Thursday, April 2, 2026

இந்து சங்கத்தில் மீண்டும் சச்சரவு! 5 மாநிலத் தலைவர்கள் பந்தாடப்பட்டுள்ளனர்!

மலேசிய இந்து சமுதாயமே, இந்து சங்க உறுப்பினர்களே, சமய சான்றோர்களே, ஆன்றோர் பெருமக்களே, நடுநிலை சிந்தனையாளர்களே, உங்கள் அனைவரின் மேலான கவனத்திற்கு இந்தச் செய்தி!!

‘சங்கபூசன்’, ‘தொண்டர்மாமணி’ கி. மனோகரன்

தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்ற பூமிக்கு ஒருவேளை தலைச்சுற்றல் எடுத்து, தான் சுழல்வதையும் சுற்றுவதையும் நிறுத்தினாலும் நிறுத்தலாமேத் தவிர மலேசிய இந்து சங்கத்தில் பதவி சண்டையும் ஆள் பார்த்து அணி பிரிக்கும் கேவலமான போக்கும் நிற்கவே நிற்காது போலும்.

மலேசிய இந்து சங்கத்தை பொறுத்தவரை தன்னுடைய குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும்; மற்ற அனைவரும் விலகி நிற்க வேண்டும்; மொத்தத்தில் இந்து சங்கத்தின் ஒற்றைக் குரலாக தான் மட்டுமே பேச வேண்டும் என்ற ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட மோகன் சண்முகம் 13 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இந்து சங்கத்தை வளைத்துள்ள நிலையில், மோகன் சண்முகமும் த. கணேசனும் கூட்டு சேர்ந்து கணேஷ் பாபுவுக்கு ஆதரவான மாநிலத் தலைவர்களை எல்லாம் நீக்கிவிட்டனர்.

இந்த அக்கப்போரான வேலையை தாப்பா அருள்மிகு ஜெகந்நாதர் ஆன்ம நிலையத்தில் வழிபாடு நடத்திவிட்டு அதன் பிறகு மஇகா தாப்பா தொகுதி அலுவலகத்தில் 2025 ஆம் ஆண்டு தேர்தல் கூட்டத்திற்குப் பிறகு நடத்திய முதல் கூட்டத்தில் அரங்கேற்றி உள்ளனர்

சமயத்திற்கும் சமூகத்திற்கும் எவ்வளவுதான் தொண்டாற்றினாலும் தனக்கு வேண்டியவர்களை மட்டுமே எல்லா பொறுப்புகளிலும் நியமிக்கும் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட மோகன் சண்முகம், மலேசிய இந்து சங்க தலைமையகத்தை மீண்டும் ஆக்கிரமித்துள்ளதால், இந்த சமய அமைப்பை சூழ்ந்திருக்கின்ற அணி என்னும் பெரும்பிணியும் இந்து சங்கத்தில் நிகழ்கின்ற பதவிச் சண்டையும் ஓயவே ஓயாது.

கடந்த ஜூலை மாதம் 20ஆம் நாள் பல்வேறு முறுகல் நிலையுடன் நடைபெற்ற அதன் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தேர்தல் இன்றோடு முடிந்து விட்டது; தேர்தலுக்குப் பிறகு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று அடித்துச் சொன்னார்கள்.

அவ்வாறு சொன்னபடி நடந்து கொள்ளாமல், தேர்தலுக்கு முன்பு சொன்னதைத்தான் இப்பொழுது வஞ்சகத்துடன் நிறைவேற்றி இருக்கின்றனர்.

ஆண்டு கூட்டத்திற்குமுன் பிரச்சார காலக்கட்டத்தில் தன்னை எதிர்ப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று த. கணேசன் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய கூட்டத்தின் தொடக்கத்நில்
‘இந்து சமய மக்கள் எல்லாம் ஒன்று கூடுவோம் என்று எழுந்து நின்று பாடுவது ஊரையும் உலகத்தையும் ஏமாற்றுகின்ற வேலை என்பதால் இனி அவர்கள் இப்படி பாடுவதை நிறுத்தி விடுவது நல்லது.

இந்து சமய மக்கள் ஒன்றுபடுவது இருக்கட்டும்; முதலில் இந்து சங்க பொறுப்பாளர்கள் ஒன்றுபடுகின்ற வழியை இந்த அமைப்பு காணட்டும்.

தேர்தலுக்குப் பிறகு இந்து சங்கம் நடத்திய முதல் நிர்வாக குழுக் கூட்டத்தில் மலாக்கா மாநில பேரவைத் தலைவர் கு. ஜெகசீலன், கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் திருமதி பாலாமணி, சிலாங்கூர் மாநில பேரவைத் தலைவர் மனோகரன் கிருஷ்ணன், பேரா மாநில தலைவர் சுந்தரசேகரர் பெருமாள் ஆகிய நால்வரையும் நீக்கிவிட்டனர்.

இதற்கிடையில் நாட்டின் தென்கோடி பெரு மாநிலமான ஜொகூர் மாநிலத்தை ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலம் வழிநடத்திய ஆர்.இராமகிருஷ்ணனுக்கு ஏற்கெனவே, மோகன் சண்முகம், கணேசன் தங்கவேலு ஆகியோரின் போக்கு குறித்து தெரியும் என்பதால் அவர் முன்னதாகவே பதவி விலகி விட்டார்.

மலேசிய இந்து சங்க தேசியத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது. இந்து சங்கத்தின் மாநிலப் பேரவை களுக்கும் வட்டாரப் பேரவைகளுக்குமான பொறுப்பாளர்களை நியமிக்கிற அதிகாரம் தேசியத் அவரிடமே இருக்கிறது. ஆனாலும் ஒவ்வோர் ஆண்டும் அந்தந்த வட்டாரப் பேரவைகள் மற்றும் மாநில பேரவைகளுக்கான ஆண்டுக் கூட்டம் நடைபெறும் வேளையில்தான் இப்படி புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதும் பழைய தலைவர்களையே நீடிக்கச் செய்வதும் இடம்பெறும்.

‘சங்கபூசன்’, ‘தொண்டர்மாமணி’ ஆர். ராமகிருஷ்ணன்

25 ஆண்டுக் கூட்டங்கள் எல்லாம் முடிந்து திருமுறை விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறாய் இந்த நேரத்தில் இந்த ஐந்து தலைவர்களையும் குறி வைத்துள்ளனர்.

அந்த அளவிற்கு மோகன் சண்முகத்திற்கும் த. கணேசனுக்கும் வஞ்சகமும் ஆத்திரமும் தீராமல் இந்த ஐந்து மாநில தலைவர்களை இணியும் விட்டு வைக்க கூடாது என்று கங்கணம் கட்டி, தங்களுக்கு அடிபணிபவர்களாகப் பார்த்து இந்த ஐந்து மாநில பேரவை களுக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர்

இதில் மலாக்கா மாநிலத் தலைவர் கு. ஜெகசீலன் பதவிநீக்கம் செய்யப்பட்ட விதம் மிகவும் கொடுமையானது.

அந்த மாநிலத்தின் திருமுறை விழாவில் கலந்து கொண்ட தேசியத் தலைவர், விழா முடிவுறும் சமயத்தில் மாநில தலைவர் இன்று பதவி நீக்கம் செய்யப்படுகிறார்! நாளை முதல் வேறு தலைவர் பொறுப்பேற்பார் என்று அதிரடியாக அறிவித்தார்.

ஒரு மாநிலத் தலைவரை, அவர் ஏற்பாடு செய்து நடத்துகின்ற திருமுறை விழா மேடையிலேயே திடீரென்று இப்படி அறிவித்தது குறித்து மலாக்கா மாநிலப் பேரவையில் இடம் பெற்றுள்ள வட்டாரப் பேரவைத் தலைவர்கள் விளக்கம் கேட்டதற்கு, பதில் சொல்லாத கணேசன் உங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு அப்படியே புறப்பட்டு விட்டார்.

‘விவேகரத்னா’ கு ஜெகசீலன்

இதில் வேடிக்கை என்னவென்றால், பிரதமர்துறை அலுவலகத்தில் இருந்து சண்முகம் மூக்கனும் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் தான் மாநிலத் தலைவரை தேசிய தலைவரான கணேசன் நீக்கி இருக்கிறார் என்பது மிகவும் வேதனைக்குரியது.

அதைப்போல சிலாங்கூர் மாநிலத் தலைவர் கி. மனோகரனை நீக்கியபொழுதும் ஒரு சில வட்டார பேரவைத் தலைவர்கள் இது குறித்து விளக்கம் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டார் தேசியத் தலைவர்.

அடுத்த ஆண்டு கூட்டத்திற்குள் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்குமோ தெரியவில்லை.

இவர்கள் இந்து சமய மக்களுக்கும் இந்து சமயத்திற்கும் தொண்டாற்றுபவர்களாகத் தெரியவில்லை.

‘விவேகரத்னா’ பெ. சுந்தரசேகரர்

வேண்டியவர்களை பதவியில் நியமிப்பதும் வேண்டாதவர்களை நீக்குவதும் என இதே வேலையாக இருக்கும் இவர்கள் அடுத்த ஆண்டு தேசியக் கூட்டத்தில் எப்படியாவது இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பொழுதிலிருந்து மாநிலங்களில் வேண்டியவர்களை நியமித்து ஆள் பிடிக்கும் வேளையில் கண்ணேங் கருத்துமாக இருப்பார்கள் எனத் தெரிகிறது.

ஆர். ராமகிருஷ்ணன், கி. மனோகரன், பெ. சுந்தர சேகரர், திருமதி எஸ் பாலா மணி, கு. ஜெகசீலன் ஆகிய ஐவரும் இந்து சமயத்திற்கும் திருமுறைக்கும் இதுவரை நல்ல முறையில் தொண்டாற்றியவர்கள்தானே.

இந்த ஐந்து தலைவர்கள் தலைமை யேற்றிருந்த மாநிலங்கள் திருமுறை வளர்ச்சிக்கு சிறந்த முறையில் பணியாற்றியதாக கடந்த ஆண்டுக் கூட்டத்தில் இதே தலைவர்களால் சிறப்பிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருந்தும் இவர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளனர்.

இவர்களைப் பதவி நீக்கம் செய்தேத் தீருவது என்று முடிவு எடுத்து விட்ட நிலையில் அடுத்த ஆண்டுக் கூட்டம் வரையிலாவது அவர்களை நீடிக்க விட்டிருக்கலாம்; அதை விடுத்து இப்பொழுதே பதவி நீக்கம் செய்ய வேண்டிய அளவிற்கு இவர்களுக்கு மனம் ஆறவில்லை. வஞ்சம் தீரவில்லை.

இவர்களுக்கு இறையச்சமும் தன்னச்சமும் இருக்கிறதா என்பதை காலம் காட்டும்!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை