Thursday, April 23, 2026

மசீச-மஇகா பின் கதவு பேச்சு!போட்டுடைத்தது பெரிக்காத்தான்!!

குரங்கு தன் குட்டியைவிட்டு ஆழம் பார்ப்பதைப்போல, மஇகா(மலேசிய இந்தியர் காங்கிரஸ்) தேசியத் தலைமை, கடந்த சுதந்திர மாதத்தில் நாடு முழுவதும் நடைபெற்ற அதன் மாநிலக் கூட்டங்களில் மாநிலத் தலைவர்களை கொம்புசீவிவிட்டதுடன் அல்லாமல் அவர்களை தங்களின் நிகழ்கால அரசியல் கூட்டணியான தேசிய முன்னணி தலைமைக்கும் தேசிய முன்னணி என்ற பெயரில் அதன் நாட்டாண்மை அம்னோ மட்டும் நம்பிக்கைக் கூட்டணியுடன் சேர்ந்து அமைத்துள்ள மடாணி கூட்டரசு அல்லது ஒற்றுமை அரசாங்கத்திற்கும் எதிராக ஒருசேர பாயும்படி பாய்ச்சல் காட்டச் செய்தது.

உண்மையில் மஇகா மாநிலத் தலைவர்களுக்கு, தற்போதைய ஒற்றுமை அரச்சாங்கத்திற்கு எதிராகவோ அல்லது தங்களின் முன்னாள்/இந்நாள் பெரியண்ணன் அம்னோ’விற்கு எதிராகவோ வாய்த் திறக்கவும் முச்சுவிடவும் கொஞ்சமும் திராணி கிடையாது.

ஆனாலும் அப்படி கூக்குரல் எழுப்பினர் என்றால், அதற்கு கட்சியின் தேசியத் தலைமை அவர்களை உசுப்பி விட்டதுதான் காரணமேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

பெர்லிஸ்-கெடா-பினாங்கு-பேராக்-ஜோகூர்-நெகிரி செம்பிலான்-மலாக்கா-கிளந்தான்-பகாங்-சிலாங்கூர்-திரங்கானு-சபா உள்ளிட்ட அனைத்து மாநில மஇகா தலைவர்களும் தத்தம் மாநிலக் கூட்டத்தில் அம்னோ தலைவரும் தேசிய முன்னணித் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ முனைவர் ஜாஹிட் அகமட் ஹமிடி, மஇகா-விற்காக எதுவும் செய்யவில்லை என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் ஏதும் பேசவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டனர்; பிரதமர்கூட அமைச்சர் பதவி கொடுக்கா-விட்டாலும் ஜிஎல்சி எனப்படும் அரசுசார் நிறுவனங்களில்கூட எந்த வாய்ப்பும் கொடுக்காமல் மஇகாவை அடியோடு புறக்கணிப்பதாக சீருடை அணிந்த பாலர்ப் பள்ளி மாணவர்களைப்போல ஒரேவிதமாக புலம்பித் தீர்த்தனர்!

தேசியத் தலைமையோ அத்தகையக் காட்சிகளை புன்முறுவல் பூத்த முகத்துடனும் நமட்டுச் சிரிப்புடனும் கண்டு ரசித்தபடி கடந்து சென்றதே அன்றி, தன்னுடைய கருத்து என்னவென்று ஆணி அடித்தாற்போல எதுவும் சொல்லவில்லை. பாரதியார் மொழியில் சொல்வதென்றால் “பல சின்னஞ்சிறு கதைகளைப் பேசி” கடந்து சென்றது.

சிலாங்கூர் மாநிலத்தின் 79-ஆவது ஆண்டுக் கூட்டம், ஆகஸ்ட் 24-இல் நடைபெற்றபோது, அதன் மாநிலத் தலைவர், மஇகா இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி தலைமை மஇகா-வை தேவையான(தேர்தல்) சமயத்தில் மட்டும் பயன்படுத்திக் கொண்டு மற்ற வேளைகளில் புறக்கணிப்பதால், இனியும் இந்தக் கூட்டணியில் தொடரவேண்டுமா என கூட்டத்திற்கு வந்தவர்களைக் கேட்டும் கையை உயர்த்தச் சொல்லியும் எழுந்து நிற்கச் சொல்லியும் உரக்க முழங்கச் செய்தார்.

அந்தக் கூட்டத்திலாவது, தேசிய முன்னணியில் நீடிக்கிறோமா அல்லது பெரிக்காத்தான் நேஷனல் என்னும் தேசியக் கூட்டணிக்கு தாவ இருக்கிறோமா என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால், கெடா மாநிலக் கூட்டத்தின்போதுமட்டும், மஇகா எந்தக் கட்சியுடனும் பூர்வாங்க பேச்சுநடத்தத் தயாராக இருப்பதாக, தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பேசினார்.

இந்தக் கட்டத்தில், பெரும் மனக்கலக்கத்திற்கு ஆளான ஒருவர் உண்டென்றால், அவர் புனிதனாகத்தான் இருப்பார்.

வரும் 16-ஆவது பொதுத் தேர்தலின்போது, மஇகா, தேசியக் கூட்டணியில் இணைவது குறித்து தேசியக் கூட்டணி உச்சமன்றத்துடன் பேச்சு எதனையும் நடத்தவில்லை என்று, தன் ஆதங்கத்தையும் அதிருப்தியையும் மறைமுகாம வெளிப்படுத்தினார் புனிதன்.

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்துள்ள ஒரே இந்தியர்க் கட்சி தன்னுடைய கட்சியாகத்தான் இருக்கும் என்று மலேசிய இந்திய மக்கள் கட்சித்(MAPP) தலைவரும் மஇகா இளைஞர் பிரிவின் மேநாள் தலைவருமான ப.புனிதன் கொண்டிருந்த ஏகாந்த நிலைக்கு சறுக்கல் ஏற்படுத்தும் விதமாக தற்போதையை மஇகா நிலை இருப்பதால், அதை புனிதனால் ஏற்கமுடியவில்லை போலும்!

அதனால்தான், தன் முன்னாள் நண்பர்களை வரவேற்க அவர் தயாராக இல்லை எனத் தெர்ரிகிறது. பெரிக்காத்தான் கூட்டணியில் ஏகபோக இந்தியத் தலைமையாக தாம்தான் இருப்போம் என்ற நிலையை சிதைக்கும் நிலையை மஇகா ஏற்படுத்தினால் புனிதன் என்னதான் செய்வார், பாவம்!

கட்சியின் எதிர்காலம் கருதியும் இந்திய சமுதாயத்தின் நலம் கருதியும் எந்தக் கட்சியுடனும் பேச்சு நடத்த மஇகா தயார் என அதன் தேசியத் தலைவர் அறிவித்துவிட்ட நிலையில், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணனோ அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கின்ற மஇகா தேசிய பேராளர் மாநாட்டின்போது, கட்சியின் எதிர்காலம் குறித்து தீர்க்கமாக அறிவிக்கப்படும் என்று தெளிவுபடுத்தி விட்டார்.

அப்படியானால் ஒவ்வொரு மாநிலக் கூட்டத்திலும் தங்கள் கூட்டணித் தலைமையையும் நாட்டின் நிருவாகத் தலைமையையும் மஇகா மாநிலத் தலைவர்கள் சாடியது ஏன்?

மஇகா தற்பொழுது அடையாள அரசியல் நடத்துவது தெளிவாகத் தெரிகிறது. அடுத்தத் தேர்தலில் சபா மாநிலத்தில் மஇகா போட்டியிடும் என்று முதல் நாள் அறிவிப்பது, “எங்களின் வலிமை எங்களுக்குத் தெரியும்; அதனால், சபா மாநிலத்தில் போட்டியிடும் ஆபத்தான முயற்சியை மேற்கொள்ள மாட்டோம்” என்று அடுத்த நாள் நழுவுவது என தொடர்ந்து அடையாள அரசியல் புரிகிறது மஇகா!

இப்பொழுதுகூட மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் அதன் தேசிய ஊடகப் பிரிவுத் தலைவருமான எல்.சிவசுப்பிரமணியன், “நாங்கள் ஒன்றும் மௌனமாக இருக்கமாட்டோம்” என்று கம்பு சுற்றி இருக்கிறார்.

மொத்தத்தில் புனிதனின் வயிற்றெரிச்சலை, அதிக்கரித்து வந்த மஇகா மாநிலத் தலைவர்கள் வரிசையில் இப்பொழுது சிவசுப்பிரமணியனும் இணைந்துள்ளார்.

இந்த நிலையில்தான், ம.சீ.ச.(மலேசிய சீனர் சங்கம்)வும் மஇகா-வும் தங்களுடன் பூர்வாங்க பேச்சு நடத்தி வருவதாக பெரிக்காத்தான் கூட்டணி பொதுச் செயலரும் இக்கூட்டணியின் ‘பெரிய போலீஸ்’ பெர்சத்துக் கட்சியின் பொதுச் செயலருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இன்று பளிச்சென போட்டுடைத்து விட்டார்.

கடந்த 14-ஆவது நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, அணிதாவிய அரசியலின் நாயகனான அஸ்மின் அலி, தற்பொழுது பண்பட்ட அரசியல்வாதியாக உருமாறி வருகிறார்; கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் தன்னுடையை மாணவனும் தற்போதைய சிலாங்கூர் மந்திரி பெசாருமான (முதல்வர்) டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் மண்டியிட நேர்ந்ததை இன்றளவும் அஸ்மின் அலியால் ஏற்கமுடியவில்லை.

மொத்தத்தில், ஒரே நேரத்தில் இரு குதிரையில் சவாரி செய்யும் போக்கு மஇகா-விற்கு நல்லதல்ல:

மஇகா, வெறும் தமிழர்-இந்தியர் கட்சிமட்டும் அல்ல; வேறுபல வரலாற்று பெருமையும் பாரம்பரிய சிறப்பும் அதற்கு உண்டு;

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை