கோலாலம்பூர், ஆக.8:
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையாக விளங்கும் சிலம்பம் 2026 சுக்மா போட்டியில் இடம் பெற வேண்டும்.
சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் நீக்கப்பட்டது பெரும் அநீதியாகும்
இது இந்தியர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆகவே சுக்மா போட்டியில் சிலம்பம் இடம்பெற வேண்டிய விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடனடியாக தலையிட வேண்டும் என்று மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.
“சுக்மாவில் சிலம்பத்தை அதிகாரப்பூர்வ விளையாட்டாக சேர்க்க வேண்டும். ஆனால், இந்தப் போட்டியை நீக்கிய செயல் சிலம்ப விளையாட்டாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறித்து நானும் கவலை அடைகிறேன்”.
சிலம்பம் என்பது மலேசியா உள்ளிட்ட இந்த மண்டலத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு பாரம்பரிய தமிழர்களின் தற்காப்புக் கலையாகும்,
மேலும் இது நம் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற பல திறமையான சிலம்ப விளையாட்டு வீரர்கள் மலேசியாவில் உள்ளனர்.
சிலம்பம் பல ஆண்டு காலமாக மலேசியாவிற்கு பெருமை சேர்க்கும் விளையாட்டாகவும் உள்ளது.
சிலம்பத்தை அதிகாரப்பூர்வ விளையாட்டாக மீண்டும் நிலைநிறுத்த, மலேசிய ஒலிம்பிக் மன்றம் (OCM) மற்றும் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்


