Wednesday, April 22, 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுரிமை: பிரதமரிடம் சட்ட முன்வரைவுடன் கோரிக்கை மனு!சோசலிசக் கட்சி ஒருங்கிணைந்த முனைப்பு!!

நாட்டில் தற்பொழுது லட்சக்கணக்கானோர் தோட்டங்களில் பணிபுரிகின்ற சூழ்நிலையில், இவர்களில் சில ஆயிரக்கணக்கினர் மட்டுமே உள்ளூர் தொழிலாளர் ஆவர்.

இப்படிப்பட்ட உள்நாட்டு பாட்டாளிகள் ஏறக்குறைய 25 ஆயிரம் பேருக்கு வீட்டுரிமை வசதி வேண்டும் என்றும் இது சட்டபடியாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மலேசிய சோசியலிசக் கட்சி சார்பில் நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தோட்ட நிர்வாகங்கள் மாறும்பொழுது அல்லது பரிவர்த்தனை செய்யும்பொழுது தோட்டங்களில் நீண்ட காலமாக பணிபுரிகின்ற மலேசிய பாட்டாளி மக்கள் தங்குவதற்கு வீடு இல்லாமல் கைவிடப்படுகின்றனர்.

இத்தகைய இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டுதான் பத்தாண்டுகளுக்கு மேலாக பணி புரிகின்ற தோட்டப் பாட்டாளிகளுக்கு, அந்தந்த தோட்ட நிர்வாகமே உள்ளூர் தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; அத்தகைய குடியிருப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத சிறு நிறுவனங்கள் அல்லது தோட்டங்கள் இருந்தால், அரசின் சார்பிலேயே அத்தகைய தொழிலாளர்களுக்கு வீட்டுடைமை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மலேசிய சோசியலிசக் கட்சி அண்மைய ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது.

இதன் தொடர்பில் தோட்ட சமூக ஆதரவு குழு என்ற அமைப்பை (JSML) மலேசிய சோசலிசக் கட்சி-பிஎஸ்எம் அண்மையில் உருவாக்கி அதன்படி இத்தகைய முனைப்பையும் மேற்கொண்டு வருகிறது.

தோட்டங்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் பிரச்சினை அந்த நாள் முதல் இந்த நாள் வரை தீர்க்கப்படாமலேயே இருக்கிறது; தோட்ட நிர்வாகங்கள் மாறினால் அல்லது பரிவர்த்தனை செய்யப் படும்பொழுது, அதுவரை அந்தந்தத் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த பாட்டாளிகள் அப்படியே கைவிடப்படுகின்றனர். அவர்களுக்கான வாழ்விட வசதி மற்றும் பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்த மத்திய – மாநில அரசுகள் தவறி விட்டன.

இந்த விவகாரம் தொடர்பில் 2019 டிசம்பர் நான்காம் நாள், அப்போதைய பிரதமர் துன் மகாதீரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவை மனிதவள அமைச்சராக இருந்த மு. குலசேகரன் பெற்றுக் கொண்டார்.

ஏறக்குறைய அடுத்த இரண்டரை மாதங்களில் ஆட்சி மாறியதால், புதிய ஆட்சியில் மனிதவள அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ மு சரவணனிடம், 2021 அக்டோபர் 29ஆம் நாள், இந்தச் சிக்கல் கொண்டு செல்லப்பட்டது.

சரவணன் இரண்டு பிரதமர்களிடம் மனிதவள அமைச்சராக இருந்தபோதும், அந்தக் காலகட்டத்தில் அரசியல் நிலைத்தன்மை இல்லாததால் இந்த சிக்கல் குறித்து அரசத் தரப்பில் கவனம் செலுத்தப்படவில்லை.

தோட்டப் பாட்டாளிகளுக்கான வீட்டுரிமை குறித்த சட்டப் பாதுகாப்பு இல்லாததால் இதன் தொடர்பில் சோசிலிசக் கட்சி சார்பிலேயே சில வல்லுனர்களைக் கொண்டு சட்டம் வரையப்பட்டது.

அதற்குப் பின் 2022 ஆகஸ்ட் 25ஆம் நாள், சிலாங்கூர் மாநிலத்தின் அப்போதைய ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ், பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ப. இராமசாமி, பி எஸ் எம் தலைவர் டாக்டர் ஜெயக்குமார், தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளர் நவ முகுந்தன், சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகத்தின் சார்பில் அகமட் மூடி ஓன், வழக்கறிஞர் நந்தா, JSML நிர்வாகிகள் ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டம் இந்தச் சிக்கல் தொடர்பாக நடைபெற்றது.

தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு முழுவதிலும் வழக்கறிஞர்கள் ரகுநாத கேசவன், குர்டியால் சிங் நிஜார் உள்ளிட்ட சட்ட வல்லுனர் குழு, தோட்டத் தொழிலாளர்களுக்கான சட்ட முன்வரைவை பல கட்டங்களில் ஆலோசித்து நிறைவு செய்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுரிமைக்கு பாதுகாப்பு தரக்கூடிய இந்த சட்ட முன்வரைவு சிலாங்கூர், பேராக், ஜோகூர், நெகிரி செம்பிலான், கெடா மாநில அரசுகளிடம் பல கட்டங்களில் வழங்கப்பட்டது.

ஆனாலும் இதன் தொடர்பில் மாநில அரசுகளிடமிருந்து எவ்வித சாதகமான முடிவோ பதிலோ தெரிவிக்கப்படாத நிலையில்,

மலேசியத் தோட்ட தொழிலாளர்களின் வீட்டுரிமையை உறுதி செய்வதற்கான இந்த சட்ட முன் வரைவையும் கோரிக்கை மனுவையும் நிகழும் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் நாள் பிரதமரிடம் நேரில் ஒப்படைப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று பிஎஸ்எம் கட்சி சார்பில் அருள் செல்வனும் இந்த விவகாரம் தொடர்பில் செயல்பட்டு வருகின்ற பிரமுகர்களும் தோட்டப் பாட்டாளி பிரதிநிதிகளும் கலந்து கொண்ட நேற்றைய செய்தியாளர்க் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்சில் அமைந்துள்ள பிஎஸ்எம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், JSML ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ராஜமாணிக்கமும் கலந்து கொண்டார்.

நாடு முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட தோட்ட பாட்டாளிகளும் அவர்களின் பிரதிநிதிகளும் ஆகஸ்ட் 13 நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோசலிசக் கட்சியின் துணைத் தலைவருமான அருள்செல்வன் இது குறித்து கருத்து தெரிவித்த பொழுது நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவை தாக்கல் செய்ய இருக்கின்ற இந்த நிகழ்வு இந்த முயற்சியின் நிறைவுக் கட்டமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தோட்டப் பாட்டாளிகளின் வீட்டுடைமை பிரச்சனை, நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்து தொடர்வதால் வேறு வழி இல்லாமல், சோசியலிச கட்சி ஒருங்கிணைப்பில் JSML 1983-இல் உருவாக்கப்பட்டது.

அதிலிருந்து இதுவரை உள்ளூர் தோட்டப் பாட்டாளிகளின் வீட்டு உரிமைக்காக பி எஸ் எம் கட்சி வெறுமனே குரல் எழுப்புவதுடன் அல்லாமல் நேரடியாக களத்திலும் இறங்கி போராடி வருகிறது; ஆனால் மத்திய – மாநில அரசுகள் இதில் போதிய அக்கறையும் ஆர்வமும் காட்டாததால் இப்பொழுது நாடாளுமன்றத்தில் ஒற்றுமை அரசாங்க பிரதமரிடம் இந்த கோரிக்கை மனுவை சமர்ப்பிக்க இருக்கிறோம் என்று அருட்செல்வன் மேலும் தெரிவித்துள்ளார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை