
கோலாலம்பூர், நவ.23:
மும்மொழி கவிதை நூலான எழுத்தோவியம் என்னும் பிரம்மாண்டமான இலக்கியப் படைப்பு நேற்று கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் வெளியீடு கண்டது.
தமிழில் இயற்றப்பட்ட கவிதைகள் மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்த நூல், பலகட்டங்களைத் தாண்டி வெளியிடப்படுவதாக இதுகுறித்த அறிமுக நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ க. குமரன் குறிப்பிட்டார்.
தமிழ் இலக்கியப் படைப்பாளர்களை டேவான் பஹாசா டான் புஸ்தகா அங்கீகரிப்பதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பின் பொறுப்பாளர்-களை அணுகியபொழுது, தமிழிலக்கியவாணர்களின் படைப்புகள் மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால்தான் அதுகுறித்து தங்களுக்கு தெரிய-வரும் என்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டதால் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு அடித்தளம் இட்டவர் கவிஞர் காரைக்கிழார் என்றும் குமரன் தெரிவித்தார். தொடர்ந்து, டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன், பேராசிரியர் கிருஷ்ணன் மணியம், டத்தோ பா. சகாதேவன் ஆகியோரின் வாழ்த்துரைகள் இடம்பெற்றன.
டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரத்திற்கு காணிக்கை ஆக்கப்பட்ட இந்நூல் தொடர்ந்து வெளியீடு செய்யப்பட்டது. விலையில்லாமல் வழங்கப்பட்ட இந்த நூலை அன்பளிப்பு வழங்கி பெற்றுக் கொண்டனர்.


