
மாபெரும் மனிதநேய அவலத்தை எதிர்நோக்கி இருக்கின்ற பாலஸ்தீன மக்களுக்காக பிரதமர் அன்வார் அவசர நிதியாக வெ.100 மில்லியனை வழங்கி இருக்கிறார். இதை, மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி மிகவும் வரவேற்கிறது என்று கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சொந்த நாட்டில் மிகவும் அவல நிலையில் இருக்கின்ற இந்திய சமுதாயத்திற்கான மித்ரா நிதி 100 மில்லியனை இன்னமும் முழுமையாக வழங்காத பிரதமர் அன்வார் இப்ராகிம் இதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அறுபது முதல் 70 மில்லியன் வெள்ளிவரை 2025-ஆம் ஆண்டுக்கான மித்ரா நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள நிதி எப்போது ஒதுக்கீடு செய்யப்படும் என்ற வினா இந்திய சமுதாயத்தின்பால் அக்கறை கொண்ட தலைவர்களின் மனதில் எழுந்திருக்கின்ற நிலையில் மித்ரா நிதி குறித்த பரிவர்த்தனையில் மிகப்பெரிய குழப்பமும் நிச்சயமற்ற நிலையும் நிலவுவதையும் உணர முடிகிறது.
மித்ரா நிதியைக் கொண்டு பி-40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்காக நிறைவேற்றப்பட இருக்கின்ற வீட்டுடைமைத் திட்டத்திற்கு தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர் ரமணன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பதால், ஏற்கனவே மித்ரா நிர்வாகியாக இருக்கும் பத்து எம்பி பிரபாகரனின் நிலைகுறித்து குழப்பமாக இருக்கிறது
மொத்தத்தில் பி கே ஆர் இந்திய தலைவர்களான பிரபாகரன், ரமணன், சரஸ்வதி ஆகியோரின் முக்கோண நடவடிக்கையினால், மித்ராவிற்கு உள்ளபடியே பொறுப்பு ஏற்று இருப்பவர் யார் என்ற ஐயம் மலேசிய இந்திய சமுதாயத்தில் பரவலாக எழுந்துள்ளது.
ஒருவேளை இந்த மூவருக்கும் இடையே சிண்டு முடியும் வேலை முடுக்கி விடப்பட்டுள்ளதோ என்ற ஐயமும் எழுவதால் இத்தகைய குளறுபடியான நடவடிக்கையால் பாதிக்கப்படுவது என்னவோ மலேசிய நலிந்த இந்தியர்கள்தான் என்று எம்ஏபி வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக 2013 முதல் மித்ராவிற்கு வழங்கப்படும் வெ.100 மில்லியன் மானியத் தொகையில் கொஞ்சம்கூட அதிகரிக்கப்படவில்லை.
ஹிண்ட்ராப் அழுத்தத்தால், தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் தொடங்கிய இந்த நிதி உதவித் திட்டம், கடந்த 13 வருடங்களாக அப்படியேத் தொடர்கிறது; இதில் மடானி அரசின் பங்களிப்பாக ஒரே ஒரு வெள்ளி கூட உயர்த்தப்படவில்லை.
வழக்கமாக வழங்கப்படும் மித்ரா நிதியை பிரித்து கொடுப்பதற்குதான் இந்த ஒற்றுமை அரசாங்கத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது;
தவிர அந்த நிதியை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமோ அக்கறையோ இந்த அரசுக்கு இல்லை.
இந்த 13 ஆண்டு காலத்தில் விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை பற்றியும் இந்த அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்பதை ஹிண்ட்ராஃப் ஜோகூர் மாநிலத் தலைவருமான எ. மோகன் வருத்தத்துடன் சுட்டிக்காட்டி உள்ளார்.


