
மலேசியாவில் வாழ்கின்ற இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய அறிவிப்பு செய்வதாக பேரளவில் ஊடகங்களில் அறிவிப்பு செய்துவிட்டு கடைசியில் இந்த ஆண்டு மித்ரா நிதி நூறு மில்லியன் வெள்ளியில் இருந்து 40 மில்லியன் வெள்ளியை பங்கு போடுவது குறித்து தான் நாடாளுமன்றத்தில் நேற்று மடாணி அரசாங்கத்தின் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார் என்று மலேசிய முன்னேற்ற கட்சி-எம்.ஏ.பி. கிடா மாநில தலைவர் விவேகானந்தன் அம்மாசி தெரிவித்துள்ளார்.
பிரதமர் அறிவித்த வெ.40 மில்லியன் பங்கீடு குறித்து எந்தத் தரப்பினர் எந்தெந்த வகையில் பயனடைய போகிறார்கள் என்பது குறித்து தெளிவான விளக்கமோ அறிவிப்போ எதுவும் இல்லை.
உதாரணத்திற்கு இந்து கோவில்களின் உருமாற்றத்திற்கு, குறிப்பாக வழிபாட்டு தளங்கள் சமய மையங்களாக உருமாற்றம் பெற வேண்டியதன் தொடர்பில் வெ.20 மில்லியன் ஒதுக்கீடு செய்வதாக அன்வார் அறிவித்திருக்கிறார்.
நாட்டில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கும்பொழுது எந்தெந்த ஆலயங்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டு அவை சமூக மையங்களாக உருமாற்றம் செய்யப்படும் என்பது குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
ஏதோ போகிற போக்கில் அள்ளித் தெளிக்கிற விதமாக இந்த அறிவிப்பு இருக்கிறது.
அடுத்து தமிழ்ப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அமைப்பதற்காக ஐந்து மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.
நாட்டில் ஏறக்குறைய 530 தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்ற நிலையில் எந்தெந்த பள்ளிகளில் இத்தகைய அறிவியல் கூடம் அமைக்கப்படும் என்ற விவரமும் துல்லியமாக தெரிவிக்கப்படவில்லை
இதையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான வழிபாட்டு தலங்களையும் தமிழ்ப் பள்ளிகளையும் வைத்து ஏதோ பரபரப்பாக அறிவிப்பு மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தவிர பி-40 தரப்பைச் சேர்ந்த இந்திய குடும்பங்கள் தங்கள் வீடுகளை பழுது பார்ப்பதற்காக 10 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப் படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு முறை ஒரே தவணையாக ஆயிரம் வெள்ளி மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உச்சத்தைத் தொட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் வெறும் ஆயிரம் வெள்ளியை கொண்டு ஒரு வீட்டில் எந்தப் பழுதை சரிபார்க்க முடியும் என்று தெரியவில்லை; இதுகுறித்து அரசு சிந்திக்கிறதா? அறிவிப்பு செய்யும் முன் இந்த மடாணி அரசு ஆராய்ந்து பார்த்ததா என்பதெல்லாம் தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் அறிவித்தது 40 மில்லின் வெள்ளியை எந்தெந்த வகையில் அரசுஒதுக்கப் போகிறது என்பதற்கான அறிவிப்புதான்.
இந்த அறிவிப்பு எல்லாம் எப்பொழுது நடைமுறைக்கு வரும் இதற்கான நிதி எப்பொழுது அளிக்கப்படும் என்பது பற்றிய எந்த விவரமும் சரியாக தெரிவிக்கப்படவில்லை.
இந்த ஆண்டுக்குரிய நூறு மில்லியன் வெள்ளியில் ஏற்கெனவே பாலர் பள்ளிகளின் நிர்வாக செலவு, ஆசிரியர்களுக்கான ஊதியம் என்ற வகையில் 22 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரமணன் அறிவித்துள்ளார்.
தொழில் முனைவோர் மேம்பாடு- கூட்டுறவு வளர்ச்சித் துறை துணை அமைச்சரான ஆர் ரமணன் அறிவித்துள்ளபடி, பாலர் பள்ளிகளுக்காக ஏறக்குறைய 22 மில்லியனும் நேற்று பிரதமர் அறிவித்துள்ள 40 மில்லியன் வெள்ளியும் என மொத்தம் 62 மில்லியன் ஒதுக்கீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
மீதி 38 மில்லியன் வெள்ளி குறித்து எந்த தகவலும் இல்லை.
தற்பொழுது ஆகஸ்ட் மாதம் முடிய இருக்கிறது. ஈராயிரத்து இருபத்தி ஐந்தாம் ஆண்டின் மூன்றில் இரண்டு பங்கு காலம் முடிய இருக்கின்ற இந்த நேரத்தில் இந்த நிதியை எல்லாம் எப்பொழுது ஒதுக்கீடு செய்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்த தகவல் எல்லாம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில் ஆண்டு நிறைவுக் கட்டத்தை எட்டும் பொழுது கைவசம் இருக்கின்ற நிதியை அரசாங்கத்திடம் மித்ரா ஒப்படைக்க வேண்டிய ஒரு நிர்வாக கட்டுப்பாடு இருக்கிறது.
மீதம் உள்ள 38 மில்லியன் பங்கீடு குறித்து மித்ராவும் பிரதமர் துறையும் இனிமேல்தான் ஆலோசித்து முடிவு எடுக்க இருக்கிறார்களாம்.
இதற்கான ஒப்புதலை பிரதமரிடம் இருந்து பெற்ற பிறகு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நிதி ஒதுக்கப்படுமாம்.
மொத்தத்தில் இந்த நடைமுறை எப்பொழுது நடைமுறைக்கு வரும்? சம்பந்தப்பட்ட தரப்பினர் எப்பொழுது பயனடைவார்கள் என்பது குறித்த எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
மொத்தத்தில் மித்ராவின் நிதி ஒதுக்கீடு குறித்து பிரதமர் மட்டுமே முடிவு செய்வதாக தெரிகிறது.
மித்ரா நிர்வாகி பி. பிரபாகரன் மேலும் துணை அமைச்சர் ஆகியோர் இது குறித்து எந்த முடிவும் எடுப்பதில்லை என தெரிகிறது.
பிரதமர் மட்டுமே இதில் ஆளுமை செலுத்துவதாகவும் முடிவெடுப்பதாகவும் தெரிகிறது.
அப்படி என்றால் மித்ராவை மூடிவிட்டு இந்த 100 மில்லியன் மெல்லியை அப்படியே பிரதமரிடமே ஒப்படைத்து விடலாம் என்று கூறத் தோன்றுகிறது.
மித்ரா நிதியினால் மலேசிய இந்தியர்கள் சமுதாய-பொருளாதார-கல்வி தலங்கள் சார்ந்து மேம்பாடு அடைய வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு பொறுப்பாளர்களாக இடை இடையே வருகிறவர்கள் அந்த வகையில் சிந்திப்பதும் இல்லை; செயல்படுவதும் இல்லை.
எல்லவற்றையும் இந்திய சமுதாயம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று ஹிண்ட்ராஃப் இயக்க கெடா மாநில தலைவருமான விவேகானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


