Monday, April 20, 2026

மணவிழாவில் வாழ்த்திய ‘மாசு’: 23 ஆண்டுகளுக்குப்பின்,ஜப்பானுக்குச் செல்லும் மகனையும் வாழ்த்தினார்! முரசொலி முத்தையா பெருமிதம்!!

திராவிட இயக்கத்தின் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரிய இதழும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்தப் பிள்ளையுமான முரசொலி இதழின் செய்தியாளர் முத்தையாவின் திருமண விழாவிற்கு தலைமையேற்று, மணமக்களை வாயார மட்டுமல்ல, நெஞ்சாரவும் வாழ்த்தியவர் அந்நாளைய திமுக பிரமுகரும் இந்நாளைய அமைச்சருமான மா.சுப்பிரமனியன்.

அது, புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கிய காலக்கட்டத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சி!.

தமிழினத்தின் தலைநிலமாம் தமிழ்நாடு; அத்தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னை மாநகரின் 14 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான சைதாப்பேட்டை, ஒரு காலத்தில் கலைஞரின் வசம் இருந்தது.

திமுக வரலாற்றில் முதன் முதலாக 1957-இல் தேர்தல் களம் கண்டபொழுது, கலைஞர் நிற்க விரும்பிய நாகப்பட்டினம் சட்டன்றத் தொகுதியில், ‘நினைவில் வாழும்’ நாகூர் இ.எம். ஹனிஃபாவை நிறுத்திய பேரறிஞர் அண்ணா, கலைஞரை குளித்தலையில் குளிக்க வைத்தார்.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அந்த காலக்கட்டத்தில் திமுக-வை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்த தந்தை பெரியார், திமுக வேட்பாளரான ஹனிஃபாவை மட்டும் ஆதரித்து பிரச்சாரம் செய்ததாக நினைவு; காரணம், சிறுபான்மைச் சமுதாயத்தை, குறிப்பாக நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஹனிஃபா வென்று, மக்கள் பிரதிநிதியாகி, சட்டமன்றாத்திற்குச் செல்ல வேண்டும் என்பது தந்தை பெரியாரின் எண்ணமாக இருந்திருக்கக்கூடும்.

தவிர, “டேய் கறுப்பா?”, “வாடா கறுப்பா!” என்றெல்லாம் ஹனிஃபாவைக் காணும்பொழுதெல்லாம் வாஞ்சையுடன் அழைத்து தன் அருகில் அமரவைத்து, முதுகில் செல்லமாகத் தட்டிக் கொடுத்து, அனிஃபாமீது தனி அன்பை பொழிந்தவர் தந்தை பெரியார்.

ஆனாலும், அந்தத் தேர்தலில் என்.எஸ். இராமலிங்கம் என்ற ஒன்றுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்தான் வென்றார். திமுக சார்பில் வென்ற அண்ணா, நாவலர், கலைஞர் உள்ளிட்ட 15 பேரில் ஒருவராக அனிஃபா இடம்பெறவில்லை.

குளித்தலையில் அற்புதமாக நீராடி கரைசேர்ந்த கலைஞரை, அடுத்த முறை(1962 பொதுத் தேர்தலில்) தஞ்சை பக்கம் அனுப்பினார் அண்ணா; அங்கும் பரிசுத்த நாடார் என்னும் உடையாரின் இடைவாரைப் பிடிங்கிக் கொண்டு சென்னைப் பட்டணம் வந்த கலைஞர், அதை அண்ணாவிடம் ஒப்படைத்தார்.

1967-இல் ஆட்சி வசமாகும் என்பதை அணுமானித்த அரசியல் மேதை அண்ணா, தேர்தல் செலவுக்காக கைகளை பிசைந்து கொண்டு நின்றது, கலைஞரிடம்தான். வெட்டி வரச் சொன்னால், தேர்தல் களத்தில் கட்டிவரக் கூடிய அரசியல் வித்தகர் கலைஞர் என்பதை அறியாதவரா என்ன அண்ணா?

அண்ணா எதிர்பார்த்த 10 இலட்ச ரூபாய் நிதியை விஞ்சி, 11 இலட்சமாகத் திரட்டித் தந்த கலைஞரை, 1967இல் அண்ணா நிறுத்திய தொகுதி, சைதாப்பேட்டை.

அப்போது, திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த அண்ணா, சென்னை மண்டலத்தில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வாசித்தபோது, சைதாப்பேட்டை என்று அறிவித்துவிட்டு, சற்று நேரம் இடைவெளிவிட்டு, ‘வேட்பாளர் 11 இலட்சம்’ என்று குறிப்பிட்டபொழுது, எழுந்த கரவொலி அடங்க வெகுநேரமானது.

அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றத் தொகுதியை கடந்த இரு தவணைகளாக வசப்படுத்தி வைத்திருப்பவர் தமிழ் நாட்டரசின் சுகாதார – மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர்.

2006-இல் சென்னை மாநகர மேயராகுமுன், மண்டல அளவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு, இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கி வந்தவர் மா.சுப்பிரமணியன்.

அந்தக் காலக்கட்டத்தில்தான், முத்தையா-மீராதேவி இணையரின் திருமணத்தை 5.9.2003 அன்று, சைதை, தாண்டர் நகரில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் தன்னுடைய தலைமையில் நடைபெற்றதை பசுமை குன்றாமல் இன்று நினைவுகூர்ந்தார் ‘மாசு’!

தொடர்ந்து இந்த திராவிட கொள்கைசார் இணையரின் அன்பு மகன் கார்த்தி என்ற தமிழ்மறையின் முதலாம் பிறந்தநாள் விழா 21.5.2005இல்
தாண்டர் நகரில் இருந்த அவர்களின் இல்லத்தில் நடைபெற்றபோது,
அவ்விழாவிலும் தான் கலந்து கொண்டு, குழந்தை கார்த்தியை வாழ்த்தியதை நினைவுகூர்ந்தபொழுது, முத்தையா-மீராதேவி இணையர் அடைந்த இன்பத்திற்கு எல்லை இல்லை.

அந்தக் குழந்தை கார்த்தி வளர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ. என்னும் உயர்க்கல்வி பெற்று, பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற Campus Interview என்னும் நேர்காணலில் தேர்ச்சிபெற்று, அதன் அடிப்படையில் ஜப்பான் நாட்டின் – தோக்கியோ மாநகரில் உள்ள Third Wave Corporation என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் செய்யறிவு மேம்பாட்டாளர்-‘AI Developer’ என்னும் உயரிய பணி வாய்ப்பிற்கான சான்றிதழுடன், கழகக் குடும்பத்திலிருந்து சீரிளைஞராக வளர்ந்து நிற்பதைக் காணுங்கால் தானடையும் மகிழ்ச்சிக்கு அளவேதென்று, சம்பந்தப்பட்ட இளைஞரின் பெற்றோரான முத்தையா-மீராதேவி இணையரைப் பார்த்து ‘மாசு’ கேட்டபொழுது, முரசொலி முத்தையாவின் கண்ணோரம் நீர் ததும்பியது.

“2003ல் நடைபெற்ற அவர்களின் திருமணத்தில் நான் கலந்து கொண்டு வாழ்த்தியது; 2005ல் குழந்தை கார்த்தியின் பிறந்தநாளில் கலந்து கொண்டு வாழ்த்தியது ஆகிய இனிய நினைவுகளுடன், இன்று பணி கிடைக்கப் பெற்று ஜப்பான் செல்லும் செல்வன் கார்த்தியை வாழ்த்துகிறேன்”.

“காலம்மும் காலத்திற்கு இணையாக பூமியும் எத்துணை வேகத்தில் உருண்டோடுகின்றன என்று நினைக்கும்போது சற்று மலைப்பாகத்தான் இருக்கிறது” என்றார் மாசு.

ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு; இந்த வெள்ளி விழா நட்புக் குடும்பத்தின் மாறாத அன்பையும் இத்தம்பதியரின் செல்வன் கார்த்தியையும் இவ்வேளையில் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் ! நெஞ்சம் நெகிழ்கிறேன் என்று மேலும் குறிப்பிட்டார் மாமி. மாசு.!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை