எண்பதாம் ஆண்டை எட்டி நிற்கின்ற மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா என்னும் அரசியல் பேரியக்கத்திற்கு முதற்கண் குமரியின் சார்பில் வாழ்த்து உரித்தாகுக.

இத்தனை காலமும் அசட்டையாக இருந்துவிட்டு இந்த ஆண்டு முதல் இந்த பாரம்பரிய அரசியல் கட்சி தொடங்கப்பட்ட ஆகஸ்ட் நான்காம் நாளை, ‘மஇகா தின’மாக கொண்டாடப்படும் என்று கட்சியின் தலைமையை அண்மையில் அறிவித்தது.
மஇகாவிற்கென்று இந்த நாட்டில் பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் உண்டு.
மலேசிய அரசியலில் இன்று உயிர்ப்புடன் இருக்கின்ற அரசியல் கட்சிகளில் சுதந்திரத்திற்கு முந்தைய மலாயாவில் தோன்றிய ஒரேக் கட்சி இந்த கட்சிதான் என்பதில் மஇகாவிடர் பெருமை கொள்ளலாம்.
இந்த நாட்டில் விடுதலை வேட்கையை விதைத்த கட்சி மஇகா. இந்தக் கட்சி உதயமானதே, நாட்டின் விடுதலை என்ற மையப் புள்ளியில்தான்.
நாட்டின் விடுதலைக்காக இராணுவ நடவடிக்கையில் இந்திய சமூகத்தினர் குறிப்பாக தோட்டப்பாட்டாளிகள்கூட முழுமையாக ஈடுபட்டனர்.
இரண்டாவது உலகப் போர் நிறைவுபெற்று சயாம் மயான ரயில் தண்டவாள பணியும் நிறுத்தப்பட்ட நிலையில், அதுவரை துடிப்புடன் செயல்பட்டு வந்தவர்களின் அடுத்தக் கட்ட அரசியல் நகர்வாக உதயமானதுதான் மலேசிய இந்தியர் காங்கிரஸ்.
அத்தகைய வரலாற்றுப் பெருமைமிக்க மலேசிய இந்தியர் காங்கிரஸ் இன்று தனது 79-ஆவது தொடக்க நாளைக் கொண்டாடுகிறது.
மஇகாவின் எதிர்காலம் சிறக்கவும் அதன் அரசியல் பயணம் மிளிரவும் மீண்டும் வாழ்த்துகிறாள் குமரி!!
இந்தவேளையில், மஇகா-வின் தற்போதைய அரசியல் நகர்வு குறித்து சற்று சிந்திப்போம்.
வருகின்ற பொதுத் தேர்தல் சமயத்தில் மஇகா அணிமாறுவதற்கு ஏறக்குறைய அணியமாகிவிட்டதாகவேத் தெரிகிறது.
நம்பிக்கை கூட்டணியைப் பொறுத்தவரை, கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலைப் போல தனித்து களம் காண அஞ்சுவதாகத் தெரிகிறது. அதனால் அம்னோவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க எண்ணுவதாகத் தெரிகிறது.
அம்னோவும் அதைத்தான் விரும்புகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் பொழுதுக் நம்பிக்கை கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி கட்சி-பிகேஆர், அமானா போன்ற கட்சிகளுடன் ஜசெக- வினருடனும் கரம் கோப்பதை மலாய் வாக்காளர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ஐயத்தை போக்குவதற்காக இப்பொழுதே ஜசெக-வுடன் உறவு கொண்டாட ஆரம்பித்துவிட்டது அம்னோ.
இதன் ஒரு கூறாகத்தான் ஜசெகா நாடாளுமன்ற உறுப்பினர்களை அம்னோ தலைமகத்திற்கு அழைத்து தாம்பூலம் பரிமாறிக் கொண்டுள்ளது.
தேசிய முன்னணிக்கு தலைமை வகிக்கும் அம்னோ, தன் கூட்டாளிகளான மசீச, மஇகா கட்சிகளைப் பற்றி அவ்வளவாக அக்கறையப்படுவதாக இல்லை.
இதை முற்றும் முழுதாக உணர்ந்துவிட்ட மஇகாவும், வரும் தேர்தலுக்குள் புது அரசியல் சம்பந்தம் பேச முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பெர்சத்து கட்சியின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்று ஏற்கனவே பழகியுள்ள மஇகா-விற்கு, பெர்சத்துவின் அரசியல் கூட்டாளியான பாஸ் கட்சியுடன் இதற்கு முன்னமே பழக்கமும் தொடர்பும் உண்டு.
2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அம்னோவின் கதை அவ்வளவுதான் என்று கெராக்கான் கட்சியைப் போல முடிவெடுத்து விட்ட மஇகா-விற்கு, மலேசியாவில் மலாய்க்காரர் ஆதரவு இன்றி எந்த வகையிலும் அரசியலைத் தொடர முடியாது என்பதும் நன்கு தெரியும்; அதனால் பாஸ் கட்சியுடன் மஞ்சம் கண்ட அனுபவம் மஇகா-விற்கு ஏற்கனவே இருக்கிறது.
இன-மதவாதக் கட்சியான பாஸ் உயிராகக் கருதும் ‘ஹுடுட்’ சட்டத்தைப் பற்றி எல்லாம் மஇகா கண்டுகொள்ளாமல் அந்த கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் பாரம்பரிய உடையுடன், அதுவும் தகதகக்கும் பட்டாடையில் சென்று கலந்து கொண்ட சம்பவமெல்லாம் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.
துன் மகாதீர் அம்னோ கட்சியை இல்லாமல் செய்து விடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவரின் கவனம் பிகேஆரைப் பதம் பார்ப்பதில்தான் குவிந்திருக்கிறது என்பதை அவதானித்த அம்னோ சற்று மூச்சுவிட ஆரம்பித்தது. மஇகாவும் பாஸ் கட்சியுடனான உறவை படிப்படியாக குறைத்துக் கொண்டு அம்னோ பக்கமே திரும்ப தலைப்பட்டது.
இன்றைய ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ கைவிட்டது ஒரு புறம் இருக்க, அன்வார் பிரதமராக நீடிக்கும் வரை மஇகா-விற்கு ஒருகாலும் அரசக்கட்டிலில் இடம் கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட மஇகா, இப்பொழுது அரசியல் உறவுக்காக ஏல அறிவிப்பு செய்துள்ளது.
மூன்று தினங்களுக்கு முன், பேரா மாநில பேரளார் மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய கட்சியின் தலைமை இந்த அறிவிப்பை பகிரங்கமாக செய்துள்ளது.
பெர்சத்து கட்சியும் பாஸ் கட்சியும் அமைத்துள்ள தேசிய கூட்டணியில் இந்தியர் கட்சி என்னும் வகையில் வருகின்ற 16-ஆவது பொதுத் தேர்தலில் இணைந்து களம் காண்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
காலமெல்லாம் அரசியல் அதிகாரத்துடன் உலா வந்த மஇகா-விற்கு பதவிப்பசை இல்லாமல் பயணம் மேற்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது.
அதனால் வருகின்ற 16-வது பொதுத் தேர்தலில் புது அரசியல் பயணத்தை கணக்கில் கொண்டுள்ள மஇகாவின் எண்ணம் ஈடேற வாழ்த்து தெரிவிக்கிறாள் குமரி.


