Monday, May 25, 2026

மஇகா மீட்சி! இந்தியர் மறுமலர்ச்சி!!-எந்தக் கட்சியுடனும் கரம் கோக்கத் தயார்!!!

மஇகா-வின் எதிர்கால அரசியல் பயணம்; அதேவேளை இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சி ஆகிய இரு முக்கிய அம்சங்களை இலக்காகக் கொண்டு எந்த அரசியல் கட்சியுடனும் கரம் கோக்க மஇகா தயாராக இருக்கிறது என்று அதன் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டாக்டர் ச விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நலம் கருதியே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் தொடர்பில் எந்த அழுத்தத்தையும் மஇகா எதிர்கொள்ளவில்லை என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

ஒரு தலைவர் என்றால் அவர் கட்சியின் நலம் காப்பவராக இருக்க வேண்டும். அதனால் மஇகாவின் கதவுகள், எந்தக் கட்சியையும் வரவேற்க திறந்த மனதுடன் தயாராக இருப்பதாக மஇகா பேராக் மாநிலப் பேரவையின் 79- ஆவது பேராளர் மாநாட்டை சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் ஆகஸ்ட் இரண்டாம் நாள் திறந்து வைத்து உரையாற்றிய பொழுது விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

கட்சியின் எதிர்கால நலனுக்கு உகந்தது என்றால் எதற்கும் தயாராக இருப்பதாகவும் அதைவிட இந்திய சமுதாயத்தின் பாதுகாப்பை முக்கியமாகக் கருதுவதாகவும் இன்றைய பேராக் மாநில மாநாட்டை தொடக்கிவைத்து உரையாற்றிய பொழுது அடித்து ஆடும் விதமாக விக்னேஸ்வரன் முழங்கினார்.

“இதுவரை அதிகாரப்பூர்வமான அழைப்பு எதுவும் இல்லை என்றாலும் மஇகா திறந்த மனதுடன் எந்த கட்சியுடனும் கரம் கோக்கவும் இணைந்து பயணிக்கவும் தயாராக இருக்கிறது”.

“கட்சி தற்பொழுது எதிர் கொண்டிருக்கின்ற தொய்வு நிலையை மாற்றி அமைக்கவும் பீடு நடை போடவும் எத்தகைய எல்லைக்கும் செல்லத் தயாராகி விட்டோம்”.

“எவரையும் நான் குற்றம் சொல்ல தயாராக இல்லை. அரசியல் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் போராட்ட சூழல் நிலவுகிறது; அதனால் எங்களையும் எவரும் குறை சொல்ல முடியாது. எல்லாவற்றையும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்கின்ற நாங்கள் எங்களின் மீட்சிக்காக எந்த முன்னெடுப்பிற்கும் தயாராக இருப்பதாக விக்னேஸ்வரன் அதிரடியாகப் பேசினார்.

விருப்பம் இல்லை என்றால் ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து மஇகா விலக வேண்டும் என்று வல்லடிப் போக்கில் கருத்து தெரிவித்துள்ள பேராக் சட்டமன்ற உறுப்பினர் குறித்து பேசிய விக்னேஸ்வரன், அவர் சார்ந்துள்ள கட்சியின் பிற்போக்குத்தனத்தையும் அதன் சந்தர்ப்பவாதத்தையும் இது வெளிப்படுத்துகிறது என்றார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகாவிற்கு கேபினட் அமைச்சர் பதவியோ வேறு எந்த பொறுப்புகளோ வழங்காத நிலையிலும் பிரதமர் அன்வார் இப்ராகிமிற்கு மஇகா தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ளும் என்று விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை