Sunday, April 19, 2026

ஆலய மானிய வழிகாட்டு முறையில் மத்திய அரசு திருத்தம்-சரவணன் சாடல்!

கோலாலம்பூர், நவ.28:
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு அரசு வழங்கும் உதவி நிதிக்கான வழிகாட்டு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் ஒருமுறை அத்தகைய மானியத்தைப் பெற்றுவிட்டால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு எவ்வித நிதி உதவியும் அளிக்கப்படாது என்பது அத்தகைய மாற்றங்களில் ஒன்று என்றும் இவ்வாரத் தொடக்கத்தில் ஊராட்சித் துறை அமைச்சகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு ம.இ.கா. தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில், நேற்று ஓர் ஆங்கில இணைய ஊடகத்திற்கு அளித்த செவ்வியின்போது, இந்த நடவடிக்கையால் அரசுக்கான ஆதரவு, குறிப்பாக இந்திய சமுதாயத்தில் மங்கிப்போகும்; முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை அவமதிக்கும் இச்செயல், “முட்டாள்தனமான, நியாயமற்ற, பொருத்தமற்றப் போக்கு” என்று கடுந்தொனியில் அவர் சாடியிருக்கிறார்.

கொரோனா பருவத்தில் தத்தளிப்பு நிலைக்கு ஆளான ஆலய நிருவாகங்கள் தற்பொழுது மெல்லமாக மீண்டுவரும் நிலையில், ஏராளமான ஆலயங்கள் இன்னமும் நிதிச் சிக்கலால் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு கைவிரித்தால், பழுதுபார்த்தல், பராமரித்தல், அவசர செலவு போன்றவற்றுக்கு ஆலய நிர்வாகத்தினர் என்ன செய்வார்கள் என்பதை இந்த அரசு நடுநிலையோடு எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டது.

அரசிடம் இருந்து உதவிநிதியைப் பெற்ற ஆலய நிருவாகத்தினர் அதை சீரான முறையில் பயன்படுத்துகிறார்களா என்றும் சமய-சமூக மேம்பாட்டிற்காக செலவழிக்கிறார்களா என்றும் கண்காணித்தால், அது சரியானது; ஏதும் முறைமீறல் நிகழ்ந்து, அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதுவும் ஏற்கக்கூடியது.

இதன்தொடர்பில் மேலும் கருத்துரைத்தபோது, “ஆலயங்களுக்கு நிதியை வழங்குமுன், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து கண்காணிப்பதற்கு ஏதுவாக, மத்தியக் கூட்டரசு பொருத்தமான குழுக்களை நியமிக்க வேண்டும்” என்று பரிந்துரையும் செய்துள்ளார்.

மக்களின் அன்றாட வாழ்வில் நன்றாக ஐக்கியப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களுடன் அரசு அணுக்கமாக நடந்துகொள்ள வேண்டுமே அன்றி, இவ்வாறு நெருக்கடி கொடுக்கும் போக்கைத் தவிர்க்க வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் தொடர் மக்கள் பிரதிநிதியுமான டத்தோஸ்ரீ மு.சரவணன் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை