Monday, May 25, 2026

டொனால்ட் டிரம்ப் வருகை: கருத்து வேறுபாடு என்பது தேசத்துரோகம் அல்ல! -பிரதமருக்கு பொன்.வேதமூர்த்தி கடிதம்

கோலாலம்பூர், அக்.03:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஆசியான் உச்சிநிலை மாநாட்டிற்கு அழைக்கும் முடிவு மலேசியர்களிடையே மிகுந்த ஆட்சேபனையை ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய அளவில் பிரதிபலிக்கக்கூடிய இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து அதன் அடிப்படையில் பிரதமர் முடிவெடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று ஜனநாயகத்தின் உச்ச அமைப்பான நாடாளுமன்ற நடைமுறையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட குடிமகன் என்னும் முறையில் தெரிவிப்பதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் என்பது ஜனநாயக நடைமுறையின் ஓர் அங்கம் மட்டுமல்ல; அது ஜனநாயகத்தின் இதயத்துடிப்புமாகும்; இங்கு உண்மை என்பது, விவாதத்தின் மூலம் சோதிக்கப்படுகிறது; “ஒரு மனிதனின் மதிப்பு அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஏற்ப உள்ளது” என்று ஜான் ஸ்டூவர்ட் மில் குறிப்பிட்டதைப் போல, நம் நாடாளுமன்றத்தின் மதிப்பு, மக்களுக்கு மிகவும் முக்கியமான விவகாரங்கள் குறித்து சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் விவாதிக்கும் துணிவில் உள்ளது.

நாடாளுமன்ற விவாதம், மலேசியர்களின் ஐயத்தைப் போக்க உதவும்; அரசாங்கமும் தன் நிலையை நியாயப்படுத்த முடியும்; அரசின் பலவீனம் குறித்து எடுத்துரைக்க எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு ஏற்படும்; மொத்தத்தில் ஜனநாயக விழுமியம் மேம்படும் என்று இதன் தொடர்பில் இன்று பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நாட்டின் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மடாணி முழக்கத்தை முன்வைத்து நீதி, இரக்கம், அனைத்திற்கும் பொறுப்பேற்பது பற்றி யெல்லாம் அடிக்கடி பேசும் பிரதமர், ஒரு திறந்த விவாதத்தை ஏற்றுக்கொள்வதன்மூலம், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்; அதைப்போல அரசத் தரப்பு- எதிரணித் ஆகிய இரு சாராரும் சுதந்திரமாகப் பேசுவதை நாடாளுமன்றத்தில் அனுமதித்தால், நாடாளுமன்ற ஜனநாயகம் மேலும் மதிக்கப்படும்.

2025 அக்டோபர் 6இல் கூட இருக்கின்ற நாடாளுமன்றம், ஒரு உறுதியான செய்தியுடன் தொடங்கட்டும்; வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் மலேசியாவை ஆளும் பிரதமர், நாடாளுமன்ற விவாதத்திற்கு அஞ்சாதவர் என்ற நிலை உருவாகட்டும்.

கேள்வி கேட்பது, சவால் விடுவது மற்றும் உரையாடல் மூலம் அரசாங்கத்தை வலுப்படுத்துவது எல்லாம் மக்களின் உரிமை. எனவே, இந்த விவாதத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு பிரதமரை மரியாதையுடன் கேட்டுக்கொள்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, “ஜனநாயகத்தில், கருத்து வேறுபாடு என்பது தேசத்துரோகம் அல்ல; அது தேசபக்தியின் மிகஉயர்ந்த வடிவம்.” என்னும் உண்மையை நம் நாடாளுமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை