விட்டுக் கொடுத்தேன்; பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க விரும்புவதாக தங்க கணேஷன் தெரிவித்தபொழுது அதற்கும் சம்மதித்தேன்.
தற்பொழுது ஒரு தவணைக்காலம்- மூன்று ஆண்டுகளுக்குப் பின் தலைமை பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டிய தங்க கணேசன், பதவிமீது கொண்ட மோகத்தினால் தானும் தங்க கணேசனும் சேர்ந்து யாரை தோற்கடித்தோமோ அவருடனேயே சேர்ந்து கொண்டு தங்க கணேசன் என்னை எதிர்க்கிறார் என்பதை மலேசிய இந்து சங்கத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல; மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் தெரிவித்துக் கொள்வதாக கணேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
“தங்க கணேசன் தலைமைக் காலத்தில் நடைபெற்ற திருமுறை மாநாடு ஆலய மறுமலர்ச்சி மாநாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் தோள்கொடுத்து ஒத்துழைப்பு நல்கியவர்கள் தாங்கள்; எங்களுடைய ஆதரவு இல்லாமல் தனிப்பட்ட அவரால் ஒன்றும் நடந்திருக்காது.
இந்த நிலையில் நாங்கள் அவரை செயல்படவில்லை என்று இல்லாத ஒன்றை சொல்லிக்கொண்டு டத்தோ ஆர் எஸ் மோகன் ஷானுடன் கூட்டுசேர்ந்து கொண்டு தன்னை எதிர்க்கிறார் தங்க கணேசன்” என்று மலேசிய இந்து சங்கத்தின் தற்போதைய துணைத் தலைவர் கணேஷ் பாபு வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
13 ஆண்டு காலம் தலைவராக இருந்த மோகன் ஷான் தன்னுடைய காலத்தில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையும் செய்ததில்லை; அதைப்போல தங்க கணேசனும் எதுவும் செய்ததில்லை. இப்படிப்பட்ட இருவரும் சேர்ந்து கொண்டு இனிமேல் நல்லது செய்வதாக சொல்லிக் கொண்டு இந்து சங்க உறுப்பினர்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அன்பிற்குரிய மலேசிய இந்து சங்க உறுப்பினர்களே சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் மறுமலர்ச்சி அணி என்ற பெயரில் தன்னுடைய தலைமையில் தன்னுடன் ஜொகூர் மாநிலத் தலைவர் ஆர். ராமகிருஷ்ணன், தேசிய முன்னாள் உதவித் தலைவர் பினாங்கு முனியாண்டி, விலாயா மாநிலத் தலைவர் எஸ் பாலாமணி, மலாக்கா மாநிலத் தலைவர் கு. ஜெகசீலன், பேரா மாநிலத்தைச் சேர்ந்த ‘சங்கபூசன்’ நா. பெரியசாமி மற்றும் பாலகிருஷ்ணன் பினாங்கு மாநிலத்தின் இரா நவரசன், சேராஸ் வட்டாரப் பேரவையின் முன்னாள் தலைவர் இராமையா ஆகியோர் இந்து சங்கத்தை வழிநடத்த களம் இறங்கி உள்ளோம்.

தங்க கணேசன் வாக்கு தவறி நடப்பதுடன் தனக்கு நம்பிக்கை துரோகமும் புரிந்துள்ளார்; அவர் பக்கம் நியாயம் இல்லை என்பதால் அவருக்கு மலேசிய இந்து சங்கத்தின் தற்போதைய நிர்வாக குழுவிலும் அவருக்கு ஆதரவு இல்லை. இந்த நிலையில்தான் மோகன்ஷானிடம் சரணடைந்து என்னை எதிர்க்கிறார்.
இது தர்மமா? நியாயமா? என்பதை மலேசிய இந்து சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொண்டு மறுமலர்ச்சி- மாறுவோம் மாற்றுவோம் என்ற அணியின் பெயரில் போட்டியிடுகின்ற எங்களை ஆதரிக்கும் படி மீண்டும் கேட்டுக் கொள்வதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கணேஷ் பாபு மேலும் தெரிவித்துள்ளார்.


