
கோலாலம்பூர் நவ 28-
திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய சமயமல்லாத வழிபாட்டுத் தலங்களின் வழிகாட்டுதல் சட்டத்தை திருத்துவது குறித்த சட்ட முன்வரைவை வீடமைப்பு ஊராட்சி மன்ற துணை அமைச்சர் சமர்பித்துள்ளார். இஸ்லாமிய சமயமல்லாத மற்ற சமய வழிபாட்டுத்தலங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரே அமைப்பிற்கு மட்டுமே நிதி வழங்கப்படாமல் இருக்க அமைச்சு என்னத் திட்டம் கொண்டுள்ளது என்று மாரான் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது அதற்கு பல விளக்கங்களுடன் துணை அமைச்சர் கொடுத்திருந்த பதிலில் இஸ்லாம் அல்லாத மற்ற சமய அமைப்புகள் ஒருமுறை நிதி பெற்றால் மூன்று வருட காலப்பகுதிக்குள் மீண்டும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதைத் தடைசெய்யும், திருத்தத்தை மசோதா கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருப்பது இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடையே குறிப்பாக இந்து-சைவ சமய மக்களிடையே பெரும் குழப்பத்தையும அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தான்ஸ்ரீ குமரன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கவலை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்நாட்டிலுள்ள இந்து-சைவ சமயம் சார்ந்த அமைப்புகள் சட்டவரைவின் முழு விவரங்களைப் பெற்று தங்கள் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து அமைச்சரை நேரடியாக கண்டுபேசி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மூன்று ஆண்டுகள் காத்திருப்பு என்று ஒரு கால கட்டத்தை நிர்ணயயம் செய்வது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. அமைச்சின் நோக்கம் எதுவாக இருப்பினும் காலவோட்டத்தில் விண்ணப்பங்களை பரிசீலிப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று யாரும் உறுதிக்கூற முடியாது.. உதவி என்பது காலத்தை முன்னிறுத்தி வழங்குவதில்லை. தேவையை அனுசரித்து கொடுப்பது. முதல் ஆண்டில் ஆலயத்திற்கு ஐயாயிரம் நிதி பெறும் ஆலயத்தின் கூரை புயல் மழை காரணமாக் மறு ஆண்டில் பழுதடைந்துவிடுகின்றன. அதனை சீரமிக்கும் பணிக்கான உதவிநிதிக்கு விண்ணப்பிக்க இரண்டு ஆண்டுகள் காத்திருப்பு என்பது ஏற்புடையதல்ல. இது, சமயம் சார்ந்த உணர்ச்சியைத் தூண்டும் பிரச்சினையாக இருப்பதால் திருத்தங்கள் சட்டமாகுமுன் சர்வசமய மன்றத்தினருடன் கலந்துபேசி இதற்கு நல்ல முடிவைக் காணவேண்டுமென்று துணை அமைச்சரை தான்ஸ்ரீ குமரன் கேட்டுக்கொண்டார்.


