
நாடு விடுதலை அடைவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நாட்டில் தொடங்கப்பட்ட அரசியல் பேரியக்கம் மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா. நேற்று ஆகஸ்ட் திங்கள் நான்காம் நாள், இந்த பாரம்பரிய அரசியல் பேரியக்கம் 80-எண்பதாம் ஆண்டை எட்டியதை முன்னிட்டு கோலாகல விழாவிற்கு கட்சி தலைமையகத்தில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மஇகா தலைமையகத்தின் நேதாஜி அரங்கில் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு நாடு முழுவதிலும் இருந்து தலைவர்களும் உறுப்பினர்களும் அணி திரண்டு நிற்பதற்கு இடமில்லை என்ற அளவிற்கு அந்த வளாகமே திக்குமுக்காடும் நிலை எழுந்தது.
அதன் தேசியத் தலைவர் உள்ளே நுழையமுடியாத அளவிற்கு திரண்டு இருந்த கூட்டத்தினர் நடுவே, நுழைவாயிலிலேயே பேராக் மாநிலத் தலைவர் தான்ஸ்ரீ ராமசாமி ஆளுயர சூட்டிய மல்லிகை மாலையைக் கண்டு தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உள்ளம் புலகாங்கிதம் அடைந்தார்.
ஒருவழியாக கூட்டத்தை சமாளித்து மேடையில் ஏறி தேசியத் தலைவர், கட்சியினர் மத்தியில் ஆற்றிய எழுச்சி உரை கண்டு இரண்டாம் கட்ட தலைவர்கள், தேசியப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரங்கம் அதிரும் அளவிற்கு கரவொலி எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
மஇகா மொழி- இலக்கிய அணி சார்பில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு சரவணனுக்கு தோள் கொள்ளா அளவிற்கு ரோஜா மாலையை சூட்டி தமிழ்வேந்தன் வாழ்க! மொழிக் காவலர் வாழ்க என்றெல்லாம் மஇகாவினர் முழங்கியது உணர்ச்சிகரமாக அமைந்தது.
தேசியத் தலைவர், தேசிய துணைத் தலைவரைத் தொடர்ந்து தேசிய உதவி தலைவர்கள் மூவரும் சுருக்கமாக மஇகாவின் கடந்த கால வரலாறு; தற்போது அடைந்துள்ள எழுச்சி; எதிர்கால அரசியல் பயணம் குறித்தெல்லாம் சுருக்கமாக பேசினர்.
கூட்டம் முடிந்ததும் இதுவரை இல்லாத அளவிற்கு கட்சியின் 79வது தொடக்க நாளை முன்னிட்டு மிக பிரம்மாண்ட அளவில் விருந்தோம்பல் இடம்பெற்றது.


