
புதிய விநாயகத் துதி படைத்துள்ள சரவணன்,
புதிய மஇகா-வைப் படைக்க அருள்புரிவாரா பிள்ளையார்?
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே,
நீயெனக்கு மங்காத ம.இ.கா. தா.. வென
புதிய விநாயக துதி படைத்துள்ளார் மாண்புசால் சரவணன்.
அரசியல்வாணரா இலக்கியவாணரா கவிவாணரா சொல்வாணரா அல்லது அறவாரியவாணரா சரவணனென
எண்ணியெண்ணிப் பார்த்தாலும் இவர்,
எவ்வாணரென எவ்வகையாலும் வரையறைகாண முடியா அளவிற்கு தமிழ்வாணராக இம்மலையகத்திலும் அத்தமிழகத்திலும் ஒருசேர உலா வருதற்கு
தாப்பா வெற்றிவாணராக.., நிரந்தரவாணராக.., உலாவாணராகத் திகழ்தல்தான் கரணியமோவென கணக்கிட்டுப் பார்க்கும் வேளையிலே,
அட போ மனமே,
நீயொரு விளங்காவாணரென மாமன் மகள் திரையில் அசரீரியாக ஒலிக்குமே ‘தமிழனென்று சொல்லடா’ எனத் தொடங்கும் பாக்குரல்,
அக்குரல்போல கடந்துபோன குரலை மடுக்கத் தவறவில்லை என் செவியும்!
சரி,
நீதான் சொல்லேன் எவ்வாணர் சரவணனெனக் கேட்டதற்குப் பதிலில்லை;
நாற்புறமும் சுற்றிப் பார்த்தேன்; அமைதியுற செவி மடுத்தும் பார்த்தேன்; பயனில;
உடல்வாணரல்லாக் குரல்வாணராக
இடித்துரைக்க மட்டும் தெரிந்த உனக்கு எடுத்துரைக்க வகையில்லையோயென, சாடாமல் சாடிய பின்னும்,
ஆறாமனத்தினனாக,
அட அசரீரி,
சுற்றமறியா உனக்கு குற்றம் சொல்லமட்டும்தான் தகுதிபோலும் என்று பொறுமிய மட்டில் அமைதிப்பட்டது குமரியின் மனம்!
ஆனாலும், சதாவதானி செய்குதம்பி பாமகன்-அறிவு மேதை “மனம் என்பது அணையா அடுப்பு”என்று சொன்னதைப் போல என்மனமும் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தது!
நாடாளுமன்ற வாணராக இருப்பதொரு காரணமோ?
மேலவை கீழவை சேர்த்து வெள்ளிவிழாவாணராக, அதுவும் தொடர்வாணராகத் திகழ்வதுமொரு காரணமோ?
மலேசிய அரசியல் பாட்டையில் பயணிக்கும் தமிழத் தலைவர்களில் இப்படியொரு வாய்ப்பு, வாய்த்ததில்லை எவருக்கும்; அதற்கேற்ற தகைமையும் உண்டு சரவணனார்க்கு;
மலேசியத் தமிழ் நெஞ்சத்தினர் ஆயிரக்கணக்கானோருக்கு இலக்கிய விருந்தோடு வயிற்று விருந்தையும் ஒருசேர, அதுவும் மூன்று வேளையுடன் மூன்று நாளுக்கு கம்ப விழா என்னும் பெயரில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் அளித்திட்ட சரவணபவவாணன் நீ!
கம்பனும் சடையப்ப வள்ளலும் ஒன்றிணைந்து உதித்திட்ட உறுபிறவியோ நீயென நினைக்கும் அளவிற்கு தலைநகரத்து அருள்மிகு அன்னை மாரியம்மன் ஆலய வளாகத்தில் இன்னொரு கம்ப விழா!
அதே மூன்று நாள்; அதே மூவேளை உணவு; அதே இலக்கியச் சாரலோடு!
தமிழைப் பாடும் ஒரு சில கவிவாணருக்கு எங்கிருந்துதான் வாய்க்குமோ இத்தனை மனத்திண்மை?
இன்னும் சில மாதங்களில் யானையால் தூக்கி அடிக்கப்பட்டு இந்த தமிழ் மண்ணில் சரியவுள்ளோம் என்பதை உணராத மாகவி பாரதிக்கு, இன்னும் 27 ஆண்டுகள் கழித்து கிடைக்க இருக்கின்ற இந்திய விடுதலையைப் பற்றி மட்டும் எப்படி ஊகிக்க முடிந்தது?
இதோ இப்பொழுதே கையில் நாட்டு விடுதலை கிடைத்துவிட்டதைப் போலவும் சுதந்திர அன்னை தன்னை அரவணைத்து நிற்பதைப் போலவும்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பட்டறிவு மனத்தோடு பாப்புனையும் திண்மை எப்படி வாய்த்தது பாரதிக்கு?
அதைப்போல கண்ணதாசனுக்கும் “நான் நிரந்தரமானவன்; எனக்கு அழிவில்லை” என்று சொல்லும் வீரதீரம் உள்ளத்தே உதித்தது எப்படி?
தமிழ்ச் சொல்லெடுத்து பாக்களைப் படைப்பதால் நானும் இறைவன்தான் என்று சொல்லும் திண்ணிய மனம் எப்படி வாய்த்தது எட்டாம் வகுப்பு கல்விகூட முழுமையாக எட்டாத இந்த அபலை மாணவனுக்கு?
தமிழன்னை யாத்த பெரும்பேறாக இருக்குமோ இந்த கவிப்பெருமகனுக்கு?
அருள்முனைவர் போன்ற தமிழ் நெஞ்சத்தினர் “புலவர் நக்கீரன் அவர்களே!” என்று என்னை அழைக்கும் பொழுது உள்ளம் கூனும்; குறுகும்.
யாப்பிலக்கண வழிநின்று ஒரேயொரு வரி கவிதைகூட எழுத இயலா என்னைப் புலவர் என்று சொல்லாதீர் ஐயா என்று அக்கணமே மண்டியிடுவேன்.
வயது 62-ஐ எட்டிய பின்னும் இன்னமும்தான் யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டிருக்கிறேன் அவ்வப்பொழுது; ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டிருக்கிறேன்.
தமிழ்த் திருமகன் கம்பார் கனிமொழியின் நேரடி யாப்பிலக்கண வகுப்பிலும் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை நடத்திய இணையவழி யாப்பிலக்கண வகுப்பிலும் சேர்ந்து பாதியில் மட்டம்போட்ட மாணவனாகி நிற்கிறேன்.
வெட்கம்தான் எடுத்துச் சொல்ல! ஆனாலும் உண்மை உண்மைதானே!
ஒருவேளை தமிழன்னை கண்ணதாசனின் பக்கம் தனிக்கருணை செலுத்தி இருப்பாளோ என்ற பொறாமையும் அவ்வப்பொழுது வந்து போகிறது மனதில்.
அப்படிப்பட்ட கண்ணதாசனை இற்றைத் தலைமுறையினருக்கு ஆண்டு தப்பாமல் கூட்டம் நடத்தி எடுத்துச் சொல்கின்ற போதினிலே பல்துறை சார்ந்த சான்றோர்க்கு விருதும் கேடயமும் வழங்குகின்ற கண்ணதாசன் அறவாரியத்தை சிந்தாமல் சிதறாமல் வழிநடாத்துகின்ற மு. சரவணன்,
இற்றைப்போதில் ஆவணி மாதத்து, வளர்பிறை காலத்து நான்காம் பிறை நாளில் கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஔவை மூதாட்டியின் ஒரு பாட்டை எடுத்து கையாண்டு தொழுது இருக்கிறார் அந்தத் தும்பிக்கை நாயகனை!
சுட்டாலும் தங்கத்தின் குணம் மாறாது என்பதை போல, ஓர் அரசியல்வாதியின் தன்மை எப்படியாவது முன்வந்து துருத்தி நிற்கும்;
அதைப்போல, பிள்ளையாரை வணங்குகிற சாக்கில் அவரை வாழ்த்தி விட்டு தன் கோரிக்கையையும் வெளிப்படுத்தி இருக்கிறார் சரவணன்.
அதன் கடைசி வரியை மட்டும் உருமாற்றி,
தானும் ஒரு கவி மகனாக உருமாற்றம் பெற்று வருவதை இம்மலையகத் தமிழ்க் குலத்திற்கு சொல்லாமல் சொல்லி இருக்கிறார் சரவணன் ும் தத்துவமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா
என்று ஔவை மூதாட்டி பாடியதாக தமிழ்ச் சமூகத்தில் குறிப்பாக இறை எல்லையில் செம்மாந்து இருக்கின்ற தமிழ்ப் பெருமக்கள் எண்ணியெண்ணி மகிழ்வது உண்டு.
அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவும் தொடரவும் பிள்ளையார் அருளாசி வழங்கினால், குமரிக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.
ஆனாலும், இப்படியொரு பாட்டைப் பாடிய ஔவைப்பாட்டி என்னும் மூதாட்டி ஒருத்தி இருந்தாளா என்பதே ஐயத்திற்குரியது.
தமிழர்க்கு முதல் அன்னையாக என்றோ வாய்த்திட்ட தமிழ் அன்னையை
‘என்றோ’என்றால் நேற்றோ அல்லது நேற்றைய முன்தினமோ அன்று!
பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மண்ணில்..,
தமிழர்தம் தலைநிலத்தில்.., அந்நிலத்தே வாழ்ந்த தமிழர்நம் நெஞ்சங்களில் நிறைந்திட்ட தமிழ் அன்னையை நேற்று வந்த பிள்ளையாரிடம் பசும்பாலைக் கொடுத்து தமிழ்ப் பாலைக் கொடு என்று கேட்பதாக ஓர் ஔவையார் இயற்றியதாக ஒரு பாடல் இருக்கிறது என்றால் இதை விட தமிழன்னைக்கு சிறுமையும் இழுக்கும் இருக்க முடியுமா என்ன?
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒன்றல்ல இரண்டல்ல; ஏராளமான ஔவையார் இருந்துள்ளனர்; வாழ்ந்துள்ளனர்.
மலேசிய மண்ணின் மாகவி ‘நினைவில் வாழும்’ பாண்டியனார் என்னிடம் 33 ஔவையார் பட்டியலைத் தந்திருக்கிறார், அவர் கைப்பட எழுதி!
அற்றைய காலத்தில் மன்னர் ஆட்சிக்காலத்தில் சகலகலா வல்லியருக்கு வழங்கப்பட்ட பட்டயம் – விருதுதான் ஔவை என்பது!
தமிழில் பாபுனையும் ஆற்றலுடன் பச்சிலை வைத்தியம் உள்ளிட்ட சித்த மருத்துவம், சிலம்பம், நல்ல உணவாக கிடைத்தால் வயிறாற உண்ணுவதும் பசித்தால் புசிக்க ஏதும் கிடைக்காவிட்டாலும் சொன்னபடி கேட்கின்ற வயிற்றைப் பெற்று, பலகாத தூரம் நடப்பது; உடல் வாடினாலும் உள்ளம் வதங்கினாலும் வழியில் எதிர்ப்படும் தீயர்க் கூட்டத்தை ஒரு கம்பைக் கொண்டு சமாளிக்கும் கம்பு சுற்றும் வித்தை, சமையல் கலையுடன் பழைய உணவு மூக்கருகே வரும் முன்னே அந்த உணவு எத்தகைய தன்மையுடையது எத்தனை நாளுக்கு முன்பு சமைக்கப்பட்டது? நஞ்சு கலந்ததா என்பதையெல்லாம் உணரும் நுண்ணறிவு, மன்னர்களுக்கு இடையே நாடு கடந்து தூதராக பணியாற்றும் அறிவாண்மை என எண்ணிறந்த கலைகளை அறிந்து காலமெல்லாம் கன்னிராகவே வாழும் பெருமாட்டிகளுக்கு வழங்கப்பட்ட பெயர்தான் ஔவை.
அந்த வகையில் தமிழ்ப் பெருநிலத்தில் வரலாறு நெடுகிலும் தமிழ் இலக்கியப் பாதை யெங்கினும் அளவிறந்த ஔவையர் வாழ்ந்துள்ளனர்.
அப்படிப்பட்ட ஔவையருள், தமிழ்த் துரோகியர்க் கூட்டத்தின் துணையுடன் ஒரு பொய் ஔவையும் நுழைந்திருக்கக் கூடும்!.
அதுதான் இப்படி பால்-பருப்புடன் மண்ணாங்கட்டியும் தருகிறேன் உனக்கு; நீயோ எனக்குத் தமிழைக் கொடு என்று பாடியதாக கதை புனைந்திருக்க கூடும்.
அல்லது, எவனோ ஒரு தமிழ்த் துரோகி ஔவை பெயரில் இப்படியான பாட்டை புனைந்து இருக்கக்கூடும் என்று உறுதியாகவும் ஆணித்தரமாகவும் நம்பலாம்.
நேற்று வந்த பிள்ளையாரிடம் லஞ்சம் கொடுத்து தொல்மொழியாம் செம்மொழித் தமிழை யாசகம் பெறும் மனம் கொண்டவளாக ஔவை மூதாட்டி இருந்தால் என்றால், அவள் நிச்சயமாக தமிழச்சியின் மடியில் பால் குடித்து வளர்ந்த ஔவையாக இருக்க முடியவே முடியாது!
ஆனாலும் இங்கு அது பொருட்டன்று!
பிள்ளையாரை உயர்த்துவதற்காக தமிழை தாழ்த்தி புனையப்பட்ட இந்தப் பாடலை பிள்ளையார் பிறந்த நாளான இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி நாளில் எடூத்துக் கையாண்டு, அப்பாடலின் கடைசி வரியை மாற்றி,
புதிய விநாயகர் துதி
என்று தலைப்பும் இட்டு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ யெனக்குச்
மங்காத ம.இ.கா. தா என்று விநாயகனிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் சொல்வேந்தர் சரவணன்.
இதற்கு விநாயகர் அருள் வழங்குவாரோ இல்லையோ யான் அறியேன்!
ஆனாலும் முயற்சி திருவினை ஆக்கும் என்னும் வள்ளுவனின் வாக்கை கையாண்டால், மங்காத மஇகா சரவணர் வசமாகும்.
அதேப்போதில், அவர் மலேசியத் தமிழ்க்குடியின் தானைத் தலைவராகவும் உருமாறக்கூடும்.
அதற்கு இசைவாக நல்லாரும் வல்லாரும் உடன் இருந்தாலும் பொல்லாரும் , இழையோடி இருக்கக்கூடும்.
அதைக் களைவதற்கான சங்காரத்திற்கு சரவணன் அணியமாக இருந்தால் மங்காத மஇகா, எந்த நேரமும் சரவணவசமாகும்!


