
தென் ஆசிய நாடுகளைக் கொண்ட ஆசியான் மண்டலத்தில் உறுப்பியம் பெற்றுள்ள தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து வந்த எல்லை பிரச்சனையும் சண்டையும் தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றிய மலேசியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஆசியான் மண்டலத்தின் உறுப்பு நாடுகளான கம்போடியா- தாய்லாந்து நாடுகளுக்கு இடையேயான இந்த அண்மை சிக்கலும் சலசலப்பும்தான் முற்றுபெற்று இருதரப்பும் சமாதானக் கொடியை பறக்க விட்டுள்ளனவேத் தவிர, நூற்றாண்டு கால எல்லைப் பிரச்சினை அப்படியே தொடர்கிறது.
நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட இந்த எல்லை பிரச்சனைக்குக் காரணம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஒரு சிவன் ஆலயம் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.
ப்ரே விஹார் என்னும் இந்த சிவ ஆலயத்தின் மீதான உரிமை குறித்துதான் தாய்லாந்தும் கம்போடியாவும் தொடர்ந்து மல்லுக்கு நிற்கின்றன.

இந்தச் சிக்கல் அண்மை காலமாக
நீருபூத்த நெருப்பாக இருந்தாலும் இதன் தொடர்பிலான சலசலப்பு கடந்த மே மாதத்தில் துளிர் விட்டது
இரு நாடுகளுக்கான எல்லை தொடர்பான ஒரு சிறு சலசலப்பின் பொழுது கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் இறந்ததால் அங்கு முறுகல்நிலை தோன்றியது
ஏற்கெனவே இந்தச் சிக்கல் கனன்று கொண்டிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் இருதரப்பு ராணுவமும் நேரடி தாக்குதலில் ஈடுபட்டன.
ஏறக்குறைய லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தப்பட்டனர். அதிகமானோர் இறக்கவும் நேர்ந்தது
கடந்த வாரம் வியாழன் முதல் இருதரப்பு இராணுவமும் மோத ஆரம்பித்தது முதலே ஆசியான் அமைப்பின் தலைவர் என்ற முறையில் மலேசியா சமாதான நடவடிக்கையை மேற்கொண்டது. மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மேற்கொண்ட அமைதிப் பேச்சுக்கு இரு நாட்டு பிரதமர்களுமே மதிப்பளித்தனர்.
அன்வார் இப்ராகிம் மேற்கொண்ட அயராத முயற்சிக்கு இப்போது பலன் விளைந்துள்ளது.
தாய்லாந்தின் பிரதமர் பாத்தோங்தான் ஷினாவாத்ர, கம்போடிய பிரதமர் ஹுன் மானாட் இருவரும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் தற்பொழுது தாய்லாந்து கம்போடிய எல்லையில் அமைதிக்கு வழி ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உதவித் தலைவர் காஜா களாஸ்(Kaja Kallas) கருத்து தெரிவிக்கையில் மலேசியாவின் முன்னெடுப்பை பெரிதும் பாராட்டியுள்ளார்.
ஆசியான் மண்டலத்தில் அமைதி தவழ வேண்டும் என்பதன் தொடர்பில் அதன் நடப்பு தலைவரான மலேசியா குறிப்பாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மேற்கொண்ட முயற்சிக்கும் வெளியுறவு அமைச்சுக்கும் ஐரோப்பிய ஒன்றிய ஒன்றியத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


