Thursday, April 2, 2026

பாஸ் கட்சி முன்னாள் இந்திய ஆதரவுப் பேரவையினர் கபட நாடகம்!!

Made with LogoLicious Add Your Logo App

மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராப் கெடா மாநிலத் தலைவர் விவேகானந்தன் அம்மாசி நேற்றைய முன்தினம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாஸ் கட்சி இந்திய ஆதரவாளர் பேரவை(டிஹெச்பிபி) முன்னாள் தலைவர் செனட்டர் சுப்பிரமணியம் நாச்சியப்பன் வெளிப்படுத்திய வெற்றுக் கூற்றை கடுமையாக சாடி உள்ளார்.

மலேசிய இந்திய சமூகத்தை மொத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துவதாக வெற்றுப் பெருமை பேசத் துணிந்த நா.சுப்பிரமணியம், மலேசிய இந்திய சமூகம் எதிர்கொண்டிருக்கும் எண்ணற்ற பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை ஒரேயொரு பிரச்சினை குறித்தோ அல்லது இந்தியர் நலம் சார்ந்த கொள்கை முன்மொழிவையோ அல்லது இந்திய சமுதாயம் அடைய வேண்டிய மாற்றம் குறித்தோ DHPP சார்பில் வாய்த் திறந்ததில்லை; மொத்தத்தில் சமூகக் கடமையில் இருந்து முழுமையாகத் தவறியபோதிலும், சொந்த மேளத்தை தனக்குத்தானே அடித்துககொள்ளும் நா.சுப்பிரமணியம், அரசியல் பாரபரியமிக்க மலேசிய இந்திய சமுதாயத்தை சிறுமைப்படுத்தி உள்ளதாக விவேகானந்தன் கொந்தளித்துள்ளார்.

2013-2018 காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தை ஆண்ட மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் பாஸ் கட்சியும் இடம்பெற்று இருந்தது. 2015 ஜூன் 16-இல் பாக்கத்தான் கூட்டணியுடன் முறுகல்நிலை ஏற்பட்டபோதும் அந்த நிலை தொடர்ந்தது. அதன் பிறகு 2020 முதல் 2022 நவம்பர் காலக்கட்டத்தில் மத்தியக் கூட்டரசிலும் பாஸ் கட்சி இடம்பெற்றிருந்தது. இந்த நேரத்தில் இந்திய சமுதாய நலம் சார்ந்து பாஸ் இந்தியர் ஆதரவுப் பேரவு ஒரேயொரு பிரச்சினையைக்கூட எழுப்பியதில்லை; அது இருந்த இடம் தெரியாத அளவிற்கு மூச்சுகூட விடாமல் இருந்தது என்று விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த காலக்கட்டத்தில் பாலசுப்பிரமணியனோ அல்லது DHPP-ஐச் சேர்ந்த வேறு எவருமோ சிலாங்கூர் அளவிலோ அல்லது தேசிய அளவிலோ அரசியல் ரீதியாக செயல்பட்டதற்கான சான்று கடுகளவும் இல்லை என்பதை தன்னால் உறுதியதாகவும் சவாலாகவும் சொல்லமுடியும். பாஸ் தலைமையிடம் இந்திய சமுதாய நலனுக்காக ஒரு சாதாரண தீர்மானத்தையோ, கொள்கை முடிவையோ முன்வைத்ததில்லை; காரணம், அதற்கான ஆற்றல், துணிவு, சமூகப் பார்வை என எதுவும் இவர்களிடம் இல்லை.

மந்திரி பெசாருக்கு ஆலோசகராக சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்களின் பங்களிப்பு சிறிய, மேலோட்டமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மட்டுமே உதவின என்றும் இந்திய சமூகத்தின் முறையான மற்றும் நீண்டகால பிரச்சினைகளை அவர்கள் முழுமையாக நிவர்த்தி செய்யத் தவறிவிட்டனர் என்றும் விவேகானந்தன் மேலும் வலியுறுத்தினார்..

கெடாவில் உள்ள அலோர் ஸ்டார் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான மதுரை வீரன் கோயில் இடிக்கப்பட்டபோது, இவர்களால் ஒன்றும் ஆகவில்லை என்பதை விவேக் மேற்கோள் காட்டியுள்ளர். அந்தக் கோயில் வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், 1900களின் முற்பகுதியில் மலாயாவிற்கு அழைத்து வரப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் வரலாற்றுச் சின்னமாகவும் இருந்தது. கெடாவை மற்ற முக்கிய நகரங்கள் மற்றும் மாநிலங்களுடன் இணைக்கும் ரயில் பாதைகளை உருவாக்குவதில் அந்தத் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர் – இது மலேசியாவின் ஆரம்பகால போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய சின்னமாக விளங்கியது.

“கெடா மாநில அரசு கோவிலை இடிக்க உத்தரவிட்டபோது, DHPP எங்கே பதுங்கி இருந்தது? கெடா எம்பிக்கு இந்திய ஆலோசகர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அப்போது எங்கே இருந்தனர்? முதுகெலும்பின்றி அமைதியாக இருந்த இவர்கள், மறைமுகமாக ஒத்துழைப்பும் தந்தனர். இந்த மண்ணின் மாற்றத்திற்கு அடித்தளமிட்ட சமூகத்தின் உணர்ச்சிப்பூர்வமான பற்றுதலைப் பற்றி சிறிதும் கவலைப்படாத இவர்கள், சிறிய வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அதன் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கோவிலின் பாதுகாப்பிற்காக வாதிட இவர்களுக்கு அடியோடு தைரியம் இல்லை” என்று விவேகானந்தன் பொங்கி இருக்கிறார்.

“உண்மை என்னவென்றால், இந்த ஆலோசகர்கள் வெறும் கைப்பாவையர்; அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் மக்களைக் கைவிட்டு, பட்டங்களையும் சலுகைகளையும் அனுபவிக்கும் அரசியல் பயனாளிகள். அவர்கள் இந்திய சமூகத்தின் அடித்தள போராட்டங்களிலிருந்து விலகி நின்றவர்கள்; இந்திய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையோ திறனோ இவர்களிடம் இல்லை”.

“இந்திய மக்களின் சார்பாகப் பேசுவதற்கான கொள்கை நுண்ணறிவு, வரலாற்றுப் புரிதல், தலைமைத்துவ பண்பு உள்ளிட்ட எதுவும் இல்லாத பாலசுப்பிரமணியம் போன்றவர்களிடம் இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் தகுதியும் பொறுப்பும் எள் முனையளவும் இல்லை. எனவே உங்கள் தோல்வியை நீங்களே பறைசாற்றிக் கொள்வதற்குப் பதிலாக, அமைதியாக இருப்பது சிறப்பு” என்று சொற்களால் சுழன்றடிக்கும் விவேகானந்தன், “பட்டங்களைத் தேடியலையும் வெற்றுக் குரல்களை விட சமூகமே சிறந்தது” என்றும் இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருக்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை