Wednesday, April 22, 2026

மஇகா-தேசிய முன்னணி விவகாரத்தில் மூக்கை நுழைக்க துளசி மனோகரனுக்கு தகுதி இல்லை! -எல். சிவசுப்பிரமணியன் எச்சரிக்கை!!

தீபாவளி பண்டிகை, பொங்கல் திருநாள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்ரா நடனத்தையும் பாணிப்பூரியையும் திணிக்கின்ற ஜனநாயக செயல் கட்சி-ஜசெக’விற்கு மலேசிய இந்திய காங்கிரஸ்-மஇகா’விற்கும் மஇகா உறுப்பியம் பெற்றுள்ள தேசிய முன்னணிக்கும் இடையிலான விவகாரத்தில் தலையிடுவதற்கு எந்த அவசியமும் இல்லை; அதைப்போல ஜசெக-வின் புந்தோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரனுக்கு அருகதையும் இல்லை என்று மஇகா தேசிய ஊடகப்பிரிவு தலைவர் எல். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2022 நவம்பர் 19 பொதுத் தேர்தலுக்குப்பின் எந்தக் கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு துணை நின்றது தேசிய முன்னணி தான்; அத்தகைய தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான மஇகா, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் இந்திய சமுதாயம் சார்ந்த ஆதங்கத்தையும் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் வெளிப்படுத்தினால், இதுகுறித்து துளசி மனோகரனுக்கோ அவர் இடம்பெற்றுள்ள ஜசெக’விற்கு என்ன நேர்ந்தது?

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து மஇகா விலக வேண்டும் என்று தடித்தனமாக பேசுகின்ற அவசியம் துளசி மனோகரனுக்கும் அவரின் முதலாளிகளான சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஜசெக’விற்கும் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான சிவசுப்பிரமணியன் வினாத் தொடுத்துள்ளார்

மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்டிருக்கின்ற கல்வி மற்றும் பொருளாதார சிக்கல், குறிப்பாக மித்ரா விவகாரம், இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்கல்வி வாய்ப்பு குறித்த பிரச்சினை, இந்திய பாரம்பரிய வர்த்தகத் துறையினர் எதிர்கொள்கின்ற தொடர் சிக்கல் குறிப்பாக தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனை குறித்தெல்லாம் துளசி மனோகரனும் ஜசெக’வும் வாய்த் திறப்பதில்லை.

தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2,200 மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளிலிருந்து ஆயிரம் இடங்களை சீன சமூகத்திற்கு மடை மாற்றியது யார்? இது பற்றி துளசியும் ஜசெகா’வும் மூச்சு விட்டுதுண்டா?

அதைப்போல தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் தமிழ் பள்ளிகளுக்காக வெ.ஒரு மில்லியன் நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கினார் பிரதமர் நஜீப்; ஜசெக அதிகாரத்திற்கு வந்தவுடன் அது இல்லாமல் போய்விட்டது; மித்ராவிற்கு இவ்வாண்டுக்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது; இதுகுறித்து துளசி யும் துளசி இடம்பெற்றுள்ள கட்சியும் பேசியது உண்டா?

ஆர்டிஎம் தமிழ்ச் செய்திப் பிரிவில் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் பத்து நிமிட உலகச் செய்தி அறிக்கையும் இரவு 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் 10 நிமிட செய்தித் தொகுப்பும் ஐந்தைந்து நிமிடங்களாக குறைக்கப்பட்டது ஜசெகான அதிகாரத்திற்கு வந்தவுடன் என்பது துளசிக்கு தெரியுமா?

அதைப்போல இந்து சமயத்தையும் இந்து மக்களையும் பழித்தும் இழித்தும் சமயப் பிரச்சாரகர்கள் பேசுகின்ற பொழுதெல்லாம் துளசி தள்ளிநின்று வேடிக்கை பார்த்தாரேத் தவிர இது குறித்து கேள்வி எழுப்பியதில்லை.

ஜசெக மத்திய நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கஸ்தூரி பட்டு, ஜ. அருள் குமார் போன்றவர்களும் நியமனத்தின் மூலம் இடம்பெற்று இருக்கின்ற துளசி போன்றவர்களும் எந்த நேரத்திலும் இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுப்பதில்லை; வாய் திறப்பதில்லை.

தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் தொட்டதற்கெல்லாம் குரல் எழுப்பி வாதாடிய ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது நாடாளுமன்றத்திற்கு வெறுமனே வந்து செல்கின்றனரேத் தவிர இந்திய சமுதாயம் குறித்து எதற்காகவும் குரல் எழுப்புவதில்லை.

மலேசிய இந்திய சமுதாயத்தில் அடையாளத்தை இழந்து கொண்டிருக்கின்ற ஜசெக, அதன் பங்களிப்பையும் கடப்பாட்டையும் ஒழுங்காக செய்வதை விட்டுவிட்டு, மஇகா குறித்தும் மஇகா இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி சம்பந்தப்பட்ட விவகாரத்திலும் பேசவோ தலையிடுவதற்கோ மூக்கை நுழைக்கவும் துளசிக்கு கடுகளவும் அருகதை இல்லை என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்வதாக சிவ சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை