Thursday, April 23, 2026

முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்!உலகிற்கு அல்பேனியா முன்னோடி!!

அமைச்சர்களே எச்சரிக்கை; உங்கள் பணிக்கும் ஆபத்து நேர்ந்துவிட்டது. இது உங்கள் வீட்டு, எங்கள் வீட்டு சிக்கலல்ல; உலகளாவிய பெரும்போக்கு..

எங்கும் AI; எதிலும் AI என்று சொல்லும் அளவிற்கு உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் Artificial Intelligence-AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு நீக்கமற நிறைந்துள்லது.

இதேத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை உருவாக்கி இருக்கிறார் அல்பேனிய நாட்டின் பிரதமர் எடி ரமா(Edvin Kristaq Rama).

உலக அரசியல் அரங்கில் முதல் முறையாக செயல்படத் தொடங்கியுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு அமைச்சர் செய்யப்போகும் பணிகள் என்ன?. டியல்லா என்ற பெயருடைய இந்த ‘ஏஐ’ அமைச்சர் அண்மைக் காலமாக பல்வேறு பணிகளைச் செய்து வருகி(றது)றாராம்; சொல்கிறார் ரமா.

இதயமும் இரத்த ஓட்டமும் இல்லாத இந்த ஏஐ அமைச்சருக்கு தேவையானதெல்லாம் எந்த நேரமும் மின்சாரம்தான்; ஆனாலும் மதிநுட்பமும் நேர்மையும் அதிகம்.

மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் கிரேக்க நாட்டையொட்டி அமைந்துள்ள ஒரு சின்னஞ்சிறு நாடான அல்பேனியாவில்-தான் செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவை அமைச்சரவை உறுப்பினராக உருவாகியுள்ள இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது.

டயல்லா என்று அழைக்கப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு அமைச்சர் அல்பேனியாவில் நிகழும் நிறுவன மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்(ளது)ளார். பொது ஏலம் மற்றும் கொள்முதல் நடவடிக்கையை மேற்பார்வையிடவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது; அத்துடன், வர்த்தக நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் இந்த ஏற்பாடு என்று பிரதமர் எடி ரமா தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி வெற்றியடைந்தால், ஊழல் கடலில் ஆழமூழ்கி முத்தெடுக்கும் மெக்சிகோ போன்ற நாடுகளிலும் டயல்லா போன்ற ‘ஏஐ’ அமைச்சர்கள் உருவாகலாம்.

கடந்த மேத் திங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் எடி. ரமா, டியல்லாவை அமைச்சரவையின் புதிய உறுப்பினராக அறிமுகம் செய்தார். எனினும், இந்த முன்னெடுப்பு, அடையாள ரீதியானதுதானேத் தவிர, அதிகாரப்பூர்வமானது அல்ல. ஏனெனில் அல்பேனியாவின் அரசியல் சட்ட அமைப்பின்படி, அமைச்சர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

எனினும் ‘ஏஐ’ அமைச்சரால் கிடைக்கக்கூடிய நன்மை அதிகம் எனக் கூறப்படுகிறது. டியல்லா என்கிற பெயருக்கு அல்பேனிய மொழியில் சூரியன் என்று பொருளாம்.

இந்த ‘ஏஐ’ அமைச்சர், அரசாங்கத்தின் எந்தத் தகவலையும் கசியவிட மாட்டாராம். அவருக்கு இருக்கும் ஒரே அதிகாரப் பசி என்பது அவர் நுகர்கிற மின்சாரம் மட்டுமே. வேறு எந்த விதமான ஊழலும் அவரால் ஏற்படாது.

தன் அமைச்சரவையில், பொது கொள்முதலுக்கான அமைச்சராக டியல்லாவைச் சேர்த்தபோது பிரதமர் ரமாவின் மனதில் ஊழல் குறித்த அக்கறைதான் முதன்மையாக இருந்ததாம்.

டியல்லாவின் முக்கிய பங்கு, அல்பேனிய அரசு மேற்கொள்ளும் பொது ஒப்பந்தங்களில் ஏற்படும் ஊழலையும் லஞ்சத்தையும் அடியோடு ஒழித்து, 100% ஊழல் இல்லாத ஒரு நாடாக அல்பேனியா மாறுவதை உறுதி செய்வதுதான் என்கிறார் ரமா.

தன்னுடைய புதுமை ‘ஏஐ’ அமைச்சர் டியல்லாவைப் பற்றி மேலும் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் எடி ரமா, “நாங்கள் ஒரு நுட்பமான குழுவுடன் இணைந்து செயல்படுகிறோம்; இதில் அல்பேனியர்கள் மட்டுமல்ல; இன்னும் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்; பொது கொள்முதலில் முழுவதுமான ஏஐ மாடலைக் கொண்டுவர இந்தக் குழு, முழுவீச்சில் பணியாற்றி வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

“இதன் மூலம் பொது ஏலத்தில் இடைத்தரகர்கள் செல்வாக்கு செலுத்தும் சாத்தியத்தை தவிர்ப்பதுடன் நடைமுறையை துரிதப்படுத்தி திறம்பட செயல்பட முடியும்” என்றும் எடி நம்புகிறார்.

அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பிருந்தே டியல்லா அல்பேனியாவில் வேலை செய்து வருகிறார். ஏஐ சார்ந்த தொழில்நுட்ப உதவியாளராக செயல்பட்டு இருக்கிறார்; அவரின் முதற்கட்ட பணியாக விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பெற வழிகாட்டியதுதான்.

‘இ-அல்பேனியா’ தளத்தில் டியல்லா ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு உதவியிருப்பதாக பெருமிதப்படுகிறார் ரமா.

டியல்லாவின் புதிய பணிக்கான எதிர்வினைகள் எதிர்பார்த்ததைப் போல பலவாறாக இருந்தாலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி இதனை அபத்தமானது என்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் விமர்சித்துள்ளது.

ஆனால் சிலர் இம்முயற்சியை நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். தவிர, கொள்முதலில் வெளிப்படைத் தன்மையுடன் நம்பிக்கையையும் ஏற்படுத்தினால் ‘ஏஐ அமைச்சர்’ உபயோகமானதாக இருப்பார் என்று தெரிவித்தனர்.

Made with LogoLicious Add Your Logo App

லஞ்சத்தைக் குறைப்பதற்கு ஏஐ-யை பயன்படுத்தவுள்ள சாத்தியத்தையும் ஊழல் எதிர்ப்பு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏஐ அமைச்சர், ஒரு புதிய கருவிதான்; ஆனால் சரியான நிரலின்படி துல்லியமாக செயல்படும் பட்சத்தில், ஓர் ஒப்பந்தத்தை இணையத்தில் பதிவேற்றினால் ஒரு நிறுவனம் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை தெளிவாகவும் மிக நெருக்கமாகவும் பார்க்க முடியும்,” என்கிறார் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் கிழக்கு பால்கன்ஸ், ஊழல் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான பாடநூல் வல்லுநரான முனைவர் ஆண்டி ஹோஜஜ்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் அல்பேனியா ஈடுபட்டுள்ள தற்போதைய சூழலில், ஊழலைத் தடுப்பதற்காக மேற்கொண்டுள்ள இந்த புதுவகை முயற்சி, அல்பேனியாவிற்கு அணுகூலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, ஏஐ அமைச்சர் டியல்லாவின் பங்கு பெரும் உதவியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரமாவிடம் அதிகரித்துள்ளது.

டியல்லா தொடர்பான அண்மைய நிகழ்வுகளுக்குப் பின்னால் விளம்பர அம்சங்கள் இருப்பதை ரமா மறுக்கவில்லை. ஆனால், இதற்குப் பின்னால் தீவிரமான நோக்கம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்துகிறார்.

“இது அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களும் ஏனைய தேசிய முகமைகளின் பொறுப்பாளர்களும் புதுமையாகவும் நேர்மையாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்கிற அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த அமைச்சரிடமிருந்து நான் எதிர்பார்க்கும் மிகப்பெரிய பலன் அதுதான்,” என்கிறார் ரமா.

வேறு விதமாக சொல்வது என்றால், “அமைச்சர்களே, அல்பேனிய அமைச்சர்கள் மட்டுமல்ல; உலக நாடுகளின் அமைச்சர்களே, நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள்; உங்களின் பங்கை ஆற்ற ஆங்காங்கே ஏராளமான டியன்னாக்கள் உருவாகக்கூடும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை