
உலக அரசியல் அரங்கில் 140-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருக்கும் நிலையிலும் பாலஸ்தீன மண்ணை முழுதாக விழுங்கப் பார்க்கும் இஸ்ரேலின் எண்ணத்திற்கும் இராணுவ அத்துமீறலுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓரவிழிப் பார்வையால் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதெல்லாம் அமெரிக்க அதிபராகின்றன்ரோ அப்பொழுதெல்லாம் ஆதிக்க அரசியல் மேற்கொள்ளப்படுகிறது.

ஈராக்வாழ் இஸ்லாமிய சமுதாயத்தில் சன்னி-ஷியா பிரிவினைச் சிக்கல் இருந்ததும் இருப்பதும் உண்மைதான்; இதை சாக்காக வைத்து, சதாம் உசேன் அத்தியாயத்தை முடித்துக் கட்டியதும் இதேக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் W. புஷ்தான்.
அந்த வகையில் சுவை கண்ட பூனையைப் போல, டிரம்ப், காஸா மண்டலத்தைச் சிதைத்து அதை நெத்தன் யாகுவிடம் ஒப்படைக்க கங்கணம் கட்டியிருப்பதை உலகம் அறியாமல் இல்லை; அந்த துணிச்சலில்தான் அண்மைக் காலமாக காஸா போர் முனையில் பசி-பட்டினியை செயற்கையாக ஏற்படுத்தி, அதையே போர் ஆயுதமாகவும் பயன்படுத்தி வருகிறது இஸ்ரேலின் கொடிய இராணுவம்.

தற்பொழுது, கொடுமையான பசிப்பிணிக்கு ஆட்பட்டு, அல்லலுற்று அபலையராக உள்ள மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக ஓர் இலக்கிய நிகழ்சியையேப் படைத்துள்ளார் முனைவர் மௌலவி எஸ்.ஏ. சையது இபுராகிம் அல்-புகாரி.
மலேசியாவின் பாரம்பரியத் தலைநகரான கோலாலம்பூரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான தமிழர் பள்ளிவாசலின் தலைமை இமாமான சையது இபுராகிம், ’63 இரத்தினங்கள்’ என்ற பெயரில் இயற்றிய நூலின் வெளியீட்டு விழாவழி கிடைக்கும் நிதி மொத்தத்தையும் காஸா மக்களுக்கு வழங்க முன்வந்துள்ளார்.

இஸ்லாத்தின் உயிர்நாடியான அல்-குரான் என்னும் மறைநூலில் பொதிந்துள்ள மாந்தநேய கருத்துக்களையும் பண்பாடு சார்ந்த எண்ணத்தையும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகளாகவும் எளிய உரைகள் மூலமும் 63 தலைப்புகளில் தொகுத்து, அவற்றை 63 இரத்தினங்கள் என்ற பெயரில் நூலாக்கி, அதை, நேற்று செப்டம்பர் 10, புதன்கிழமை முன்னிரவில் கூட்டரசுப் பிரதேச பள்ளிவாசல் (Masjid Wilayah) அரங்கத்தில் சையது இப்ராகிம் வெளியீடு செய்தார்.
நாட்டுப் பண் மரியாதையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, நூலசிரியரும் கோலாலம்பூர் தமிழர் பள்ளிவாசல் தலைமை இமாமுமான மௌலவி எஸ்.ஏ. சையது இப்ராகிம் வழங்கிய அரபுமொழி குர்ஆன் வசனத்துடன் தொடர்ந்தது;
இதேப் பள்ளிவாசலின் துணை இமாம் வி.எம்.ஜே. முகம்மது யூசுஃப் குர்-ஆன் வசனத்தை ஆங்கிலத்தில் வழங்கினார்.

கோலாலம்பூர் S.I.M.S. அமைப்பின் துணைத் தலைவர் சர்ஃபுதீன் வழங்கிய வரவேற்புரை, இஸ்லாமிய கல்வி வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி முகம்மது இக்பால் வாழ்த்துரைக்குப் பின், பிரதமர் துறை இஸ்லாமிய மேம்பாட்டு அமைச்சர் செனட்டர் டத்தோ செத்தியா ஹாஜி முகமட் நைம் பின் ஹாஜி மொக்தார் சிறப்புரை ஆற்றி ’63 இரத்தினங்கள்’ நூலை வெளியீடு செய்தார்.
அதற்குமுன், தமிழ் மொழியின் சிறப்பு, குர்-ஆனின் மேன்மை, இளைய சமுதாயம் சமயம்-பண்பாடு சார்ந்து பெற வேண்டிய கருத்துகள் நூலில் இடம்பெற்ற பாங்கு குறித்தெல்லாம் அமைச்சர் குறிப்பிட்டது வியப்பாக இருந்தது.

அமைச்சருக்குத் தமிழ் தெரியுமா என்பது தெரியவில்லை; ஒருவேளை, தமிழ்மகன் யாரிடமாவது நூலைப் பற்றி கேட்டுத் தெரிந்திருக்க வேண்டும். அமைச்சரிடம் வெளிப்பட்ட ஒரு தலைசிறந்த பண்புநலனாக, இது பார்க்கப்படுகிறது.
தமிழ் இஸ்லாமியர்களாகிய தங்களுக்கு இஸ்லாம் சமயவழியாக இருந்தாலும் இன்பத் தமிழ்தான் என்றைக்கும் வாழ்க்கை மொழியென்று முகம்மது இக்பால் உரையாற்றியபோது குறிப்பிட்டது மிகவும் சீருடையது.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து உஸ்தாத் கம்பம் பீர் முகம்மது பாகவி வழங்கிய இறையோதலுடன் அரங்கத்து சமய இலக்கிய நிகழ்ச்சி நிறைவுபெற்றாலும் பக்கத்து அரங்கத்தில் விருந்தோம்பல், ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தல், விடைபெறுதல் என நிகழ்ச்சி வேற்று வடிவில் தொடர்ந்து கொண்டிருந்தது;
இது நீடிக்குமட்டும் அங்கே நிலைக்க, குமரியால் முடியவில்லை.
இந்த நிகழ்ச்சிக்கு வர இயலாதவர்கள் தொடர்ந்து அளிக்க இருக்கும் நிதி முழுவதையும் திரட்டி கூடிய விரைவில் மத்தியக் கூட்டரசின் ஒப்புதல்-வழிகாட்டலுடன் காஸாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று நூலாசிரியரும் மார்க்கமேதையுமான முனைவர் சையது இபுராகிம் தெரிவித்தார்.
மொத்தத்தில் பன்னாட்டு அரசியல்-இஸ்லாம் மார்க்கம்-இலக்கிய தாக்கம் ஆகிய முக்கூறுகள் சங்கமித்த நிகழ்ச்சியாக அமைந்திட்ட இந்நிகழ்வில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். MMYC, SIMS ஆகிய அமைப்புகளின் ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ‘GTM-மலேசியா’ அமைப்பு ஆதரவு வழங்கியது.


