
தேசிய முன்னணியில் முன்பு நோ ஓமர் செய்த வேலையை இப்பொழுது ஃபுவாட் ஸர்க்காசி செய்கிறார்.
தேசிய முன்னணியில் உள்ள அம்னோவைப் போல மஇகாவும் அரசியல் செய்ய விரும்புகிறது. குறிப்பாக 16ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதன் தொடர்பில் தயாராக வேண்டிய அவசியம் மஇகா-விற்கும் இருக்கிறது.
அதன் அடிப்படையில் தான் ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகாவிற்கு அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் அரசுசார் நிறுவனங்களில் கூட வாய்ப்பு இல்லாமல் அடியோடு புறக்கணிப்பதன் தொடர்பில் தன் ஆதங்கத்தை கட்சியின் சார்பில் அதன் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஒரு தேசிய மொழி நாளேட்டின்வழி வெளிப்படுத்தி இருந்தார்.
இதில் மிரட்டல் எங்கே இருக்கிறது? மஇகா-வின் ஆதங்கத்தையும் நெருக்கடியான நிலையையும் சரவணன் வெளிப்படுத்தி இருந்தாரேத் தவிர மிரட்டல் என்பது ஒன்றுமில்லை.
இந்த நிலை இப்படியே நீடித்தால் கட்சியின் அடுத்த தேசியப் பேரவையில் ஏறக்குறைய அக்டோபர் மாதத்தில் மஇகாவும் ஒரு முடிவை எடுக்க வேண்டி இருக்கும் என்பதை வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் தொடர்பில் ஓர் அரசியல் முன்னணியை வழிநடத்திச் செல்கின்ற அரசியல் கட்சியின் உயர்மட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் ஆதரவாக அனுசரணையாக பேசுவதை விடுத்து, “விருப்பமில்லை என்றால் வெளியேறலாம்”; “மிரட்டல் விடுக்க வேண்டாம்” என்றெல்லாம் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஃபுவாட் ஸர்க்காசி கருத்து தெரிவித்திருப்பது, அம்னோ சிலாங்கூர் மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக செயல்பட்ட தான்ஸ்ரீ நோ ஓமாரைப் போல கருத்து தெரிவிக்கும் ஃபுவாட் ஸர்க்காசியிடம் வெளிப்படுவது தண்டல்காரத் தனம்.
போர்னியோ மண்டலத்தை தவிர்த்து தீபகற்ப மலேசியாவைப் பொருத்தவரை நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்துள்ளன என்று சொல்வதற்கு பதிலாக நம்பிக்கை கூட்டணியும் அம்னோவும் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை நடத்துகின்றன என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
அம்னோ, தேசிய முன்னணி என்ற பெயரில் தனக்கு வேண்டியதை மட்டும் பெற்றுக் கொண்டு மஇகா-வையும் மசீசா-வையும் கைவிட்டிருப்பது பொருத்தமான தலைமைக்கு அழகல்ல.
மஇகா-வைப் பொறுத்தவரை ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கலாம்; ஆனாலும் இக்கட்சிக்கு தேசிய அளவில் குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறதா இல்லையா என்பதை ஃபுவாட் ஸர்க்காசி நடுநிலையுடன் எண்ணிப் பார்த்தால் இப்படி சாடும் விதத்தில் நட்புக் கட்சியான மஇகாவையும் சரவணனையும் சாடியிருக்க மாட்டார்.
மோடியைப் போல அடையாள அரசியல் நடத்தும் அன்வார், மலேசியத் தமிழர்களுக்கு அல்லது இந்திய சமுதாயத்திற்கு ஏதும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மனப்பூர்வமாக கொண்டிருக்கவில்லை என்பதுதான் சரவணன் கருத்தில் வெளிப்பட்டிருக்கும் கருத்து.
அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் ஜிஎல்சி நிறுவன பொறுப்புகூட ஒதுக்கப்படவில்லை என்றால் இதை எப்படி புரிந்துகொள்வது?
மஇகா தேசிய முன்னணியில் இணைந்து இருப்பதுதான் நல்லது என்று நிறைவாக கருத்து தெரிவித்திருக்கும் ஃபுவாட் ஸர்க்காசி, அதே தேசிய முன்னணி தலைமைக்கு மஇகாவையும் அரவணைத்து அதற்குரிய பங்களிப்பையும் செய்ய வேண்டிய கடப்பாடு இருக்கிறது என்பதையும் ஃபுவாட் ஸர்க்காசி நடுநிலையுடன் எண்ணிப் பார்ப்பதும் அந்த வகையில் கருத்து தெரிவிப்பதும்தான் நல்லது.


