
கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் ஆலயத்திற்கு நிலப்பட்டாவைப் பெற்றுத்தந்த பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேசுவரனுக்கு ஆலயத் தலைவர் சுரேன் சந்திரசேகர், அவரின் தலைமையிலான ஆலயப் பொறுப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதன் தொடர்பில், நேற்று செப்டம்பர் 25 வியாழக்கிழமை முன்னிரவில் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்பொழுது, பட்டாப் பத்திரத்தை ஒப்படைத்த பிரபாகரன், இதுகுறித்த விவரத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்த ஆலயத்தின் நீண்டகால பக்தர் என்னும் முறையிலும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் எல்லாவற்றுக்கும் மேலாக, பத்து நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் எதிர்நோக்கி இருக்கும் நில சிக்கலைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற முனைப்பிலும் தொடர்ந்து செயல்படுவதாகத் தெரிவித்த பிரபாகரன்,
அத்தகைய முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுவென்றுத் தெரிவித்தார்.
“முடியாதது என்று எதுவும் இல்லை. முறையாக முயற்சித்தால், அதுவும் ஆன்மிகப் பணியென்றால் இறைவன் சித்தத்தால் எல்லாமும் ஈடேறும் என்பதற்குச் சாட்சியாக இந்த ஆலயத்தின் நிலப்பட்டா, அதுவும் அரசிதழ் பதிவுடன் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்கு உரியது” என்று தெரிவித்தார்.

இந்த இடம் அரச நிலம் என்பதால் சுலபமாக பட்டா கிடைத்தது; ஒருவேளை தனியார் நிலமாக இருந்திருந்தால் இன்னும் தாமதப்பட்டிருக்கலாம்.
இந்த ஆலயத்தில் அண்மை ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கான பக்தர்களுடன் நடைபெற்ற திருவிழாக்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் கலந்து கொண்டது உள்ளிட்ட அனைத்துக்குமான சான்றுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்ததைக் கண்டு மனம் நிறைவு தெரிவித்தனர்.
ஒரேயொரு அம்சம் மட்டும் சற்று தாமதப்படுத்தியது. இந்த ஆலயத்திற்கு மேலே இலகு ரயில்(எல்.ஆர்.டி.) தண்டவாளம் இருப்பதால் அதனை நிருவகிக்கும் PRASARANA நிறுவனத்தின் சார்பில் உடனே ஒப்புதல் கிடைக்கவில்லை. அவர்கள் தயக்கம் காட்டியபோது, அந்தத் தரப்பினரிடமும் தேவையான ஆவணங்களை ஒப்படைத்து அனுமதிபெற கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுவிட்டது.

எல்லாவாற்றுக்கும் மேலாக, ஆலய நிருவாகமும் குறிப்பாகத் தலைவர் சுரேன் எல்லாப் பத்திரங்களையும் ஆவணப்படுத்தி இருந்தது நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது என்றெல்லாம் பிரபாகரன் பேசினார்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆலயத்திற்கான நிலப்பட்டாவைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், தொகுதி எம்பி பிரபாகரன் மேற்கொண்ட பெரும் முயற்சியாலும் அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும் இந்த வெற்றியை அடைந்திருக்கிறோம் என்று சுரேன் சொன்னார்.
குறிப்பாக, ஆலயத்தை முற்றும் முழுவதுமாக மாற்றியமைத்து முழு அளவில் திருப்பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்தத் தருணத்தில் இப்படிப்பட்ட அடைவுநிலைக்கு அதுவும் அம்பாளின் பெயரிலேயே பட்டா கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்கு உரியதென்று சுரேன் மேலும் தெரிவித்தார்.


