
மலேசிய அரசியல் சாசன விதிகளின்படி பிரதமர் அன்வார் பிரதமர் பதவி வகிக்கவோ நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கவோ தகுதி இல்லை என்பதால் அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு செய்திக்கு மலாய்ச் சமூகத்திலும் சமூக ஊடகத்திலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. கெடா மாநிலத் தலைவர் விவேகானந்தன் அம்மாசி தெரிவித்துள்ளார்
மலேசியக் கூட்டுரசு அரசியல் சாசன விதி 48.(1).(e). மற்றும் 48(3) ஆகிய விதிகளின்படி 2023 ஆம் ஆண்டு மே மாதம்வரை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், 2022 நவம்பர் 19ஆம் நாள் நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலம், தம்புன் தொகுதியில் போட்டியிடுவதற்கு அன்வார் தகுதி பெற்றிருக்கவில்லை.

அரசியல் சாசன விதி 42இன் படி நாட்டின் 15ஆவது மாமன்னர் மாட்சிமைக்குரிய சுல்தான் முகமது-வி அவர்களால், 16-05-2018இல் பொது மன்னிப்பு மட்டும்தான் அன்வாருக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றிருக்கவில்லை என்ற தகவலை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதும் 24.11.2022இல் நாட்டின் பத்தாவது பிரதமராக பதவியேற்றதும் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்பதால், அன்வார் உடனே பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் தம்பூன் எம்பி பதவியையும் துறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று ஆகஸ்ட் 12ஆம் நாள் காலையில் வழக்கு தொடுத்த நிலையில் மாலையில் இதன் தொடர்பில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் பொன். வேதமூர்த்தி.

இந்தச் செய்திக்குத்தான் லட்சக்கணக்கான மலாய் வலைத்தளவாசிகள் அளித்துவரும் ஆதரவு ஏறக்குறைய 15 லட்சம் பேர் என்ற அளவில் அமோக நிலையை எட்டி உள்ளதாக ஹிண்ட்ராஃப் கெடா மாநில பொறுப்பாளருமான விவேகானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


