
தமிழ் மொழி, தமிழர்களின் தொடர்பு சாதனம் மட்டுமல்ல; நம் எதிர்கால இருப்பிற்கான கையிருப்பாகும்; தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோரின் பண்பாட்டு தொல் அடையாளம் என்று உலு சிலாங்கூர் மாவட்ட செந்தமிழ் விழாவில் வரவேற்புரை ஆற்றிய களும்பாங் தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சிவகாமி சுந்தரி தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலம், உலு சிலாங்கூர் மாவட்டத் தமிழ் மொழி பாடக் குழுவும் களும்பாங் தொட்டத் தமிழ்ப் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்த இவ்விழா, உலு சிலாங்கூர் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மன்ற ஆதரவுடன் கடந்த புதன்கிழமை களும்பாங் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

‘தமிழ் எங்கள் உயிர்’ என்னும் கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய சிவகாமி, தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தாய்மொழிமீது கொண்டிருக்க வேண்டிய உயர்தனி மரியாதை, அவர்கள் கைக்கொள்ள வேண்டிய மொழி ஆற்றல், பேச்சாற்றல், சமூகப் பாங்கு, ஒப்புறவு, அறிவியல் பார்வை, ஈதல்-இசைபட வாழ்தல், பரிவுத் தன்மை, அரசியல், ஆன்மிகம் என்றெல்லாம் தமிழில் பொதிந்துள்ள எண்ணற்றக் கூறுகளை இளம் பருவத்திலேயே உணரவும் மற்றவர்க்கு உணர வைக்கவும் கூடிய தன்மைகளைப் பெறவேண்டும் என்னும் உயரிய நோக்கில் உலு சிலாங்கூர் மாவட்ட அளவில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக சிவகாமி சுந்தரி பேசினார்.
சிலாங்கூர் மாநில கல்வி இலாகா, தமிழ் மொழிப் பிரிவு உதவி இயக்குநர் திருமதி ப.விஜயலெட்சுமி, உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத் தலைவரும் புக்கிட் பெருந்தோங் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியருமான மு.சுப்பிரமணியன், சுங்கை ச்சோ தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சாந்தி, பத்தாங் காலி தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்
கலைவாணன், கோல குபு பாரு தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சரசுவதி, எஸ்கோட் தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ராக்கம்மாள், சங்காட் ஆசா தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கலை கோகிலா, கெர்லிங் தோட்டத் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் ச.நாராயணன், 15 தோட்டத் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி அன்னம், களும்பாங் தோட்ட தமிழ்ப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துரை அன்பழகன், களும்பாங் தோட்ட தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மு.இராசசேகரன், பேராக் மாநில தமிழ்ப் பள்ளி மேநாள் அமைப்பாளர் பரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளரான விஜயலெட்சுமி தலைமை உரையாற்றினார்

ஆசிரியராக இருந்தாலும் தலைமை ஆசிரியராக இருந்தாலும் மாவட்ட கல்வி அலுவலகம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படத்தான் வேண்டியுள்ளது. அதுதான் முறையும்கூட; இந்தக் கட்டுப்பாட்டினால்தான் அதிகமான ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.
வரும் காலல்த்தில் இதற்கான தீர்வைக் காண நாம் முயற்சி செய்யலாம்; இருந்தபோதும், இன்றைய இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் குறிப்பாக, களும்பாங் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி சுந்தரிக்கு பாராட்டுத் தெரிவிப்பதாக விஜயலெட்சுமி கூறினார்.
2026-ஆம் ஆண்டு கல்வித் திட்டம், மாணவர்களுக்கான ஐங்கூறுகளை உள்ளடக்கி உள்ளது; அவற்றில் முதன்மையானது, மாணவர்கள் இளம் வயதிலேயே எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது; வெற்றி கிட்டும்பொழுது இருமாப்பு கொள்ளாமலும் தோல்வியின்பொழுது துவண்டுவிடாமலும் எதையும் சமமாக மதித்து அடுத்தக்கட்டத்திற்கு நகரும் திண்மையை மாணவர்கள் கொண்டிருக்க வேண்டுமென்றால், இதுபோன்ற விழாக்களும் விழாக்களை ஒட்டிய போட்டிகளும் அவசியம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் இடை அங்கமாக, ஒரு குழு நடனம் இடம்பெற்றது; அந்த நடனத்திற்காக இளம் மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் ப.கிருத்திகா பாராட்டிற்குரியவர். இவர், களும்பாங் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்.


