Thursday, April 2, 2026

அரசியல் சாசன மாண்பைக் காக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்களா? -பொன் வேதமூர்த்தி வினா!

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வகிக்கும் பிரதமர் பொறுப்பின் சட்டப்பூர்வ தன்மை குறித்து கேள்விஎழுப்புவது மாட்சிமைக்குரிய மாமன்னரின் அரச நிறுவனத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தியும் பாதுகாப்பதாகும் என்று வழக்கறிஞரும் வழக்குரைஞருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மேன்மை, சட்டத்தின் ஆட்சி ஆகியவை ருக்குன் நெகாரா கோட்பாட்டின் கொள்கை மட்டுமல்ல – அவை நாட்டின் நிர்வாக நிலைத்தன்மை மற்றும் நீதியை உறுதி செய்யும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் அடித்தளமுமாகும்.

இருப்பினும், ஒரு கிரிமினல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு பின்னர் அரசியலமைப்புச் சட்டம் 42-ஆவது பிரிவின்கீழ் மன்னிப்பு பெற்ற டத்தோஸ்ரீ அன்வார், தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாட்சிமைக்குரிய மாமன்னரையும் தவறாக வழிநடத்தியதாகத் தெரிகிறது, 2022 நவம்பர் 19 நாடாளுமன்றத் தேர்தலில் தான் வேட்பாளராகப் போட்டியிடத் தகுதி பெற்றிருப்பதாக நம்பவைத்த அன்வார், பின்னர் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 48 என்பது ஒரு தனி விதியாகும்; தண்டனை பெற்ற ஒருவர் மாட்சிமைக்குரிய மாமன்னரிடம் இருந்து ‘சுதந்திரமான மன்னிப்பு’ பெறாவிட்டால், அவர் விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக இந்தப் பிரிவு வரையப் பட்டுள்ளது. ஆனால், பிரிவு 42இன் கீழ் வழங்கப்பட்ட மன்னிப்பு, பிரிவு 48இன்படி வழங்கப்பட்ட முழு மன்னிப்பிலிருந்து மிகவும் வேறுபட்டது.

எனவே, டத்தோஸ்ரீ அன்வார், நம் அன்பிற்குரிய இந்த தேசத்தை ஒரு மோசடியுடன் வழிநடத்த ஏன் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் கேள்வி;

டத்தோஸ்ரீ அன்வார் பெற்ற மன்னிப்பை கேள்விக்குட்படுத்துவது, மாட்சிமைக்குரிய மாமன்னரின் ஞானத்தை கேள்விக்குட்படுத்தும் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. தன் கருத்துப்படி, டத்தோஸ்ரீ அன்வார், அரசியல் சாசனப்பிரிவு 48இன்படி பெறாத மன்னிப்பு விசயத்தில் மலேசியர்களை தவறாக வழிநடத்தி ஏமாற்றியுள்ளார். இந்த உண்மையை கேள்விக்குட்படுத்துவது, உண்மையில் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாமன்னரின் அரச நிறுவனத்தையும் பாதுகாக்கும் செயலாகும் என்று பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க ஒரு மலேசிய குடிமகனாக இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அன்வார் தொடர்பான இந்த வழக்கில் நீதித்துறையின் நீண்டகால செயல்முறையால், அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்காலம் முடிந்த பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் அபாயம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது, மிகவும் கவலை அளிப்பதாகும்; அன்வாருக்கு மன்னிப்பு வழங்கியதில் மாட்சிமை பொருந்திய மன்னரின் நிலையை கேள்வி எழுப்புவதாக குற்றம் சாட்டப்படுவோமோ என்ற அச்சத்தில் அவர்கள் மூழ்கியுள்ளனர்.

மலேசியாவில், அரசியல் ரீதியாக கேள்வி கேட்பவர்களுக்கு எதிராக அச்சத்தையும் எதிர்மறையான கருத்துக்களையும் உருவாக்க அதிகாரத்தில் இருப்பவர்கள் அமலாக்க இயந்திரத்தையும் ஊடகத்தையும் பயன்படுத்துகின்றனர்.

2018 மே மாதத்தில் டத்தோஸ்ரீ அன்வாருக்கு அரசியல் சாசனப்பிரிவு 42இன் படி மன்னிப்பு வழங்கியதில் மாட்சிமைக்குரிய மாமன்னரின் அதிகாரத்தையும் ஞானத்தையும் எவரும் மறுக்கவில்லை; அதேவேளை, டத்தோஸ்ரீ அன்வாரின் மன்னிப்பு குறித்த அதிகாரப்பூர்வ ஆவணம் இதுவரை பகிரங்கப்படுத்தப் படவில்லை என்பதையும் அரசியல் சாசனப் பிரிவுகள் 42 மற்றும் 48, இரண்டையும் சமன்படுத்தும் எந்தவொரு முயற்சியும் மிகவும் ஆபத்தானது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

குறிப்பாக, உண்மையை நேசிக்கும் அனைத்து மலேசியர்களும் கூட்டாட்சி அரசியலமைப்பைப் பாதுகாக்க குரல்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை