
-நக்கீரன்
கோலாலம்பூர், நவ. 27:
தன்னைப் போன்று தனித்து வாழும் பெண்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் கல்வி நிதிப் பிரச்சினைக்கு சமூகம் ஆதரவுக் கரம் நீட்டுவது ஆறுதல் தறுகிறது என்று இந்திரா காந்தி தெரிவித்தார்.
பக்கசார்பான மதமாற்ற சிக்கலால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளானவர் திருமதி இந்திரா காந்தி. பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியரான இவரின் மகன் கரன் தினேஷ் மேற்கொண்டுவரும் சட்டக் கல்விக்காக சமூக ஆர்வலர்கள் நேற்று வெ.10ஆயிரம் உதவி நிதி அளித்தனர்.
மூன்றாவது பிள்ளையான மகள் பிரசன்னா தீக்ட்சாவுடன் முன்னாள் கணவர் பத்மநாதன் என்னும் முகமட் ரிட்சுவான் கடந்த 16ஆண்டுகளாக மாயமாகிவிட்ட நிலையில், முதல் பிள்ளையான மகள் தேவி தர்ஷினியை எப்படியோ சமாளித்து ‘Data Analysis’ துறையில் படிக்கவைத்து பட்டதாரியாக்கி விட்டார்.
அடுத்தப் பிள்ளையான மகன், கரன் தினேஷ், மலாக்கா எம்.எம்.யூ. பல்கலைக்கழகத்தில் 2-ஆம் ஆண்டாக சட்டக் கல்வியை மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்பில் நிதிச் சிக்கலை எதிர்நோக்கிவரும் இந்திரா காந்திக்கு உதவிக்கரம் நீட்டிய மலேசிய இந்திய பட்டதாரி சங்கத்தின் சார்பில் வெ.5ஆயிரம் நிதி இன்று காலையில் வழங்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் டாக்டர் மு.சுப்பிரமணியன், பொருளாளர் டாக்டர் ஆர்.எம்.கோவிந்தன் ஆகியோர் முன்னெடுப்பில் கட்டுமான குத்தகையாளர் டத்தோஸ்ரீ ராஜ் ஐயாயிர வெள்ளிக்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து, காவல்துறையைச் சேர்ந்த மூத்த உதவி ஆணையர் டத்தோ ஷாண், கரன் தினேஷின் சட்டக் கல்விக்காக மூவாயிரம் வெள்ளி வழங்குவதாக அறிவித்தார்.
மேலும் ‘ கோப்பியோ’ அமைப்பின் சார்பில் எஸ். குணசேகரன் இரண்டாயிரம் வெள்ளி அளிப்பதாக அறிவித்தார். இவரும் பட்டதாரி சங்கத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆர்வலரும் வழக்கறிஞருமான கணேசனும் உடன் இருந்தார்.
தன் மகனின் சட்டக்கல்விக்காக ஐயாயிரம் வெள்ளி அளிப்பதாகத் தெரிவித்துவிட்டு, 10ஆயிரம் வெள்ளி வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திரா காந்தி தெரிவித்தார்.


