
எது எப்படியோ? உலக அரசியல் அரங்கில் மலேசியாவின் பெயர் பெரிதும் போற்றப்பட்டதற்குக் காரணம், மலேசியாவில் 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக நிலவிய நிலையான அரசாட்சியும் அரசியல் நிலைத் தன்மையும்தான்.
அதைக் கெடுத்தது மகாதீரின் 2.0 ஆட்சிக்காலம்;
2018 மேத் திங்களில் நிலவிய அரசியல் போக்கு, 92 வயதான மகாதீருக்கு பிரதமர் பதவி வாய்ப்பை மீண்டும் தங்க தாம்பூலத்தில் வைத்து வழங்கியபோது, கிடைத்தற்கரிய அந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை செய்வதற்குப் பதிலாக, அன்வார் பிரதமராக வந்துவிடக் கூடாது என்பதையே இரவும் பகலும் தூக்கத்திலும் கனவிலும் நினைத்து நினைத்து;
நிர்வாகத்தையும் சீர்குலைத்து; தன்னுடைய பெயரும் கெட்டு ஒரு கட்டத்தில் தானே பதவிவிலக வேண்டிய சூழல் தானாக அமைந்தது; அதற்குப் பெயர்தான் “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்னும் இளங்கோவடிகளின் மக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்துசெம்மாந்த வரிகள்.
2018, 14-ஆவது பொதுத் தேர்தலின்போது, தனக்கு பேரளவில் ஆதரவு அளித்த சீன சமூகத்தை குளிர்விப்பதற்காக ஜ.செ.க.-வைச் சேர்ந்த லிம் குவான் எங்கிற்கு நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தார் துன் மகாதீர்.

நாட்டின் முதல் நிதி அமைச்சராக சீனர் இருந்தாலும் அதன் பிறகு வரிசையாக மலாய் இனத்தவர் தான் குறிப்பாக அம்னோக் கட்சியை சேர்ந்தவர்தான் நிதி அமைச்சர் பொறுப்பை வகித்து வந்த நிலையில் அத்தகைய பாரம்பரிய பதவி, சீன சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டதைக் கண்டு மலாய்ச் சமூகம் உள்ளுக்குள் கொந்தளித்த நிலையில், அதை சாந்தப்படுத்துவதற்காக அப்பொழுது சிலாங்கூர் மந்திரி பெசாராக(முதல் அமைச்சராக) இருந்த மக்கள் நீதிக்கட்சி-பிகேஆரைச் சேர்ந்த அஸ்மின் அலியை பொருளாதாரத் துறை என்று புதிதாக ஓர் அமைச்சகத்தை உருவாக்கி அதில் அமர்த்தினார் மகாதீர்.
இதன்வழி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சொல்லி அடித்தார் மகாதீர்.
டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை தேசிய அரசியலுக்கு கொண்டு வந்தததன்மூலம் மக்கள் நீதிக் கட்சி- பி.கே.ஆரில் பிளவு ஏற்படுத்தியதுடன் பொறுமிக்கொண்டிருந்த மலாய் சமூகத்தில் அமைதியையும் ஏற்படுத்தினார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிதி அமைச்சராக இருந்த லிம் குவான் எங், சாதாரண லிம் குவான் எங் இல்லை.
நீண்ட அரசியல் பாரம்பரியம்மிக்க ஜனநாயக செயல் கட்சி-ஜசெக’வின் தலைவராகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நீண்ட காலமாக இருந்தவர்; தவிர, பத்து ஆண்டுகள் நாட்டின் வடபுலத்து பினாங்கு மாநிலத்தை நிர்வகித்தவர் என்ற பெருமையையும் கொண்டவர்.
அப்படிப்பட்ட லிம், 2019 தீபாவளி சமயத்தில், பொன். வேதமூர்த்தி மித்ரா நிதியை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்தார் என்று சிறுபிள்ளைத்தனமாக ஒரு கருத்தை வெளியிட்டார்.
2018 மே திங்கள் பத்தாம் நாள் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைந்தபின், பரபரப்பெல்லாம் அடங்கிய நிலையில் ஜூலை மாதத்தில்தான் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட பொன் வேதமூர்த்தி, பிரதமர் துறையின் கீழ் ஒற்றுமைத் துறை அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டார்.

ஒற்றுமைத் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தியிடம் இந்திய சமூக பொருளாதார கல்வி உருமாற்றப் பிரிவான ‘செடிக்’ நிர்வாகத்தையும் ஒப்படைத்தார் துன் மகாதீர்.
அந்த செடிக் அமைப்பைத்தான் மித்ரா என்று மறு உருவாக்கம் செய்தார் பொன் வேதமூர்த்தி.
பொன் வேதமூர்த்தி பொறுப்பேற்றதும் மித்ரா நிதி ஒதுக்கீட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுசாரா அமைப்புகளுக்கும் தனி தொழில் முனைவோருக்குமான நிதியை ஒரேக் கட்டத்தில் மொத்தமாக அளிக்கவில்லை.
மித்ரா நிர்வாகத்திற்காக ஒரு சிறப்பு இணைய தளத்தை உருவாக்கி அதில், மித்ரா நிதிக்காக எந்தெந்த நிறுவனம் அல்லது எந்தெந்த தனி தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற விவரத்தை எல்லாம் வெளியிட்டதுடன் அப்படிப்பட்டவர்களுக்கு மூன்று கட்டங்களாக நிதியை ஒதுக்கினார்.
தகுதி வாய்ந்த நிறுவனங்களாக அல்லது தனி தொழில் முனைவோராக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு, அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், முதலில் 40% நிதி வழங்கப்பட்டது;
சம்பந்தப்பட்டவர்களின் திட்ட அமலாக்கத்தை உறுதி செய்தபின் இரண்டாம் கட்டமாக 50 விழுக்காட்டு நிதி அளிக்கப்பட்டது;
முழு திட்டமும் நிறைவேற்றப்பட்டபின் மீத 10 விழுக்காட்டு நிதியை வழங்குவது என்ற கொள்கையை பொன். வேதமூர்த்தி அமுல்படுத்தினார்.
இத்தகைய நடைமுறையை முழு வீச்சில் நடைமுறைக்கு வருவதற்குள் 2018-ஆம் ஆண்டு, நிறைவை. எட்டிவிட்டது.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 31ஆம் நாள், அரசுசார் நிறுவனங்கள் தங்கள்வசம் இருக்கின்ற நிதியை, அரசக் கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதும் அடுத்த ஆண்டு தொடங்கியதும் அதை மீள பெற்றுக் கொள்ளலாம் என்பதும் அரசாங்க விதி.
அதன் அடிப்படையில்தான் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் நாள் மித்ராவிடம் கைவசம் இருந்த நிதியை அரசாங்க கருவூலத்திடம் ஒப்படைத்தார் பொன் வேதமூர்த்தி.
2019 ஆம் ஆண்டு தொடங்கியதும் அந்த நிதியை திரும்ப பெற்றுக் கொண்டு 2019 ஆம் ஆண்டு நிதி பராமரிப்பிற்கான தொடர் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார் பொன் வேதமூர்த்தி.
அப்பொழுதுதான், Mitsubishi, Toshiba, Dell, Microsoft உள்ளிட்ட எண்ணற்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் மித்ரா சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு இந்திய இளைஞர்களுக்கு பலவிதமான தொழில்நுட்ப திறன் பயிற்சிகளை வழங்குவதற்கு மளமளவென்று காரியம் ஆற்றினார். அந்தக் கட்டத்தில் நான்காவது தொழில் புரட்சி குறித்து அதிகமாக பேசிய தலைவர் பொன் வேதமூர்த்தி ஒருவர்தான்; இது குறித்த விழிப்புணர்வையும் இந்திய இளைஞர்களிடையே, குறிப்பாக உயர்கல்வி மாணவ சமுதாயத்தில் மிகுதியாக ஏற்படுத்தினார்.
நான்காவது தொழில் புரட்சி குறித்து தொடர்ந்து பேசிவந்த பொன் வேதமூர்த்தி, இந்திய சமுதாய இளைஞர்களிடம் பாரிய அளவில் தொழில் பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் ட்ரோன் உருவாக்கம் உள்ளிட்ட பயிற்சிகளுக்கெல்லாம் பரந்த அளவில் ஏற்பாடு செய்து வந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் 2019 தீபாவளி சமயத்தில் நிதி அமைச்சராக இருந்த லிம் குவான் எங், மித்ரா நிதியை பொன் வேதமூர்த்தி அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைத்தார் என்று தற்குறித்தனமாகப்
பேசினார்

அந்தச் சமயத்தில், நிதி அமைச்சர் லிமின் அறியாமை குறித்து வருந்திய பொன் வேதமூர்த்தி சார்பில் பல கட்டங்களில் விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக தேசிய மொழி, ஆங்கில, தமிழ் ஊடகத்தில் எல்லாம் அவர் விரிவான விளக்கம் அளித்து இருந்தார்.
இப்பொழுது, ஆறு வருடங்கள் கழித்து லிம் குவான் எங் தெரிவித்த சிறுபிள்ளைத்தனமான கருத்தை துணை அமைச்சராக இருக்கும் சரஸ்வதி கந்தசாமி மீண்டும் எழுப்பி வேதமூர்த்தியை சிறுமைப்படுத்துவதாக நினைத்து தன்னைத்தானே சிறுமைப்படுத்திக் கொண்டு அம்பலப்பட்டு நிற்கிறார்.
காரணம் இதுதான்!
‘அன்வார் பதவி இறங்க வேண்டும்’ என்னும் கோரிக்கையை முன்நிறுத்தி, நாட்டின் பாரம்பரிய தலைநகரான கோலாலம்பூரில் நாளை ஜூலை 26 ஆம் நாள் நடைபெற உள்ள எழுச்சிப் பேரணிக்கு ஏற்பாடு செய்தது, நாட்டில் உள்ள மலாய் அரசுசாரா அமைப்புகளும் பாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும்தான்.
இதில், இந்தியர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பொன். வேத மூர்த்தி அழைப்பு விடுத்திருந்தார்.
பிரதமர் அன்வாருக்கு எதிராக ‘ஜூலை 26 எழுச்சிப் பேரணி’யை முன்னெடுத்து வரும் மலாய் அரசு சாரா அமைப்புகளையும் மலாய் அரசியல் கட்சிகளையும் எதிர்த்து கேள்வி கேட்பதற்கு தொடை நடுங்குகின்ற சரஸ்வதி கந்தசாமி, பொன் வேதமூர்த்தியை மட்டும் பொறிந்துத் தள்ளி இருக்கிறார்.
பொன். வேதமூர்த்தியை நம்பினால் புளிய மரத்தில்தான் ஏற வேண்டி இருக்கும் என்று கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்ற சரஸ்வதி, கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட கடிதங்களை ஒற்றுமை அரசாங்கத்திற்கு குறிப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு அனுப்பி, அந்தக் கடிதங்களில், 13வது மலேசிய பெருந்திட்டத்தில் இந்திய சமூகத்திற்கு இருபத்தைந்து பில்லியன் வெள்ளியை ஒதுக்க வேண்டும் என்றும் அதற்கான காரணத்தை நேரடியாக விளக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் இதன் தொடர்பில் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும் கேட்டிருந்தார்.
ஏழெட்டு மாதங்கள் ஆகியும் அந்தக் கடிதங்களுக்கு இதுவரை பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்தி வருகிறது மடானி ஒற்றுமை அரசாங்கமும் பிரதமர் அன்வாரின் நிருவாகமும்.
இதற்கெல்லாம் பதில் சொல்ல வழியோ வகையோ திராணியோ இல்லாமல் வேதமூர்த்திமீது திடீரென்று காட்டம் காட்டும் சரஸ்வதி ஒன்றை மறந்து விட்டார்.

இதே மித்ரா நிதி ஒதுக்கீடு தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் மித்ரா நிதி 100 மில்லியன் வெள்ளியும் ஒதுக்கப்பட்டு விட்டன; மித்ரா வரலாற்றில் இது சாதனை ஆண்டு என்று அப்போது மித்ராவுக்கு பொறுப்பேற்று இருந்த இன்றைய தொழில் முனைவோர் நலம் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரா. ரமணன் தெரிவித்திருந்தார்.
அந்த 100 கோடி வெள்ளி நிதி எந்தெந்த நிறுவனத்திற்கு அல்லது தனிப்பட்ட எந்தெந்த தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை இது குறித்து பலமுறை பல தரப்பிடம் இருந்தும் குறிப்பாக பொன் வேதமூர்த்தியிடம் இருந்தும் விளக்கம் கேட்கப்பட்டதற்கு இதுவரை ரமணன் பதில் சொல்லவில்லை.
ரமணனுக்குப் பிறகு கோலாலம்பூர் கூட்டுரசு வளாக மாநிலத்தின் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் நியமித்தது பிரதமர் அன்வார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக பிரபாகரன் தலைமையில் மித்ரா நிதி யார் யாருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது அல்லது எந்தெந்த தனி தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை; அதற்கான விவரம் தேவை என்று நாட்டின் பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் இதுகுறித்து பொன் வேதமூர்த்தியும் வினாத் தொடுத்திருந்தார். அவரைவிட சரஸ்வதி சார்ந்துள்ள பி கே ஆர் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களே குறிப்பாக இந்திய தலைவர்கள் பலரும் இதுகுறித்து விளக்கம் கேட்டுக்கேட்டு, சோர்ந்துவிட்டனர்
இதற்கெல்லாம் பிரபாகரனிடமிருந்து முறையான விளக்கம் இல்லை.
இந்திய சமுதாயத்தின் உயர்க்கல்வி மாணவர்களின் தொடக்க உதவி நிதியாக வெ.2,000 நிதி வழங்குவதன் தொடர்பில் விண்ணப்பம் செய்யப்பட்ட அனைவருக்கும் நிதி கிடைக்கவில்லை; விண்ணப்பம் செய்தவர்களை விண்ணப்பம் செய்யவில்லை என்கின்றனர்; நிதியைப் பெற்றுக் கொண்டவர்கள் இன்னும் விண்ணப்பமே செய்யவில்லை என்கின்றனர்.
ஆக மித்ராவின் இணைய நிர்வாகக் கட்டமைப்பு, பல வகையில் சோடைத் தன்மை கொண்டதாக இருக்கிறது.
இதற்கெல்லாம் இத்தனை காலமும் பதில் சொல்லாமல் தூங்கிக் கொண்டிருந்த சரஸ்வதி, இப்பொழுது மித்ரா நிதி நிர்வாகம் குறித்து பொன் வேதமூர்த்திமீது பாய்கிறார்; பிராண்டுகிறார்.
பொன் வேத மூர்த்தியை நம்பினால் புளிய மரத்தில்தான் ஏற வேண்டும் என்று சொல்லி இருக்கும் சரஸ்வதி, வேறு யாரை எல்லாம் நம்பினால் எந்தெந்த மரத்தில் ஏறலாம் என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்
இத்தகைய கருத்து, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
60 ஆண்டுகள் நாட்டை ஏமாற்றிய கொள்ளைக் கூட்டணி என்று சரஸ்வதியால் குறிப்பிடப்படுகின்ற கூட்டணியில் அன்வாரும் ஓர் அங்கமாக இருந்தார் என்பதை சரஸ்வதி வசதியாக மறந்துவிட்டார்.
இப்போதுகூட ஆளும் தரப்பிலோ அல்லது பிரதமர் அன்வார் தரப்பிலோ மடாணி கொள்கை முழக்கத்தின்கீழ் நாடு அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி, வர்த்தக முன்னேற்றம், அந்நிய முதலீடு போன்றன குறித்த விவரத்தை எல்லாம் குறிப்பிடாமல் எழுச்சிப் பேரணி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிதி உதவியையும் எரிநெய்-பெட்ரோல் விலைக் குறைப்பை பற்றியும்தான் சொல்ல முடிகிறது என்றால் இதிலிருந்து அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் பலவீனம் பளிச்சென்று தெரிகிறது.
அதுவும் இப்போதைக்கு ஒன்றும் நடைமுறைக்கு வராது; ஐந்து வாரங்கள் கழித்து, இரண்டு மாதங்களுக்குப் பின் நடைமுறைக்கு வர இருப்பதைப் பற்றி இப்போது அறிவிப்பு செய்ய வேண்டியதுதன் அவசியம் என்ன என்பதற்கு சரஸ்வதி விளக்கம் சொல்வாரா?
சுதந்திர மலேசியாவில் தமிழ் பேசும் அமைச்சர் இடம் பெற்று வந்த பாரம்பரியத்தை அடியோடு மாற்றிவிட்ட அன்வார் தலைமையிலான மடாணி அரசாங்கம் குறித்து எதுவும் கேட்கக் கூடாது என்கிறார் சரஸ்வதி; மத்தியில்தான் இப்படி என்றால் பினாங்கில் இரு துணை முதல்வர் பதவிகளில் ஒன்று தமிழருக்கு என ஒதுக்கப்பட்டதைப் பறித்து இந்திய சமுதாயத்திலேயே தங்களை இணைத்துக் கொள்ளாத சீக்கிய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறதே, இதைப்பற்றி சரஸ்வதிக்கு வருத்தமே இல்லையா?
மத்தியிலும் தமிழ் அமைச்சரில்லை; பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழருக்கான துணை முதல்வர் பதவியையும் பறித்துக் கொண்ட பி கே ஆர் தலைமையிலான நிருவாகம், எந்த மாநிலத்திலாவது ஆட்சிக்குழு உறுப்பினராக பி கே ஆர் ஐ சேர்ந்த இந்தியரை அல்லது ஒரு தமிழரை நியமித்திருக்கிறதா என்றால் எதுவுமே நடைபெறவில்லை; இருப்பதையெல்லாம் பிடுங்கிக் கொண்டீர்கள்; ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு வாயைத் திறக்க கூடாது என்றால் சரஸ்வதியின் இத்தகைய கருத்தை எல்லாம் சமுதாயம் எப்படி எடைபோடும் என்பதை நாளைய அரசியலும் வரலாறும் சொல்லும்.
எல்லாம் இருக்கட்டும்; ஐந்து ஆண்டுகள் கழித்து தான் எதைப்பற்றியும் கேள்வி கேட்க வேண்டும் என்றால் பொன் வேதமூர்த்தி அமைச்சராக இருந்தபொழுது ஓராண்டுக்குள்ளாகவே நீங்கள் எத்தனை அறிக்கை விட்டீர்கள்? ஐந்து ஆண்டு கழித்து தான் எது குறித்தும் கேள்வி கேட்க வேண்டும் என்ற சிந்தனை சரஸ்வதிக்கு அப்போது இல்லையோ?
எல்லாவற்றையும் சமுதாயம் அவதானிக்கும்! காலமும் எடைபோடும்!!


